×

தலக்காஞ்சேரி மதுபான கூடத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்கு வைத்திருந்த 151 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தலக்காஞ்சேரி பகுதி மதுபானக் கூடத்தில் இன்று காலை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 151 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்தனர். திருவள்ளூர் நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தலக்காஞ்சேரி, ஐவேலி அகரத்தில் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது.

இங்கு அரசு விதிகளின்படி திறக்கும் நேரமான மதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மட்டுமே அருகிலுள்ள மதுபானக் கூடம் திறந்திருக்க வேண்டும். இதற்கிடையே, தலக்காஞ்சேரி ஐவேலி அகரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று மாவட்ட எஸ்பி சீனிவாசபெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில், மாவட்ட சிறப்பு காவல் பிரிவு போலீசார், இன்று காலை 7 மணியளவில் தலக்காஞ்சேரி, ஐவேலி அகரத்தில் உள்ள 8764 எண் கொண்ட டாஸ்மாக் கடையில், அரசு அனுமதி பெற்ற மதுபான கூடத்தில் அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக 151 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர். மேலும், அங்கு கள்ளச்சந்தையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் வேப்பம்பட்டு, காந்தி வெங்கட்ராமன் நகரைச் சேர்ந்த சந்திரசேகரன் (45), சின்ன காஞ்சிபுரம், மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுதர்சன் (44) எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பீர் (11 கேஸ்) 132, குவார்ட்டர் பிராந்தி பாட்டில் 19 என மொத்தம் 151 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தலக்காஞ்சேரி மதுபான கூடத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்கு வைத்திருந்த 151 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thalakanchery ,Thiruvallur ,Thalakancherry ,
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...