×

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 66

(பகவத்கீதை உரை)

‘நான்’ நீங்குவதுதான் சேவையின் பண்பு

புலனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருதுவதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலிருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
அல்லது எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் பரந்தாமனையே மனம் உருவகித்துக் கொள்வது, அந்தப் பரம்பொருளையே ஒரே முனைப்பாக்கி அறிந்துகொள்வதுதான் புலனடக்கம் என்று சொல்லலாமா? இவையெல்லாவற்றிலும் மேலான புலனடக்கம் என்பது எது? எங்கும், எதிலும், எப்போதும் எல்லா இந்திரியங்களிலும் பகவானை மனம் ஸ்பரிசிப்பதுதானே!

ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே
ஆத்மஸம்யமயோகாக்னௌ ஜுஹ்வதி ஞானதீபிதே (4:27)

‘‘ஞானிகள், இந்திரியங்களின் இந்தச் செயல்களை, அவற்றால் மனம் அனுபவிக்கும் உணர்வுகளை, தம் ஞானத்தால் பிரகாசமான பரமாத்மா என்ற தம் ஆன்மாவில், அந்த யோகாக்னியில் ஆஹுதியாக்குகிறார்கள்.’’ ஞானி என்பவர் யார்? தன்னை உணர்ந்தவர், தன்னையே பரமாத்மாவாக உணர்ந்தவர். அஞ்ஞானி என்பவர் யார்? தன்னையே உணராதவர், அதனாலேயே பரமாத்மாவையும் உணர முடியாதவர்! ஞானி, தீபம் ஒளிர, தான் எண்ணெயாகிறார். ஹோமம் வளர, தான் நெய்யாகிறார்.

அதாவது, எண்ணெயே, நெய்யே தீபமாகிறது, அக்னியாகிறது. தான் அப்படியே பரமாத்மாவுடன் கலந்து விடுவதுதான் ஞானியின் இயல்பு. இந்தப் பக்குவம், இந்த வித்தை, கைவராதவர்கள் அஞ்ஞானிகளாகவே இருக்கிறார்கள். தினமும் வீட்டில் பூஜை செய்கிறோம். இறைவனுக்கு மலர்களை சமர்ப்பிக்கிறோம். நறுமணம் கமழும் ஊதுவத்திகள் ஏற்றி வைக்கிறோம். பிரசாதங்கள் சமைத்து படைக்கிறோம். இது சராசரியான பூஜைமுறை.

ஆனால், ஞானி எனப்படுபவர், ஆத்ம நிவேதனம் செய்பவர். தனக்குள் இந்த தன் ஜன்மத்தில், அப்போதைக்குத் தற்காலிகமாகக் குடிகொண்டிருக்கும், அழிவேஇல்லாத ஆன்மாவையே இறைவனுக்கு அர்ப்பணிக்கிறார். அவருக்குத் தெரியும் ஆன்மா பகவானுக்கு மட்டுமே சொந்தமானது, தான் அதற்கு உரிமை கொண்டாட முடியாது என்று.

அதைவிட, தன் உடலில் இருக்கும் மதிப்பு வாய்ந்த அரியதொரு விஷயம் ஆன்மாதானே? முந்தைய ஜன்மத்திலிருந்து இப்போது நமக்கு வந்து, அடுத்த ஜன்மத்தில் இன்னொரு உடலுக்குள் செல்லவிருப்பதல்லவா அது! அதனால் அது எத்தனை மதிப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும்! உடலும், அதன் உறுப்புகளும், அவை இயங்குவதற்கு இன்றியமையாததான உயிரும் என்றேனும் ஒருநாள் அழியப் போகிறவைதான் என்றாலும், ஆன்மா மட்டும் சாசுவதமானதாகத் திகழ்கிறதே, அது எத்தனை மதிப்பு வாய்ந்தது! அழியக்கூடியவற்றையும், அவற்றின் உணர்வுகளையும் பரந்தாமனுக்கு அர்ப்பணிப்பதைவிட, இந்த ஆன்மாவை அர்ப்பணிப்பதுதான் எத்தனை உயர்வானது!

அஞ்ஞானி தனக்குரியதாகத் தான் கருதிக்கொள்ளும் மலர்களையும், ஊதுவத்தி, கற்பூரம், சாம்பிராணி முதலானவற்றையும், பிரசாதங்களையும் இறைவன் முன் சமர்ப்பித்துவிட்டு அவற்றுக்கெல்லாம் பிரதிபலனாகத் தனக்கு ஏதேனும் நன்மைகளை இறைவன் செய்வார் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பான்.

