×

இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடிய 350 காளைகள் மாடுகள் முட்டி 33 பேர் காயம் அணைக்கட்டு, கே.வி.குப்பம் அருகே மாடு விடும் திருவிழா

அணைக்கட்டு, பிப்.27: அணைக்கட்டு, கே.வி.குப்பம் அருகே நேற்று நடந்த மாடு விடும் விழாவில் 350 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. மேலும், விழாவில் மாடுகள் முட்டி 33 பேர் காயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் கிராமத்தில் இருப்பாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 34ம் ஆண்டு மாடு விடும் திருவிழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன், முன்னாள் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ஆர்டிஓ கவிதா தலைமையில் தாசில்தார் வேண்டா, விழாக்குழுவினர் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதும் விழா தொடங்கியது.

இதில், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 150 காளைகள் பங்கேற்றன. அப்போது, தெருவில் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் காளைகள் வாடிவாசலில் இருந்து இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. அதிவேகமாக ஓடி குறைந்த வினாடிகளில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ₹1,00,001, இரண்டாம் பரிசாக ₹81,001, மூன்றாம் பரிசாக ₹71,001 உட்பட மொத்தம் 55 பரிசுகள் வழங்கப்பட்டன.
சீறிப்பாய்ந்து ஓடிய மாடுகள் முட்டியதில் காயம் அடைந்த 13 பேருக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் கிராமத்தில் நேற்று நடந்த மாடு விழாவின்போது வாகனங்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என விழாக்குழுவினர் மைக்கில் தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். ஆனாலும், நேற்று மட்டும் 6 பைக்குகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அடுத்த கீழ்விலாச்சூர் கிராமத்தில் 149ம் ஆண்டு வேம்புலியம்மன் திருவிழாவை முன்னிட்டு மாடு விடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாடுகளில் பரிசோதனைக்கு பிறகு 20 மாடுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. விழா தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ₹85 ஆயிரம், இரண்டாம் பரிசாக ₹65 ஆயிரம், மூன்றாம் பரிசாக ₹50 ஆயிரம் என மொத்தம் 78 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த 5 காளைகளை தேர்வு செய்து அதன் உரிமையாளர்களுக்கு ஆறுதல் பரிசாக உயிருடன் கோழியும், 750 மில்லியுடன் மதுபாட்டிலும் வழங்கப்பட்டது. இதனால் காளை உரிமையாளர்கள் உற்சாகத்துடன் திரும்பிச்சென்றனர். விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய மாடுகள் முட்டியதில் 14 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், படுகாயம் அடைந்த 6 பேர் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், விழாவில் பங்கேற்ற மாடுகளில் 4 மாடுகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

The post இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடிய 350 காளைகள் மாடுகள் முட்டி 33 பேர் காயம் அணைக்கட்டு, கே.வி.குப்பம் அருகே மாடு விடும் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Damkatu ,Damkatu, KV Kuppam ,Vellore district ,Eeripudhur village ,KV ,Kuppam ,Dinakaran ,
× RELATED அணைக்கட்டு அருகே பட்டப்பகலில்...