×

ஆசர்கானா சுரங்க நடைபாதையை வாகனங்கள் செல்லும் வகையில் விரிவுபடுத்த மக்கள் வலியுறுத்தல்

ஆலந்தூர்: ஆலந்தூரில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத ஆசர்கானா சுரங்க நடைபாதையை, வாகனங்கள் சென்று வரும் வகையில் வாகன சுரங்கப் பாதையாக மாற்றித் தரவேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள ஆசர்கானா பகுதியில் நீண்ட காலமாக பரங்கிமலை, பட்ரோடு பகுதிகளுக்கும் பேருந்து நிலையத்துக்கும் வாகன நெரிசல் மிக்க ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து, கடந்த 2003ம் ஆண்டு, அப்போதைய ஒன்றிய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் சுரங்க நடைபாதையை அமைத்து கொடுத்தார். இந்த சுரங்க நடைபாதையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஜிஎஸ்டி சாலையை கடப்பதற்கு பாதசாரிகள் பயன்படுத்தி வந்தனர்.

இதையடுத்து, ஆலந்தூரில் மெட்ரோ ரயில் நிலையம் வந்ததும், ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே ரயில் பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது அந்த நடைமேடை பாலத்தை பாதசாரிகளும் ஆலந்தூர் பகுதி பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆசர்கானா பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சுரங்க நடைபாதையில் சமீபகாலமாக மக்கள் பயன்பாடு இன்றி பாழடைந்து வருகிறது. மேலும், இந்த சுரங்க நடைபாதையில் எப்போதும் நீரூற்று போல் தண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. இரவு நேரங்களில் மின்விளக்குகளும் வீணாக எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்கு எந்நேரமும் பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் டி.ஆர்.பாலு எம்பியிடம் வார்டு கவுன்சிலர் பிருந்தா மனு வழங்கி வலியுறுத்தியுள்ளார். எனவே, ஆசர்கானா சுரங்க நடைபாதையை இடித்துவிட்டு, அங்கு ஆட்டோ, கார் உள்ளிட்ட பல்வேறு இருசக்கர வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையைக் கடக்கும் வகையில் புதிதாக வாகன சுரங்கப்பாதையாக மாற்றி அமைப்பதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் வலியுறுத்துகின்றனர்.

 

The post ஆசர்கானா சுரங்க நடைபாதையை வாகனங்கள் செல்லும் வகையில் விரிவுபடுத்த மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Asarkana mine ,Alandur ,Asarkana ,Chennai Municipal Corporation ,Alandur Mandal ,Dinakaran ,
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...