பகவானுக்கு எதைத்தான் சமர்ப்பிப்பது? நம் இந்திரியங்களால் அடையாளம் காண முடிந்த பொருட்களைத்தான் நம்மால் காணிக்கையாக்க முடிகிறது. அதிகபட்சமாக கண்ணப்பன், கண்களை இறைவனுக்குக் காணிக்கையாக்கினான்; ஏகலைவன், இறைவனுக்கொப்பாகத் தான் மதித்த குருவுக்குத் தன் கட்டை விரலைக் காணிக்கையாக்கினான். இன்றும் பலர் தம் உடலை வருத்தி விரதம் இருக்கிறார்கள். பட்டினி கிடக்கிறார்கள். இரவெல்லாம் விழித்திருந்து இறைநாமம் சொல்கிறார்கள்.

மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். அங்கப் பிரதட்சணம் செய்கிறார்கள். தீச்சட்டி சுமக்கிறார்கள். தீக்குழியில் இறங்குகிறார்கள். அலகு குத்திக் கொள்கிறார்கள், காவடி எடுக்கிறார்கள், பாதம் நோக திருத்தல யாத்திரை மேற்கொள்கிறார்கள். வண்ணப் பொடிகள், பூச்சுகளைப் பூசிக் கொண்டு (குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா கோலாகலம்) தங்களை தோற்றத்தை கோரப்படுத்திக் கொள்கிறார்கள்.

இப்படித் தன்னை இழந்து, உடல்கூறு தியாகம் செய்துகொண்டு, ‘எல்லாம் நீ கொடுத்ததுதானே, உனக்கே அர்ப்பணிக்கிறோம்’ என்ற பாணியில் பலரும் இறைப்பணி ஆற்றுகிறார்கள். இந்த நஷ்டங்கள் எல்லாம் அவர்கள் தமக்குரியதாகக் கருதிக்கொள்ளும் தங்கள் உடல் சார்ந்த விஷயங்களைத்தான்.

ஆனால், ஞானியைப் பொறுத்தவரை எதுவுமே அவருக்குச் சொந்தமில்லை. ஆகவே இந்திரியக் கடமைகள் எதுவுமே அவரை பாதிக்காது. ஏனென்றால் அவருக்கு ‘நான்’ இல்லை. அதனாலேயே இந்திரிய உணர்வுகளும் இல்லை. ‘நான்’ என்று நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள உதவுபவைதான் இந்திரியங்கள். பிறவி எடுத்த பிறகு, அது முடியும்வரை ஜீவித்தாக வேண்டிய கட்டாயத்தின் உதவு காரணங்கள். இவை இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்வதன் வடிகால்கள். இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று கருதுபவனே ‘நான்’, ‘எனது’ என்று சொந்தத்துக்கும், உரிமைக்கும், சலுகைக்கும் அடிமையாகிறான். இந்த அடிமைத்தனமே அவனை ஏமாளியாக்குகிறது, வருத்தப்பட வைக்கிறது, பொறாமை பகை கொள்ளவைக்கிறது.

இந்திரியங்களையும், மனதையும் ஆன்மாவுக்குள் ஒடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் காண்கிறான் ஞானி. ஆகவே அவனால் எளிதாக ஆன்மாவை பகவானுக்கு அர்ப்பணிக்க முடிகிறது. அதாவது, தம் இயல்பை மேலானதாக மாற்றிக்கொள்ளும் வழி தெரிந்தவன் ஞானி. மிக உயர்ந்த ஞானி நிலை என்பது உடல், பொருள், ஆவி, ஆன்மா எல்லாவற்றையுமே பகவானுக்கு அர்ப்பணிப்பதுதான். நம் இயக்கங்கள்எல்லாவற்றையும் பகவானே தீர்மானிக்கிறார். தனக்கென்று பிரத்யேகமாக உலகம் என்ற ஒரு நாடக மேடையை உருவாக்கி, அதில் நடிகர்களாக மனிதப் பிறவிகளைத் தம் விருப்பம்போல நடிக்க வைக்கிறார்.

