×

ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் நீதி சட்டங்கள் நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்: ‘ஹிட் அண்ட் ரன்’ விவகாரத்திற்கு மட்டும் விலக்கு

 

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் நீதி சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவைகளுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்சியா, பாரதிய நியாய சுரக்ஷா சன்ஹிதா என 3 புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து விட்டார்.

இந்நிலையில், புதிய 3 குற்றவியல் நீதி சட்டங்களும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு அரசாணை நேற்று வெளியிட்டது. இதில் ஹிட் அண் ரன் விவகாரத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 106 (2)ன்படி, கவனக்குறைவாகவும், விரைவாகவும் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துபவர், சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீஸ் அல்லது கலெக்டரிடம் தகவல் தெரிவிக்காமல் தப்பிக்க நினைத்தால் 10 ஆண்டு சிறை மற்றும் அபராம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசுடன் ஆலோசித்த பின்னரே இச்சட்டப்பிரிவை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

தேச துரோகம் ஒரு குற்றமாக கருதப்படுவது நீக்கப்பட்டு, ‘அரசுக்கு எதிரான குற்றங்கள்’ என்ற தலைப்பில் புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாச வேலைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் மற்றும் இறையாண்மை, தேச ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களை பாரதிய நியாய சன்ஹிதா பட்டியலிடுகிறது. ராஜ துரோகம் என்கிற வார்த்தை தேச துரோகம் என மாற்றப்பட்டுள்ளது. கொலை (புதிய பிரிவு 101), ஏமாற்றுதல் (316), சட்டவிரோதமாக கூடுதல் (187), அவதூறு (354), கூட்டு பலாத்காரம் (63, 64, 70) என பல்வேறு சட்டப்பிரிவுகளின் எண்களும் மாற்றப்பட்டுள்ளன.

The post ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் நீதி சட்டங்கள் நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்: ‘ஹிட் அண்ட் ரன்’ விவகாரத்திற்கு மட்டும் விலக்கு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Government ,Parliament ,India ,Dinakaran ,
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...