×

அம்பர் எனப்படும் உபரத்தினம்

தமிழகத்திலும் பிற நாடுகளிலும் நாட்டுப்புற மருத்துவத்தில் பயன்பட்டு வரும் செம்மஞ்சள், மணி அம்பர் ஒரு கல் அல்ல; அது கல்லாகிவிட்ட மரப்பிசின். சிலவேளைகளில் அந்த பிசினில் ஒட்டிக் கொண்ட பூச்சியும் சேர்ந்து இறுகிப் போய் இருக்கும். அந்தக் கல் அதிக விலை பெறுகின்றது. பாரசீக மொழியின் அன்பர் என்ற சொல்லிலிருந்து `அம்ரி’ என்ற பிரெஞ்சு சொல் உருவாகி, ஆங்கிலத்தில் அம்பர் என்று அழைக்கப்படுகிறது.

அம்பரின் இயல்பு

அம்பரில், மஞ்சள் அம்பர், சாம்பல் அம்பர் என்று இரண்டு வகைகள் உண்டு. அம்பரைத் துணியில் தேய்த்தால் தீப்பொறி பறக்கும். இத்தீப்பொறியை எலக்ட்ரான் என்று கிரேக்கர்கள் அழைத்தனர். அதாவது, இந்த உரசலில் மின் சக்தி உண்டாகிறது. எலக்ட்ரிசிட்டி என்ற சொல், இந்த எலக்ட்ரானிலிருந்து தோன்றியதாகும். அம்பரை குறிக்க பயன்படுத்திய கஃராபா என்ற சொல்லே மின்சாரத்தைக் குறிக்கவும் பயன்பட்டு வருகின்றது.

வண்ணம் பலவிதம்

அம்பர், மஞ்சள், ஆரஞ்சு, வெளிறிய மஞ்சள் ஆகிய நிறங்களில் அதிகம் கிடைக்கும். வெளிறிய எலுமிச்சை நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் அம்பர் கல் கிடைக்கின்றது. சிவப்பாம்பர், பச்சையாம்பர், நீலாம்பர் போன்ற கற்களும் கிடைக்கின்றன. ஐரோப்பாவில் அம்பர், சூரியனான ஹிலியோசின் மகன் சேடன் கொல்லப்பட்டபோது, துக்கத்தில் இருந்த அவனது சகோதரிகள், பாபுலர் மரங்களாக மாறினர். அந்த சகோதரிகள் விட்ட கண்ணீர்தான் மரங்களில் பிசினாக துளிர்த்து நின்றது. அந்தப் பிசின் இறுகிக் கல்லாகி அம்பர் என்று அழைக்கப்பட்டது என்று கிரேக்கர் நம்பினர். ஜெர்மனியில் அம்பர் என்ற சொல்லை கண்ணாடி என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். இந்தக் கல் கண்ணாடி, கல் போல தோன்றும். ஒளி ஊடுருவக் கூடியது. உரசினால் மாவாக வருவதே நல்ல கல். செதில் செதிலாக திப்பி திப்பியாக கொட்டக் கூடாது.

எங்குக் கிடைக்கும்?

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அம்பர் நிறைய கிடைக்கிறது. உலகளவில் பால்டிக் கடல் பகுதியைச் சேர்ந்த மலையடிவாரத்தில் பாறைப் பகுதிகளில் கிடைக்கும் அம்பர், விலை மதிப்பு உயர்ந்ததாகும். சீனர்களின் புலிகண் சீனர்கள் அம்பரை குஃப் போ என்ற பெயரில் அழைக்கின்றனர். இதன் பொருள், புலியின் கண் அல்லது புலியின் ஆவி என்பதாகும். புலியின் ஆவி பூமிக்குள் போய் அம்பராக மாறிவிடுவதாக சீனர்கள் நம்புகின்றனர். இது அதிர்ஷ்டம் தரும் ரத்தினமாக அங்குக் கருதப்படுகிறது.

அம்பர் தீர்க்கும் நோய்கள்

கடுமையான வலியால் அவதிப்படுபவர்கள், அம்பர் பதித்த மோதிரம் அல்லது கழுத்தணி காதணிகளை அணியலாம். அம்பர் வலியை குறைத்து ஒரு சுகமான மன நிலைக்கு கொண்டு வரும். கை கால் குடைச்சல், முதுகு வலி, தலைவலி போன்றவற்றிற்கு அம்பர் நல்ல மருந்தாக அமைகின்றது.

