×

பொக்லைன் மீது கார் மோதல் வளைகாப்பு முடிந்து சென்ற 9 மாத கர்ப்பிணி உயிரிழப்பு: வயிற்றிலிருந்த குழந்தையும் சாவு

சேந்தமங்கலம்: வளைகாப்பு முடிந்து, வீட்டிற்கு அழைத்து சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் பொக்லைன் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 9 மாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே பலியானார். வயிற்றிலிருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அடுத்துள்ள கொண்டயம்பள்ளியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வகுமார் (29). இவரது மனைவி பவித்ரா (27). தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று பவித்ராவின் தந்தை பாலுசாமி, தாய் சித்ரா மற்றும் உறவினர்கள் தம்மம்பட்டியில் உள்ள செல்வக்குமாரின் வீட்டிற்குச் சென்று, பவித்ராவுக்கு வளைகாப்பு செய்து விட்டு மதியம் மகளை வேட்டாம்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் அழைத்து வந்தார். அப்போது பாலுசாமி காரை ஓட்ட மருமகன் செல்வகுமார், மனைவி சித்ரா, பெரியம்மா ராஜேஸ்வரி ஆகியோர் காரில் பின்சீட்டிலும் பவித்ரா முன் சீட்டிலும் அமர்ந்திருந்தனர். சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி திருமலைபட்டி பிரிவில் பள்ளமான சாலையில் வந்தபோது, பாலுசாமியின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த பொக்லைன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பவித்ரா பலத்த காயமடைந்து உயிரிழந்தார். பவித்ராவின் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. மேலும், காயமடைந்த பாலுசாமி, செல்வகுமார், சித்ரா, ராஜேஸ்வரி ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொக்லைன் மீது கார் மோதல் வளைகாப்பு முடிந்து சென்ற 9 மாத கர்ப்பிணி உயிரிழப்பு: வயிற்றிலிருந்த குழந்தையும் சாவு appeared first on Dinakaran.

Tags : Bokline ,Senthamangalam ,Selvaraj ,Kondayampally ,Dhammambatti, Salem district ,Pokline ,
× RELATED சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்