×

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமம் சஸ்பெண்ட்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்படப் போவதில்லை

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதிக கட்டண வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்துமாறு அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அபராதம் மட்டும் விதிக்கப்பகிறது. தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்படப் போவதில்லை. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும். தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால் உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

The post அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமம் சஸ்பெண்ட்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்படப் போவதில்லை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu ,Tamilnadu government ,
× RELATED ‘கள்’ விற்பனைக்கு விதிக்கப்பட்ட...