×

சிறுகதை- புகலிட (ஏ) மாற்றம்

நன்றி குங்குமம் தோழி

பரபரவென்று கோலம் ஒன்றை போட்டுவிட்டு வேக நடையிட்டு வீட்டிற்குள் சென்றாள், சாரதா. ‘டொக்’கென்று கணவன் ராகவன் அருகில் காபியை வைத்தாள்.
“என்னாச்சு உனக்கு?” என்ற கணவனிடம், “முதல்ல அந்த கருமத்த தூக்கி எரிஞ்சிட்டு சுத்தம் செஞ்ச பிறகுதான் எனக்கு நிம்மதியா இருக்கும். வரட்டும் இந்த காமாட்சி… நானும் ரெண்டு நாளா சொல்லிட்டிருக்கேன். இப்போ அப்போனு நாள் கடத்திட்டிருக்காளே தவிர, சொன்ன வேலையை முடிக்கல. இன்னிக்கு நானே அதை செய்யப்
போறேன்” என்று தன் கணவனை பார்த்து சீறினாள்.

ராகவனுக்கு புரிந்து போயிற்று. இனி இவளை தடுத்து நிறுத்துவது முடியாத காரியமாச்சே என்று மனதினுள் நினைத்துக் கொண்டே பால்கனி பக்கம் எழுந்து சென்றார். “அதானே… உடனே மௌன சாமியாரா மாறிடுவீங்களே” என்று கூறிவிட்டு கிச்சனுக்குள் மறைந்தாள் சாரதா.ராகவனது வரவால் பால்கனியிலிருந்த ஜோடி புறாக்கள் படபடவென்று சிறகடித்துப் பறந்தன. கூடவே அவரது மனதும் பின்னோக்கிச் சென்றது. ராகவனது தந்தை நாராயணனும் அவரது நண்பர் பட்டாபியும் சேர்ந்து இரு பிளாட்டை அருகருகில் வாங்கினர். நாராயணனுக்கு அப்போது வீடு கட்டும் அளவிற்கு பண வசதி இல்லாததால், அதைத் தோட்டமாக மாற்றினார். பட்டாபி வீடு கட்டிக் கொண்டு குடியேறினார்.

நாராயணனின் மனைவி சிவகாமிக்குத் தோட்டம் என்றால் உயிர். அவர்களது தோட்டம் வளர வளர, அதுவரை குழந்தை இல்லாதிருந்த சிவகாமிக்கு குழந்தைப்பேறு கிட்டியது. சில வருடங்களில் பட்டாபிக்கு உத்தியோக மாற்றல் கிடைத்து வெளியூரிலேயே செட்டிலாகிவிட முடிவானதால் பட்டாபியின் வீட்டை நாராயணனே வாங்கிக் கொண்டார்.
அந்த வீட்டில்தான் ராகவன் பிறந்தான். ராகவனும் வளர்ந்து அவ்வூரிலேயே பணியில் அமர்ந்தான். சாரதாவை கைப்பிடித்தான்.

ஒரு வருடத்தில் அவர்களுக்கு ஆனந்த் பிறந்தான். சாரதா சிவகாமிக்கு நேரெதிர். தோட்டம் என்றாலே ஆகாது. பால்கனியிலிருந்து சதா காய்ந்த சருகும், பறவையின் இறகும் வீட்டிற்குள் பறந்து வந்தபடியிருக்கும். சுத்தம் செய்து கொண்டேயிருப்பாள் சாரதா.வருடங்கள் உருண்டோடின. நாராயணனும் சிவகாமியும் ஒருவர் பின் ஒருவராய் மறைந்தனர். ஆனந்த் விமலாவை திருமணம் செய்த கையோடு வெளிநாடு சென்றுவிட்டான்.

ஒரு நாள் வெளிநாட்டிலிருந்து ஆனந்த் ஃபோனில் மிகவும் விரக்தியாக பேசினான். “அம்மா! எனக்கு இங்கு வேலை போகும் சூழல் ஏற்பட்டிருக்கும்மா. இங்கேயே பிறந்து வளர்ந்த பூஜா, அங்கே வந்தால் இந்திய சூழலுக்கு மாற மிகவும் கஷ்டப்படுவாளே மா” என்று மிகுந்த வருத்தத்துடன் பேசினான். ஆனந்திடம் பேசியதிலிருந்து சாரதாவிற்கு மனதே சரியில்லை. அப்படியே ஆனந்த் வந்தாலும் அவன் குடும்பத்துடன் தங்கிக் கொள்ள இந்த தோட்டத்தை மொத்தமாக அழித்து, கார் ஷெட்டுடன் அங்கே ஒரு வீடு கட்டலாம் என்று எண்ணியவள் மறுநாள் தோட்டத்தின் ஒரு பகுதியிலிருந்த மரங்களை ஆள் வைத்து வெட்டி விட்டாள். “என்னம்மா நீங்க! இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தோட்டத்தை அழிப்பதிலேயே குறியாயிருக்கீங்க.

