×

ஜிஎஸ்டியால் தமிழகத்திலும் எகிறும் தியேட்டர் டிக்கெட் விலை: கொரோனா முடிந்தும் கண்ணீர் வடிக்கும் திரையுலகம்

* மே மாதம் நாடு முழுவதும் ஸ்டிரைக் அறிவிப்பு

ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரி விதிப்பால் நாடு முழுவதும் சத்தமின்றி தியேட்டர் டிக்கெட் கட்டணம் 5 மாதத்துக்கு ஒரு முறை உயர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இனி தியேட்டர் டிக்கெட் கட்டணம் மெல்ல மெல்ல உயரும் அபாய சூழல் நிலவுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி மறைமுக வரியாகும். இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. 5%, 12%, 18%, 28% ஆகிய விகிதங்களில் இந்த வரி விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஜூலை 1 முதல் இந்த வரி வசூல் அமலுக்கு வந்தது. இதில் தியேட்டர்களில் சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விகிதத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதையடுத்து திரையுலகம் திக்கமுக்காடிப்போனது.

ஏற்கனவே நாடு முழுவதும் பல மொழிகளில் ஆண்டுக்கு சுமார் 1100 படங்கள் வரை வெளியாகின்றன. இதில் லாபத்தை தருவது வெறும் 200 படங்கள்தான். அப்படி இருக்கும்போது டிக்கெட் விலையில் 28 சதவீதம் வரி செலுத்திவிட்டால் டிக்கெட் மூலம் கிடைக்கும் படத்தின் வசூலில் எஞ்சிய தொகையில்தான் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வருவதற்கு முன் கேளிக்கை வரி மட்டும்தான் சினிமாவுக்கு இருந்தது. அது வெறும் 5 சதவீதமாக இருந்தது. ஆனால், ஜிஎஸ்டியால் சினிமா உலகம் இருண்ட நிலைக்கு சென்றுவிட்டதாக தயாரிப்பாளர்களும் தியேட்டர் அதிபர்களும் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதையடுத்து நாடு முழுவதும் இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. தியேட்டர்களை மூடி ஸ்டிரைக்கும் நடந்தது. இதையடுத்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த ஆண்டு, 28 சதவீதம் வரி என்பதை 18 சதவீதமாக ஒன்றிய அரசு குறைத்தது. ஆனால், உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த வரியும் அதிகம்தான். இந்நிலையில் திரையுலகினர் கோரிக்கையோ, 5 சதவீத வரி மட்டும்தான். அப்போதுதான் தோல்வி அடையும் 80 சதவீத படங்கள் மூலம் கிடைக்கும் குறைந்த வருவாயை கூட நாங்கள் ஓரளவுக்கு பங்குபோட்டுக் கொள்ள முடியும் என தெரிவித்தனர். ஆனால், ஒன்றிய அரசு திரையுலகினரின் கோரிக்கையை ஏற்கவில்லை.

இதையடுத்து நாடு முழுவதும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்தது. இப்போது நாட்டில் சிங்கிள் ஸ்கிரின் எனப்படும் தனித் தியேட்டர்கள் 80 சதவீதம் மூடப்பட்டுவிட்டன. இப்போது மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள்தான் இயங்கி வருகின்றன. டெல்லியில் இந்த தியேட்டர்களில் ஒரு டிக்கெட் விலை ரூ.250, ரூ.302, ரூ.410 என்ற நிலையில் உள்ளது. மும்பையில் ரூ.220, ரூ.360, ரூ.550 என டிக்கெட் விலை எகிறியுள்ளது. ஐதராபாத்தில் ரூ.150, ரூ.250, ரூ.340, ரூ.400 என உள்ளது. பெங்களூருவில் ரூ.245, ரூ.310, ரூ.425, ரூ.550 என டிக்கெட் விலைகள் உள்ளன. ெசன்னையில்தான் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ரூ.160, ரூ.190 என குறைவாக உள்ளது. ஆனால், இது எல்லாம் சிறு படங்களுக்கான டிக்கெட் கட்டணம்தான். ஒரு பெரிய படம் மற்றும் பெரிய ஹீரோ நடித்த படம் வரும்போது, இந்த டிக்கெட் கட்டணம் மேலும் பல மடங்கு உயர்ந்துவிடுகிறது.

கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர் படங்கள் வந்தபோது பல மாநிலங்களில் டிக்கெட் கட்டணம் 1000 ரூபாயை தாண்டியது. இது எல்லாமே ஜிஎஸ்டி வரி விதிப்பால் நடந்ததுதான். இந்நிலையில் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக நிர்ணயிக்காவிட்டால் மற்ற மாநிலங்களை போல் தமிழகத்திலும் டிக்கெட் விலையை ரூ.300க்கு மேல் உயர்த்த தியேட்டர் அதிபர்கள் ஆலோசித்து வருகின்றனர். கொரோனாவுக்கு பிறகும் திரையுலகம் துவண்டு இருப்பதால் ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க வேண்டும் அல்லது 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி வரும் மே மாதம் நாடு தழுவிய தியேட்டர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்று இந்திய திரைப்பட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

* ஆட்டம் காணும் படங்கள்

தயாரிப்பாளர் டி.சிவா கூறியது: இந்த ஆண்டு மட்டும் பிப்ரவரி வரை 50 படங்கள் வெளியாகிவிட்டன. ஒரு படம் கூட ஓடவில்லை. எல்லா படங்களாலும் எங்களுக்கு பெரும் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. இந்த படங்களால் கிடைத்த குறைந்த வருவாயில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிக்கே சென்றுவிட்டால் திரையுலகினருக்கு என்னதான் கிடைக்கும்? இதற்கு மற்றொரு காரணம், இன்னும் 3 வாரத்தில் ஓடிடியில் புது படம் வந்துவிடும் என்ற மக்களின் எண்ணமும்தான். ஓடிடியால் நல்லதும் நடக்கிறது. கெட்டதும் நடக்கிறது. ஆனால், வருகிற கொஞ்சம் வருவாயிலும் ஜிஎஸ்டி விதிப்பதால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம்.

* எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வரி?

ஒரு படம் தியேட்டரில் ரூ.50 கோடி வசூலிக்கிறது என்றால் ஜிஎஸ்டிக்கு முன்பு வரை ஒன்றிய அரசுக்கு வரி ரூ.2.50 கோடி சென்றது. இப்போது ஜிஎஸ்டிக்கு பிறகு, ஒன்றிய அரசுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியாக ரூ.9 கோடி செல்கிறது. மீதி 41 கோடியில்தான் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பங்கு பிரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

The post ஜிஎஸ்டியால் தமிழகத்திலும் எகிறும் தியேட்டர் டிக்கெட் விலை: கொரோனா முடிந்தும் கண்ணீர் வடிக்கும் திரையுலகம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Corona ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...