×

ஈரோடு அருகே பட்டியலின இளைஞர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது..!!

ஈரோடு: ஈரோடு அருகே பட்டியலின இளைஞர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி கவின்குமார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரசலூர் பேரூராட்சியுடைய 6வது வார்டில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கவின் குமார். இவர் அதற்கு பிறகு பாஜகவில் இணைந்தார். அங்கு பாஜக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குள்ளரங்கன்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ரமணி சந்திரன் அந்த பகுதியில் இருக்கக்கூடிய கழிவு நீர் பிரச்சனை தொடர்பாக கவுன்சிலரின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கவின் குமாரின் மனைவி செல்போனில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரமணிசந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவின் குமார் தனது நண்பர்கள் மூன்று பேரை அழைத்துக்கொண்டு ரமணிசந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டிலிருந்த ரமணிசந்திரன் மற்றும் அவரது தாயார் ஆகியோரை கடுமையாக தாக்கியத்துடன் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து உதைத்து சேதப்படுத்தினர். இதில் காயமடைந்த கோகிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் அரச்சலூர் போலீசார் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குப்பதிவை அறிந்த கவின் குமார் உள்ளிட்ட 4 பேரும் தலைமறைவாகினர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த 4 பேரையும் இன்று அரச்சலூர் போலீசார் கைது செய்தனர். கவுன்சிலர் கவின் குமார், குமார் அவருடைய நண்பர்கள் பிரபு, பரமேஸ்வரன் ஆகிய நான்கு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

The post ஈரோடு அருகே பட்டியலின இளைஞர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Erode ,Gavinkumar ,Kavin Kumar ,6th Ward ,Arasalur ,Dinakaran ,
× RELATED வாழ்நாள் முழுவதும் வழக்குபோட்டு...