×

பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு; தமாகா தலைமை நிலைய செயலாளர் கட்சியிலிருந்து அதிரடியாக விலகினார்: வாசனுக்கு பரபரப்பு கடிதம்

சென்னை: பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா தலைமை நிலைய செயலாளர் டி.என்.அசோகன் கட்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார். அவர் ஜி.கே.வாசனுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன், தமாகா கூட்டணி அமைப்பதாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜி.கே.வாசன் நேற்று அறிவித்தார். பாஜ கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது. பாஜவுடன் தமாகா கூட்டணி அமைத்ததற்கு காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். பாஜவுடன் கூட்டணி வைத்ததால் மூப்பனாரின் ஆன்மா ஜி.கே.வாசனை மன்னிக்காது என்று காட்டமாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜவுடன் கூட்டணி அமைத்ததற்கு தமாகாவுக்கு உள்ளேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமாகாவின் தலைமை நிலைய செயலாளர் டி.கே.அசோகன், ஜி.கே.வாசனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகாவில் இருந்து வெளியேறி உள்ளார்.

இதுதொடர்பாக தமாகா தலைமை நிலைய செயலாளர் டி.கே.அசோகன், ஜி.கே.வாசனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவன். என் தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகி, 1980ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்று வெற்றி வாய்பை இழந்தவர். அவரை தொடர்ந்து நானும் என்னை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்துள்ளேன். 1996ல் மறைந்த மக்கள் தலைவர் ஐயா மூப்பனார் எடுத்த அரசியல் ரீதியான முடிவை அன்று ஏற்றுக் கொண்டு அவருடன் தமிழ் மாநில காங்கிரசில் பயணித்தேன். அதில் மாநில பொதுக்குழு மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன்.

அதேபோல அவருடைய மறைவுக்கு பின் அவருடைய புதல்வராகிய தங்களின் தலைமையை ஏற்று தங்களின் மேலான தலைமையின் கீழ் தலைமை நிலைய செயலாளராக இன்று வரை பணியாற்றி வந்துள்ளேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாங்கள் எடுத்துள்ள பாஜ கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தங்களின் மேலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று முதல் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதேபோல தமாகாவில் உள்ள பல முக்கிய தலைவர்களும் கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் யார், யார் வெளியேற போகிறார்கள் என்ற விவரம் தெரியவரும்.

The post பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு; தமாகா தலைமை நிலைய செயலாளர் கட்சியிலிருந்து அதிரடியாக விலகினார்: வாசனுக்கு பரபரப்பு கடிதம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamaga Head Office ,Quits Party ,Wasan ,CHENNAI ,Thamaka ,T.N. Asokan ,GK ,Vasan ,GK Vasan ,Dinakaran ,
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...