×

மாசி மகத்தையொட்டி விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இன்று தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமகத்தையொட்டி இன்று நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு மாசிமக பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு மாசிமக திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகின்றது.

கடந்த 20ம் தேதி கோயிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று அதிகாலையில் தேரோட்டம் நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன், தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அப்போது சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனைகள் காண்பிக்க விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்திகளும் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களிலும் எழுந்தருளினர்.

அப்போது பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து விநாயகர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் எழுந்தருளிய தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு கோட்டை வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. நாளை தீர்த்தவாரி உற்சவமும், நாளை மறுநாள் தெப்ப உற்சவமும், 26ம்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், அன்று முதல் விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

The post மாசி மகத்தையொட்டி விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இன்று தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Vridtagriswarar Temple ,Vriddhachalam ,Masai Mahatma ,Vridthachalam ,Masimagam ,Vridthachalam Vridtagriswarar temple ,Vridthachalam, Cuddalore district ,Vridtagriswarar ,Masimag festival ,Vriddhakariswarar temple ,Masi Maha ,
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு