×

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவி பூர்ண ஜோதியின் போலி கையெழுத்து மூலம் ரூ.43 கோடி மதிப்புள்ள 48 வீடுகளை விற்று மோசடி: கட்டுமான நிறுவன உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவி பூர்ண ஜோதியிடம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதாக கூறி ரூ.43 கோடி மதிப்புள்ள 48 வீடுகளை போலி கையெழுத்து மூலம் விற்பனை செய்து மோசடி செய்த வழக்கில், பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மேலாளரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் மனைவி பூர்ண ஜோதி புகார் ஒன்று அளித்தார்.

அதில், சென்னை அடுத்த மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் எனக்கும், எனது கணவர் சுதீசுக்கும் சொந்தமாக 2.10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் அடுக்குமாடி கட்ட ‘லோகோ’ என்ற கட்டுமான நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக எங்களிடம் கடந்த 2014ல் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மற்றும் அவரது மேலாளர் சாகர் ஆகியோர் அணுகினர். பிறகு 2.10 ஏக்கர் நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்து, நில உரிமையாளரான எங்களுக்கு 78 வீடுகளும், கட்டுமான நிறுவனத்திற்கு 156 வீடுகளும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 78 குடியிருப்புகள் ஒப்பந்தப்படி எனக்கு தர வேண்டும். ஆனால், 48 வீடுகளை எனக்கு தெரியாமல் என் கையெழுத்தை போலியாக போட்டு வெளியாட்களுக்கு ரூ.43 கோடிக்கு கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மற்றும் அவரது மேலாளர் சாகர் ஆகியோர் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு முறையான பதில் தராமல் அலைக்கழித்து வருகின்றனர். எனவே மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

அதன் படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நிஷா மற்றும் கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான நில மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், லோகோ பில்டர்ஸ் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மற்றம் சாகர் ஆகியோர், ஒப்பந்தப்படி நிலத்தின் உரிமையாளரான பூர்ண ஜோதி மற்றும் அவரது கணவர் சுதீசுக்கு கொடுக்க வேண்டிய 48 வீடுகளை போலி கையெழுத்து போட்டு ரூ.43 கோடிக்கு விற்றது உறுதியானது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக லோகோ கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா(44) மற்றும் அவரது மேலாளர் சாகர்(33) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவி பூர்ண ஜோதியின் போலி கையெழுத்து மூலம் ரூ.43 கோடி மதிப்புள்ள 48 வீடுகளை விற்று மோசடி: கட்டுமான நிறுவன உரிமையாளர் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Sudish ,Poorna Jyoti ,CHENNAI ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் வழியில் பயணம்: சொல்கிறார் பிரேமலதா