×

விரதத்தின் தத்துவம் என்ன?

விரதத்தின் தத்துவம் என்ன?
– ஜகதீஸ்வரி, மேலப்பாளையம்.

இறைவன் நமக்கு எவ்வளவோ தந்திருக்கிறார். அவருக்கு நாம் திருப்பி எதைத் தருவது? எல்லாம் உள்ளவனுக்கு எதைத்தான் தருவது? குறைந்தபட்சம் நன்றியாவது தெரிவிக்கலாம் இல்லையா? அப்படி நன்றி தெரிவிக்கும் ஒரு முறைதான் பக்தி செலுத்துவது. அப்படி பக்தி செலுத்தும் வகைகளில் ஒன்றுதான் விரதம் இருப்பது.

‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்றால் என்ன?
– கே. திருமலை, கவுண்டம்பாளையம்.

‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்பது சூரியனின் பெருமையை விளக்கும் ஸ்லோகத் தொகுப்பு. வால்மீகி ராமாயணத்தில் இடம்பெறுகிறது. ஹ்ருதயம் என்றால் உட்கரு என்று சொல்லலாம்.

ராம-ராவண யுத்தத்தின்போது, ராமன் எத்தனை முறை கொய்தாலும் ராவணனது தலை மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டேயிருந்தது. இதனால் ராமர் களைத்துப்போகிறார். யுத்தம் நடப்பதைப் பார்க்க வந்த அகத்தியர் ராமருக்கு சூரியனின் பெருமைகளைக் கூறுகிறார். அந்த சூரியனை வணங்கும் வழியாக ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்ல அறிவுறுத்துகிறார். அந்த ஸ்லோகத்தைச் சொல்லித் தருகிறார். இந்த உபதேசத்தைப் பெற்ற பிறகு ராமரால் ராவணனைக் கொல்ல முடிகிறது. அதாவது, நமக்குள்ளேயே இருக்கும் நம் ஆற்றலை நாம் சோர்வு, பயம், அவநம்பிக்கையால் நாமே உணராமல் போய்விடுகிறோம். இது ராமனுக்கும் ஏற்பட்டிருக்கிறது! ஆதித்ய ஹ்ருதயம் சொன்னால் மன தைரியம், திட்டமிடும் ஆற்றல், எளிதாக, விரைவாக செயலாற்றும் திறன் எல்லாம் ஈடேறும்.

31 ஸ்லோகங்கள் அடங்கிய இந்த ஸ்லோகத் தொகுப்பை தினமும் காலையில் பாராயணம் செய்கிறவர்கள் நோய், ஏழ்மை, கடன், எதிரி, பயம் இல்லாமல் இருப்பார் என்ற நம்பிக்கை ஆன்மிகர்களிடையே உண்டு.

அருள்ஆலயங்களில் நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றுகிறோம். இதில் ஏழு முறை வலமாகவும் இரண்டு முறை இடப்பக்கமும் சுற்ற வேண்டும் என்கிறார்கள் சிலர்; இன்னும் சிலர் ஐந்து முறை வலப்பக்கமும் நான்கு முறை இடப்பக்கமும் சுற்றச் சொல்கிறார்கள். எத்தனை முறை எப்படி சுற்றுவது சரி?
– இரா.ராஜசேகரன், அம்பத்தூர்.

ஆலயங்களில் இப்படி பிராகாரத்தைச் சுற்றுவதை பிரதட்சணம் என்கிறோம். பிரதட்சணம் என்றால், வலதுபக்கமாக சுற்றுவது என்பதே அர்த்தம். அப்பிரதட்சணமாக, அதாவது இடதுபக்கமாக சுற்றவே கூடாது. பெரும்பாலான கோயில்களில் நவகிரகங்களின் பிராகாரங்களைப் பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். அது மிகவும் குறுகலாக இருக்கும். சில சுற்றுகள் இடப்பக்கமாகவும் சில சுற்றுகள் வலப்பக்கமாகவும் போகவேண்டும் என்றால், இவ்வளவு குறுகலாகவா அமைத்திருப்பார்கள்? ஆகம விதிகளை நன்குணர்ந்த நம் முன்னோர்கள் இப்படி பக்தர்கள் எதிரும் புதிருமாகச் சென்று இடித்துக்கொள்ள விட்டிருப்பார்களா? நவகிரகங்களை ஒன்பது முறையும் வலதுபக்கமாகச் சென்று சுற்ற வேண்டும் என்பதே சரி.

கிருஷ்ண பகவான், அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் படத்தினை வீட்டில் வைத்தால், ‘கலகம்’ வரும் என்கிறார்களே..?
– ஜி.புவனேஸ்வரி, வத்திராயிருப்பு.

கலகமா? மனக் கலக்கத்துக்கு விளக்கம்தானே பகவத் கீதை! எங்கும், எதிலும், எதற்கும், எப்போதும் நடுநிலை மனது வேண்டும் என்றுதானே கீதை போதிக்கிறது? உயர்வு வந்தால் துள்ளாமையும், தாழ்வு வந்தால் துவளாமையும் வேண்டும் என்ற படிப்பினை நல்குவதுதானே கீதை? சோர்ந்துபோயிருக்கும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் வழங்கும் அற்புத மருந்தல்லவா அது! அப்படி உபதேசிக்கும் காட்சி வீட்டுக்குள் இருப்பதால் எந்தத் தீமையும் வராது.
அந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் எதையும் நடுநிலையாக அணுகும் மனப்பக்குவம் வரவேண்டும் என்ற நம்பிக்கையும் வளருமானால் அதுதான் சிறப்பு.

தொகுப்பு: அருள்ஜோதி

The post விரதத்தின் தத்துவம் என்ன? appeared first on Dinakaran.

Tags : Jagatheeswari ,Melapalayam ,
× RELATED 10 ஆண்டுகளாக நாட்டை சூறையாடிய மோடி: சீமான் சீற்றம்