×

தேர்தல் தேதி அறிவித்த பிறகே அதிமுக கூட்டணி உறுதியாகும்: சொல்கிறார் எடப்பாடி இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது

மதுரையில் நேற்று நடந்த அதிமுக கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாமக, தேமுதிகவுடன் தேர்தல் கூட்டணியா? தேர்தல் நேரத்தில் இரட்டை இலை சின்னம் சிலர் முடக்க போவதாக கூறுகிறார்களே என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு எடப்பாடி கூறியதாவது: பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இரட்டை இலையை சிலர் முடக்குவதாக கூறுகிறார்கள். உயர்நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றத்திலும் முறையான தீர்ப்பு பெற்றிருக்கிறோம் இரட்டை இலையை யாரும் முடக்க முடியாது. ஓபிஎஸ் கொடியை பயன்படுத்தினால் சொல்லுங்கள் நடவடிக்கை எடுப்போம். திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் கட்டணியில் இன்னும் முடிவு எடுக்கவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைதான் நடந்து வருகிறது. அதேபோல் அதிமுகவிலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி உறுதியாகும். தற்போது கூட்டணிக்காக காத்திருப்பதாக கூறுவது தவறு. எல்லோரும் கூட்டணி, கூட்டணி என்று இருக்கும்பொழுது நாங்கள் மட்டும் கூட்டணி அமைக்க கூடாதா? 2019, 2021ல் எங்கள் தலைமையில் தான் கூட்டணி இருந்தது. தற்போதும் நாங்கள் தான் கூட்டணியின் தலைமையாக இருப்போம்.

ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் பிரதமர் வேட்பாளர் அறிவித்தா ஓட்டு கேட்கிறார்கள்? 2014ல் ஜெயலலிதா, பிரதமர் வேட்பாளர் யார் என சொல்லி ஓட்டு கேட்கவில்லை. எங்களை பொறுத்தவரை, தமிழ்நாட்டு மக்கள்தான் எங்கள் எஜமானர்கள். முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் பலர் பாஜவில் சேர்வது அவர்களுடைய விருப்பம். இது ஜனநாயக நாடு. யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அதேபோல் பாஜவில் இருந்தும் நிறைய பேர் அதிமுகவில் வந்து சேர்ந்துள்ளனர். பாஜவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு இருப்பதாக கூறுவதில் ஓட்டு போடும் மக்கள் யாரும் கருத்து கணிப்புக்கு வரவில்லை. அரசியல் வாரிசு என்பது சீட்டு கொடுப்பதால் மட்டும் கிடையாது. தலைமைக்கு யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்து தான். அதைத்தான் அரசியல் வாரிசு என்று சொல்கிறேன்.

* ஏ.வி.ராஜூ குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காத எடப்பாடி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி, பிரபல நடிகை குறித்து பேசியுள்ளாரே? என்ற கேள்விக்கு, ‘அதற்குத்தான் இன்றைக்கு எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது பத்திரிகையில் வந்துள்ளது. அவர் பெரிய ஆளு கிடையாது. தீபா கட்சிக்கு போய் வந்தவர். ஏதோ இரக்கப்பட்டு நாங்கள் சேர்த்தோம். உடல்நிலை சரியில்லாத அவரை, நாங்கள் விட்டு வைத்திருந்தோம். இப்போ அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது’ என்றார். ஆனால், கூவத்தூர் தொடர்பாகவும், ஆவின் ஊழல் தொடர்பாகவும் ஏ.வி.ராஜூ தெரிவித்த குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

* மாநில நலன் மீது திடீர் அக்கறை

எடப்பாடி கூறுகையில், ‘தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. அவர்களுடன் கூட்டணி அமைக்கும்போது, தேசிய அளவில் முடிவெடுக்கும்போது, நமது மாநிலத்தை அது பாதிக்கின்றது. கூட்டணி தர்மம் அங்கு வருவதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக தான் அதிமுக சுயமாக முடிவெடுப்பதற்கு தான் தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. எங்களுக்கு யார் வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் எஜமானர். மாநிலத்திற்கு எதிரான செயல் வருகின்றபோது, எதிராக சில பிரச்னை வருகின்றபோது சுயமாக முடிவெடுத்து செயல்படுவதற்கு தான் தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லை’ என்றார். அதிமுக ஆட்சியில் மாநில நலனுக்கு எதிராக ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த அனைத்து மசோதாவுக்கு ஆதரவு அளித்துவிட்டு இப்போது அக்கறை இருப்பதுபோல் எடப்பாடி பேசி உள்ளார்.

The post தேர்தல் தேதி அறிவித்த பிறகே அதிமுக கூட்டணி உறுதியாகும்: சொல்கிறார் எடப்பாடி இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது appeared first on Dinakaran.

Tags : AIADMK alliance ,Edappadi ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Madurai ,BAM ,DMD ,Dinakaran ,
× RELATED நான் செல்லும் இடங்களில் எல்லாம்...