×

நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது; மீண்டும் கூட்டணி ஆட்சி: பாகிஸ்தான் பிரதமராக விரைவில் பொறுப்பேற்கிறார் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நீண்ட இழுபறிக்கு பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமைகிறது. அங்கு ஷெபாஸ் ஷெரீப் விரைவில் பிரதமராக பொறுப்பேற்கிறார். பாகிஸ்தானில் கடந்த 8ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின.

இதில், ஊழல் வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப் இ இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 93 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 75 இடங்களிலும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் சர்தாரி பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்ற இடங்களை சிறிய கட்சிகள் கைப்பற்றின.

ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசை நிறுவ அரசியல் கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார். ஆனால் இம்ரான்கான் கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்தது. அதனால் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்தன. ஆனால் அதிகாரப்பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதில் கருத்து வேறுபாடு நிலவின. இரு கட்சிகளும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தின. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்தது.

வரும் 29ம் தேதி நாடாளுமன்றம், தனது முதல் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்பதால் இரு கட்சிகளும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தின. இதில் கூட்டணி அரசை அமைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. இரு கட்சிகளும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ெஷபாஸ் ஷெரீப் (72) மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவர் ஆசிப் அலி சர்தாரி (68) அதிபர் பதவிக்கான தேர்தலில் இரு கட்சிகளின் கூட்டு வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய அரசை அமைப்பதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. புதிய அரசு விரைவில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது; மீண்டும் கூட்டணி ஆட்சி: பாகிஸ்தான் பிரதமராக விரைவில் பொறுப்பேற்கிறார் ஷெபாஸ் ஷெரீப் appeared first on Dinakaran.

Tags : Shephas Sharif ,Pakistan ,Islamabad ,SHEPHAS ,SHERIFF SOON ,Shebas Sharif ,
× RELATED பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...