×

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என 300 பேரிடம் ரூ.15 கோடி மோசடி: 4 பேர் கைது

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி 300 பேரிடம் ரூ.15 கோடி பெற்று ஏமாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மணலி கீழ்கண்டை வீதி பெரியதோப்பு கோயில் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கடந்த 2022ம் ஆண்டு, கிண்டி ஈக்காட்டுதாங்கலில் அன்னை கேபிட்டல் சொல்யூசன்ஸ், அன்னை இன்போ சாப்ட் சொல்யூசன்ஸ், அன்னை அகாடமி பிரைவேட் லிமிடேட் மற்றும் தமிழ் அன்னை ஹாலிடஸ் லிமிடெட் ஆகிய பெயர்களில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்ததது.

இந்த நிறுவனத்தை நடத்தி வந்த தினேஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள், இந்த 4 ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக விளம்பரம் செய்து, ஆசை வார்த்தைகள் கூறினர். இதை நம்பிய என்னிடமும், என்னை போல பலரிடம் இருந்தும் ரூ.88,10,000 வரை முதலீடாக பெற்றனர். ஆனால், சொன்னபடி லாப பணம் கொடுக்கவில்லை. இதனால், முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டபோது, திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவில் (EDF-1) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஈக்காட்டுத்தாங்கலில் அன்னை கேப்பிட்டல் சொல்யூசன்ஸ், அன்னை இன்போ சாப்ட் சொல்யூசன்ஸ், அன்னை அகாடமி பிரைவேட் லிமிடேட் மற்றும் தமிழ் அன்னை ஹாலிடஸ் லிமிடேட் ஆகிய பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்த நபர்கள், வாடிக்கையாளர்களிடம் ரூ.1,00,000 முதலீடு செய்தால் அந்த பணத்தை ஆன்லைனில் டிரேடிங் செய்து மாதம் ரூ.17,100 வீதம் 12 மாதங்கள் லாப பணமாக கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியதும், இதை நம்பிய 300 பேரிடம் இருந்து ரூ.15 கோடிக்கு மேல் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னையை சேர்ந்த தினேஷ் குமார் (37), பிரேம் கிருபால் (38), திலீப் குமார் (41), அருண் குமார் (40), ஆகியோரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இதுபோன்ற கவர்ச்சிகரமான போலி விளம்பரங்களை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என 300 பேரிடம் ரூ.15 கோடி மோசடி: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Balaji ,Periyatoppu Koil Street, Kilikandai Road, Chennai, Manali ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட...