×

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களில் 11 சேமிப்பு கிடங்குகள்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

புதுடெல்லி: நாட்டில் 11 மாநிலங்களில் 11 தானிய சேமிப்பு கிடங்குகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ரூ.1.25லட்சம் கோடி முதலீட்டில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களில் உள்ள தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் 11 தானிய சேமிப்பு கிடங்குகளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்தார்.

பிற விவசாய உள்கட்டமைப்புக்களை நிர்மாணிப்பதற்காக நாடு முழுவதும் கூடுதலாக 500 வேளாண் கடன் சங்கங்கள் அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும் 18000 வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘‘நமது விவசாயிகளுக்காக உலகின் மிகப்பெரிய சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிடங்குகள் கட்டப்படும். நாட்டில் சேமிப்பு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஏற்கனவே இருந்த அரசுகள் இந்த பிரச்னையில் சரியான கவனத்தை செலுத்தவில்லை. ஆனால் இன்று தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மூலமாக இந்த பிரச்னை தீர்க்கப்படுகின்றது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் கூட்டுறவு துறையில் ஆயிரக்கணக்கான கிடங்குகளை நிர்மாணிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 700லட்சம் டன் சேமிப்பு திறன் உருவாக்கப்படும்” என்றார்.

The post உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களில் 11 சேமிப்பு கிடங்குகள்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,New Delhi ,Bharat ,Mandapam ,Delhi ,Dinakaran ,
× RELATED நடைபெறும் மக்களவை தேர்தலில் சாதனை...