இந்த நடிகர்களில் ஞானிகளைத் தன் வசம் இழுத்துக் கொள்கிறார். அடுத்த மேடைக் காட்சிக்கு அவர்களை அவர் அனுப்புவதில்லை. புதியவர்களை அனுப்புகிறார். இவர்களுக்குப் புதிய நடிப்பு அனுபவங்களைத் தருகிறார். இவர்களில் பக்குவப்பட்டவர்கள் ஞானி நிலை அடைய உதவுகிறார். ஆக, பரமாத்மாவாகிய இந்த இயக்குநர் எந்தெந்த பாத்திரத்துக்கு யார் யார் பொருந்துவார்கள் என்று தீர்மானிக்கிறார். நடிகர்கள் தம் பாத்திரம் உணர்ந்து நடிப்பார்களேயானால், அவர்கள் ஞானிகளாகிவிட முடியும். ஆனால், மற்றவர்கள் அந்த அனுபவத்தைப் பெறுவதற்காக அடுத்தடுத்த காட்சிகளில் தோன்ற வேண்டியிருக்கும்!

த்ரவ்யயக்ஞாஸ்தபோயக்ஞா யோகயக்ஞாஸ்ததாபரே
ஸ்வாத்யாய ஞானயக்ஞாஸ்ச யதய: ஸம்சிதவ்ரதா (4:28)

‘‘சிலர் சகலத்தையும் பரந்தாமனுக்கே சமர்ப்பித்துவிட்டு மக்கள் சேவையில் பொருள் ஈட்டுபவர்களாக இருப்பார்கள். வேறு பலர் சுயதர்ம பரிபாலனத்தை மேற்கொண்டு யக்ஞம் இயற்றுபவர்களாக இருப்பார்கள். சிலர் அஷ்டாங்க ரூப யக்ஞம் செய்வார்கள். வேறு சிலர் அஹிம்சை முதலான சத்குணங்களுடன் பகவானைப் பிரார்த்திப்பதும், பரம்பொருளை அடையும் சாத்திரங்களில் தேர்ச்சி பெறுவதுமான ஞான யக்ஞத்தை செய்வார்கள்.’’ தன்னலம் கருதாத சேவையையே கிருஷ்ணன் இங்கே பிரதானமாக போதிக்கிறார்.

தகுதி வாய்ந்த ஒருவருக்கு உதவி செய்கிறோம். அதற்காக அவரிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்ப் போமானால் அந்த உதவிக்கு மரியாதையே இல்லை. உடனடியாக இல்லாவிட்டாலும், பின்னாளில் நமக்கு தேவைப்படுமானால் அப்போது இவர் உதவ மாட்டாரா என்ற வருங்கால எதிர்பார்ப்பும் அந்த உதவி மீதான மதிப்பை இழக்கச் செய்யும். இதை அகங்கார சேவை என்றே சொல்லலாம். பரஸ்பரம் உதவிக் கொள்ளும் மனிதர்களிடையே இந்த எதிர்பார்த்தல் இருப்பது இயல்பு.

ஆனால், இறைவனுக்குப் புரியும் சேவையிலும் அந்த எதிர்பார்த்தல் இருப்பது வியப்பு!
ஒருவர் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் படுத்திருக்கிறார். அவரைப் பார்க்கச் செல்கிறோம். வாங்கி வந்த பழங்களை அவருக்கு அளிக்கிறோம், பண உதவி தேவைப் பட்டாலும் செய்கிறோம். உடன் சிறிது நேரம் இருந்து ஆறுதல் சொல்கிறோம். கூடவே மனசு, ‘நமக்கும் இதே நிலைமை அமையுமானால், இந்த நண்பர் நாம் இப்போது செய்வதைப் போலவோ அல்லது கூடுதலாகவோ நமக்கு உதவுவார்’ என்று கணக்குப் போடுகிறது.

ஆனால், கோயிலில் கடவுளுக்கு நாம் ஆற்றும் சேவை வித்தியாசமானது நேரடி பேரம்! ‘நான் உனக்கு அர்ச்சனை செய்கிறேன், உன் ஸ்லோகம் சொல்கிறேன், மலர் மாலை சாத்துகிறேன், எனக்கு இந்த விஷயத்தைப் பூர்த்தி செய்துகொடு…’ இதில் வேடிக்கை என்னவென்றால், நியாயமற்றதாக நம் உள்ளுணர்வுக்குத் தோன்றும் விருப்பம் நாம் எதிர்பார்த்தபடி நிறைவேறாவிட்டால், பெரும்பாலும் நாம் கடவுளைத் திட்டுவதில்லை, மாறாக, அடுத்த விருப்பத்தை சமர்ப்பித்து விடுகிறோம்.