எவ்வளவு காய் கனி கிடைத்தது அந்த மரங்களிலிருந்து! அதுல எவ்வளவு பறவைங்க வாழ்ந்ததோ! இப்படி மரத்தையெல்லாம் வெட்டிட்டீங்களே! அதுங்க எல்லாம் எங்கே போயிருக்கும்? வெற்று நிலத்தைப் பார்க்கவே மனசுக்குக் கஷ்டமா இருக்குதும்மா. நான் பெரியம்மா காலத்திலேர்ந்து இந்த வீட்ல வேலை பார்க்கற உரிமைல சொல்றேன். நீங்க செஞ்சது சரியாப் படலைமா” என்று கூறிச் சென்றுவிட்டாள் காமாட்சி.

ஆனந்த் பற்றிய கவலையும், காமாட்சியின் பேச்சும் சேர்ந்து கொண்டு அவளது மதிய தூக்கத்தைக் களவாடின. எனவே, ஹாலிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள். பால்கனி கதவு திறந்திருந்ததால், புறாக்கள் எழுப்பும் ஒரு வினோத சப்தம் அவள் கவனத்தை ஈர்த்தது. எழுந்து வந்து பார்த்தவளுக்கோ பேரதிர்ச்சி. கீழே இறகுகள் சிதறியிருந்தன. சின்னச் சின்ன குச்சிகள் கிடந்தன. புறாக்கள் அப்போதுதான் எச்சமிட்டிருந்ததால், துர்நாற்றம் வீசியது. பீரோவின் மேலிருந்த கூட்டிலிருந்து இரண்டு புறாக்கள் இவள் வரவால் சிறகடித்துப் பறந்து போய்விட்டன.

‘கீச்… கீச்’சென்று புறாக்குஞ்சுகளின் சப்தம் வேறு! அவ்வளவுதான்…அவளுக்கு வந்ததே கோபம்…! “என்னங்க! இங்க வந்து பாருங்க! பால்கனியே வீணாகிப் போச்சு” என்று சாரதா கத்திய வேகத்தில் ராகவன் என்னமோ ஏதோவென்று ஓடி வந்தார். சாரதாவை பால்கனியில் பார்த்ததும் பதறிப்போனார். “நாளைக்கு கூட்டுடன் சேர்த்து இந்த பீரோவையும் தூக்கியெறிந்துவிட வேண்டும். இந்த காமாட்சி சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று இவ்வளவு நாளா என்ன செஞ்சாள்?’’ என படபடத்தாள்.

“அதனாலென்ன சாரதா! சிறிது நாட்களில் புறாக்கள் சென்றுவிடுமே… இதற்கேன் புலம்புகிறாய்” என்று ராகவன் சொன்னதை அவள் காதிலேயே வாங்கவில்லை. மறுநாள் காமாட்சியை உலுக்கியெடுத்துவிட்டாள். காமாட்சியோ செய்வதறியாது திகைத்துப் போய் நின்றாள். உடனே கூட்டை அகற்றச் சொன்னாள் சாரதா. கழுத்து சுளுக்கு என்று கூறி இரண்டு நாட்கள் கூட்டை கலைக்காமல் கடத்திவிட்டாள் காமாட்சி. இன்றோ சாரதாவின் கோபம் உச்சத்திற்கு சென்றுவிட்டது. அதனால் அவளே கூட்டைப்பிரிக்க முடிவெடுத்து விட்டாள்.

“என்ன! ஒரு டம்ளர் காபியை ஒரு மணி நேரமா குடிப்பீங்க’’ என்ற சாரதாவின் குரல் ராகவனை நிகழ்காலத்திற்குக் கூட்டி வந்தது. “கொஞ்சம் நகருங்க… இன்னிக்கு இதை தூக்கிப் போட்டதுக்கப்புறம்தான் எனக்கு அடுத்த வேலை” என்று கூறி கையிலிருந்த ஸ்டூலைப் போட்டு அதில் ஏற எத்தனித்தவளை காமாட்சியின் குரல் தடுத்து நிறுத்தியது.

“ஒரு நிமிஷம் இருங்கம்மா… சுத்தம் சுத்தம்னு பேசி பறவைங்க கூட்டைக் கலைக்கிறீங்களே… இது பாவமில்லையா? இப்போதான் குஞ்சு பொரிச்சிருக்குங்க அதுங்க… அதனாலதான் கூட்டைப் பிரிக்க மனசு வராம சுளுக்கு அது, இதுனு சொல்லி இரண்டு நாள் தள்ளிப் போட்டேன். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அதுங்களே பறந்து போய்விடும். அதுங்க வாழ்ந்த மரத்தையும் வெட்டிட்டீங்க… அதுங்களோட இடத்தைக் காணாம ஏமாந்து பரிதவிச்சுப்போய் கடைசியா பழகின இடமானதால இங்க புகலிடம் தேடி வந்து கூடு கட்டியிருக்குதுங்க… இதை பிரிக்க நினைக்கிறீங்களே..?

