×

கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் எஸ்ஐ தம்பதிக்கு சரமாரி அடி உதை: இன்ஸ்பெக்டர்கள் மகன்களிடம் போலீசார் விசாரணை

சென்னை: கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் எஸ்ஐ தம்பதியை சரமாரியாக தாக்கிய இன்ஸ்பெக்டர்கள் மகன்கள் மற்றும் அவர்களது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் லூதர்ஸ் கார்டன் பகுதியில் உள்ள உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் தங்கமாதவன்(36). இவர் திருமங்கலம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு பணி முடிந்து போதையில் அவரது பைக்கில் வீட்டிற்கு ஒரு வழிப்பாதையில் வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அந்த வழியாக கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மகன் விக்னேஷ்(28), எழும்பூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியின் மகன் ஸ்ரீமன்(24) மற்றும் அவரது நண்பரான வடபழனியை சேர்ந்த பானிபூரி கடையில் பணியாற்றும் ராக்கேஷ்(25) ஆகியோர் பைக்கில் வந்துள்ளனர். அப்போது உதவி ஆய்வாளர் 3 பேர் வந்த பைக்குகள் மீது இடிப்பது போல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர்கள் மகன்கள் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் பைக்கில் பின் தொடர்ந்து சென்று, உதவி ஆய்வாளரை காவலர் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

இதனால் இருதருப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தங்கமாதவன் தனது மனைவி உதவி ஆய்வாளரான மேனகாவுக்கு போன் மூலம் தன்னை 3 பேர் மிரட்டுவதாக தகவல் கொடுத்துள்ளார். அதன்படி மேனகா சம்பவ இடத்திற்கு வந்தபோது, இன்ஸ்பெக்டர்கள் மகன்கள் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் உதவி ஆய்வாளரை கடுமையாக தாக்கியுள்ளனர். அதை பார்த்து தடுக்க வந்த மேனகாவையும் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து எஸ்ஐ தம்பதிகள் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தானர்.

அதன்படி அப்போது ரோந்து பணியில் இருந்த டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரையும் சமாதானம் செய்துவைத்தார். இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் தங்க மாதவனுக்கு இடது தலையில் லேசான வீக்கம், வலது கையில் உள்காயம், முதுகில் காயம், உதவி ஆய்வாளர் மேனகாவுக்கு உதட்டில் வீக்கம், முதுகில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பின்னர் சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் தங்க மாதவன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர், தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர்கள் மகன்கள் மற்றும் அவரது நண்பர் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் எஸ்ஐ தம்பதிக்கு சரமாரி அடி உதை: இன்ஸ்பெக்டர்கள் மகன்களிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kilpakkam ,CHENNAI ,Thangamadavan ,Luthers Garden ,Kilpakkam, Chennai ,Tirumangalam… ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...