நமக்குத் தெரிகிறது, நம் கோரிக்கை நம் தகுதிக்கு உட்படாதது என்று. அதனால் அது நிறைவேறாததில் அவ்வளவாக வருத்தம் இல்லை. ஆனால், அடுத்த கோரிக்கையாவது இதுவும் தகுதியற்றதாக இருந்தாலும் நிறைவேறாதா என்ற ஆதங்கம் ஏற்பட்டுவிடுகிறது! நேரடியாகப் பழகக் கூடிய நண்பர், உறவினர் என்றால், தான் ‘உதவி’ செய்தும் அவர் தன் தேவையைப் பூர்த்தி செய்யவில்லையே என்று அவர்மீது கோபப்படலாம், ஏன் சண்டைகூட போடலாம்.

ஆனால், இறைவனிடம் அது சாத்தியமா? எவ்வளவுதான் கூக்குரலிட்டாலும், அழுதாலும், ஆற்றாமையால் ஏசவே செய்தாலும், இறைவன் அமைதியாகவே இருக்கிறார். அவர் நமக்கு பதில் சொல்கிறார் என்பதை நமக்கு அடுத்து நிகழும் அனுபவத்திலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். அது இணக்கமான பதிலா, ஏற்றுக் கொள்ள இயலாத பதிலா என்பதும் அந்தந்த அனுபவங்களின்
சாரத்திலிருந்தே புரியும்!ஆகவே, இறையர்ப்பணம் செய்வதென்பது ஆத்மார்த்தமானதாக, அப்பழுக்கற்றதாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாததாகத்தான் இருக்க வேண்டும். இதற்கு நம்மிடமிருந்து ‘நானை’ விரட்டியடிக்க வேண்டும். ஆனால், இது கடினமான விஷயம்தான். இதற்கு முக்கிய காரணம் நம் எந்த செயலிலும் ‘நான்’ நுழைந்து விடுவதுதான்.

இதற்கு நடைமுறை வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை உதாரணமாகப் பார்க்கலாம். சாலையில் போய்க் கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னே சென்று கொண்டிருக்கும் ஒருவருடைய கையிலிருந்து ஒரு புத்தகம் கீழே விழுகிறது. அதை கவனித்துவிட்ட நாம் ஓடிப்போய் அந்தப் புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுக்கிறோம். இந்தச் செயல்வரை நம் உதவிக் கண்ணோட்டம் அப்பழுக்கற்றதுதான். ஆனால் நம்மிடமிருந்து தன் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டவர், எதுவும் கூறாமல் தன் வழியே சென்றாரானால், நமக்குள் இப்போது ‘நான்’ விழித்துக்கொள்கிறது. ‘ஒரு தேங்ஸ்கூட சொல்லாமல் போகிறானே!’ என்று திகைக்கிறோம்.

திகைப்பு கோபமாக மாறுகிறது. அதுவும் அதிகமாகி, அவன் சட்டையைப் பிடித்து, ‘நீ தவறவிட்ட உன் புத்தகத்தை கீழே குனிந்து, மெனக்கெட்டு நான் எடுத்துக் கொடுக்கிறேன், நீ என்னடாவென்றால் கொஞ்சமும் நன்றியில்லாமல் இருக்கிறாயே, ஒரு தேங்ஸ் சொல்லக்கூட முடியவில்லையா உன்னால்?’ என்று கேட்கவும் துணிகிறோம். எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவிடும் நம் உணர்வு, ஒருசில விநாடிகளில் அற்பமாக ஒரு ‘தேங்ஸ்’ஐ எதிர்பார்ப்பதேன்? ‘நான்’தான் காரணம். அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொடுப்பதற்கு முன்னால் அவன் நன்றி சொல்வானோ மாட்டானோ என்ற எண்ணம் எழுந்திருக்குமானால், நாம் அலட்சியமாக அவனையும், அந்தப் புத்தகத்தையும் பொருட்படுத்தாமல் போய்க் கொண்டே இருப்போம், இல்லையா?

ஆகவே நமக்குள் உதவும் நல்ல குணம் இருக்கிறது, அதற்கு பலனை எதிர்பார்க்கும் எதிர்மறை குணமும் இருக்கிறது. இரண்டாவதற்கு வலிமை அதிகமாக இருப்பதால், முதல் குணம் உடனே தன் மதிப்பை இழந்துவிடுகிறது. அதுவே நாம் அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, நாம் நம் வழியில் தொடர்ந்து சென்றோமானால் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டவர் நம்மிடம் நெருங்கிவந்து நமக்கு நன்றி தெரிவித்திருக்கலாம். இல்லாவிட்டாலும் நம்மை பொறுத்தவரை நஷ்டமில்லை. ஒரு உதவி செய்தோம், அடுத்து யாருக்கு உதவலாம் என்று நம் உள்ளுணர்வு தேடக்கூடும்!

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

The post ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 66 appeared first on Dinakaran.

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்