ஏற்கனவே சுற்றுச்சூழலுக்கு மனுஷங்க நாம பண்ண துரோகத்துனாலதான், இப்போ முகத்தை மாஸ்க் போட்டு மூடி, முழுசா மூச்சு கூட விட முடியாம கஷ்டப்படறோம். இப்போ தயவுசெஞ்சு இந்த பாவத்தைச் செய்யாதீங்கம்மா… புறாக்குஞ்சுங்க உயிர் பிழைக்காமப் போயிடும். வெளிநாட்டிற்கு போய் சில வருஷம் வாழ்ந்திட்டு, இப்போ அங்கிருந்து திரும்பி வர உங்க மகன் மனசு கஷ்டப்படுதுனு சொன்னீங்க… ஆறறிவு உள்ள மனுஷனுக்கே இடமாற்றம் கஷ்டம்னா…

இந்த வாயில்லா ஜீவன்கள் என்னம்மா செய்யும்? இதுல உங்க மகன் வந்தா தோட்டத்தை அழிச்சுட்டு வீடு கட்டலாம்னு சொல்றீங்க… ஏன்! மாடில ஒரு போர்ஷன் கட்டி எல்லோரும் சந்தோஷமாய் இருக்கலாமே! உங்க மகனையும் மருமகளையும் இங்க ஒரு வேலையை தேடிக்கச் சொல்லுங்க. உங்க பேத்திய, நீங்களும் ஐயாவும் நம்ம முறைப்படி அழகா வளர்த்துக் கொடுங்க… வீடு மட்டும் சுத்தமா இருந்தா போதாதும்மா! நம்ம மனசுதான் முக்கியமா சுத்தமா இருக்கணும்.இதப் பாருங்கம்மா! நாளைக்கு நான் வருவேன்… இந்தக் கூடு இல்லைனா இந்தப் பக்கம் இனி தலை காட்டமாட்டேன்” என்று மூச்சுவிடாமல் பேசிவிட்டு வேக நடைப் போட்டு மறைந்தாள் காமாட்சி.

கண்கள் கலங்கிய நிலையில் ஸ்தம்பித்து நின்றாள் சாரதா. தான் தினமும் வணங்கும் அந்தத் தாய் காமாட்சியே நேரில் வந்து உபதேசித்ததாக உணர்ந்தாள். வீட்டிற்குள் சென்று விளக்கேற்றி, “அம்மா! இந்த பறவைக் கூட்டின் மூலம் என்னையும் மாற்றி என் மகனது பிரச்னைக்கும் தீர்வு கொடுத்திருக்க… நன்றி தாயே!” என்று கூறி நமஸ்கரித்தாள்.
ஆனந்த்திற்கு உடனே ஃபோன் செய்தாள். எதிர்முனையில் ஆனந்த், ‘‘என்னம்மா! இந்த நேரத்தில் ஃபோன்?” என்று பதறினான்.

“பதட்டப்படாதே! ஊருக்கு திரும்பி வருவதைப் பற்றி கவலைப்படாதே… உன் தகுதிக்கு இங்கேயே நல்ல வேலை கிடைக்கும். பூஜாவைப் பற்றின கவலையை விட்டுடு. அவளை நல்லா வளர்த்துக் கொடுப்பது எங்களோட கடமை. அதோட வேறென்ன வேலை எங்களுக்கு! நாம் எல்லோரும் சேர்ந்து சந்தோஷமா வாழலாம்” என்று சொன்னாள்.

பின் காமாட்சிக்கு ஃபோன் செய்து “நாளைக்குக் காலைல சீக்கிரமா வந்துடு காமாட்சி. மரக்கன்று வாங்க நர்ஸரிக்குப் போகணும்” என்றாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன், ‘‘இப்போதுதான் என் மனசு நிறைவா இருக்கு சாரதா” என்றார். அப்போது எங்கிருந்தோ சிறகடித்துப் பறந்து வந்தன அந்த ஜோடிப் புறாக்கள்.‘‘உள்ளே வந்து பேசுங்க… உங்க பேச்சு சத்தத்துல புறாக்கள் பயந்து பறந்து போயிடப் போகுது” என்று சொன்ன சாரதாவைப் புன்முறுவலோடு பார்த்துவிட்டு அந்த மர பீரோவை பார்த்தார் ராகவன்.அவருக்குத் தன் தாய் சிவகாமியும்
அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தது போல் இருந்தது. ஏனென்றால், அது சிவகாமியின் பீரோ. அப்போது விண்ணிலிருந்து மழைத்துளிகள் வெற்றிடத்தை ஈரப்படுத்தின, மரம் நடுவதற்கு ஏதுவாக!

தொகுப்பு: ஜெயா கணேசன்

The post சிறுகதை- புகலிட (ஏ) மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Sarada ,Raghavan ,
× RELATED கடற்கொள்ளை தடுப்பு ஐஎன்எஸ் சாரதா கப்பலுக்கு விருது