அம்பரும் உடல்நலமும்

பொன் நிறத்தில், ஆரஞ்சு கலரில் உள்ள அம்பர் ரத்தினத்தை வாங்கி அணிந்தால், வலி தீரும். அதைப் போல, மனதளவில் இருக்கும் ஏக்கம், வேதனை, துக்கம் ஆகியவை தீரவும் அம்பர் பதித்த நகைகள் உதவுகின்றன. அம்பரின் ஒளி உடம்பில் ஏற்படுத்தும் மின் காந்த சக்தியின் தூண்டுதலால் மனமும் உடலும் தூண்டப்பட்டு நல்ல செயல்பாட்டுக்கு வரும். எப்போதும் சுறுசுறுப்பாக உற்சாகமாக இருப்பதற்கு அம்பர் வெளிப் படுத்தும் மின்காந்த சக்தி உதவும். அம்பர் அணிவதால், கோயிலுக்குப் போன பலன் கிடைக்கும்.

ஆன்மிக நன்மை

அம்பர், நம் உடம்பில் உள்ள குண்டலினி சக்கரத்தைத் தூண்டி விடும். இதனால், குண்டலினி முதல் உச்சிக்கமலம் வரை தூண்டப்பட்டு நிறைவான ஆன்மிகப் பரவசம் கிடைக்கும். அமுத நிலை ஊற்றெடுக்கும். கண் திருஷ்டி, செய்வினை போன்ற தீய சக்தியால் துன்புறுவோர், அம்பர் அணிவதால் தீய சக்திகள் அவரை அணுகாமல் விலகிவிடும்.

எந்த ராசியினர் அணியலாம்?

எல்லா ராசியினரும் அணியலாம். ஆனாலும், கும்பராசிக்கு அம்பர் மிகவும் உகந்ததாகும். சனியின் ஆதிபத்தியத்தில் இருக்கும் கும்பராசியினரிடம், சூரியசக்தி பெருகுவதற்கு அம்பர் உதவும். இவர்களுக்கு ஆன்மிக சக்தியும், உடல் ஆரோக்கியமும் பெருகுவதற்கு அம்பர் உறுதுணையாக இருக்கும். இந்தியாவில், அம்பர், ரிஷப ராசிக்காரர்களுக்கு யோகம் தரும் ரத்தினமாக கருதப்படுகிறது. சிம்மம், கும்பம், கன்னி, மீனம், ரிஷபம், மகரம் போன்ற ராசியினரும் அம்பர் பதித்த நகைகளை அணியலாம்.

எப்படி அணியலாம்?

அம்பரை வளையல் ஆகவும், கழுத்தில் நெக்லஸ் ஆகவும் அணிவது மிகவும் நல்லது. நிறைய எண்ணிக்கையில் அம்பரத்தினங்கள், பதிக்கப்படும் போது அதிக அளவில் மின்காந்த சக்தி நம் உடம்பிற்குள் போகின்றது.

எப்போது அணியலாம்?

அம்பர் ரத்தினம் பதித்த நகைகளை எப்போதும் அணிந்திருக்கலாம். ஒருவருடைய மனநிலை சரியில்லாமல் குழப்பமாக அல்லது சோர்ந்து போய் இருக்கும்போது mood சரியில்லை என்றால் அப்போது வலது உள்ளங்ககைக்குள் அம்பர் ரத்தினத்தை / மோதிரத்தை / பதக்கத்தை வைத்துக் கொண்டு வலது கையை மூடி, அதன் பெரு விரலை மட்டும் புருவ மத்தியில் இறுதி இருத்தி அழுத்தி பத்து பதினைந்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை மனதிற்குள் `ஓம் நமச்சிவாய’ அல்லது `ஓம் நமோ நாராயணாய’ என்று உச்சாடனம் செய்தால் மனக் குழப்பங்கள் விலகி மனசாந்தி கிடைக்கும்.

ராசிக் கேற்ற நிறத்தில் அம்பர்

சுமார் 300க்கும் மேற்பட்ட வண்ணங்களில் அம்பர் ரத்தினம் கிடைக்கின்றது. எனவே, அவரவர் ராசிக்கு ஏற்ற நிறத்தில் அம்பரை வாங்கி நகையாகச் செய்து அணியலாம். மஞ்சள், செம்மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் அம்பரை மேஷம், சிம்ம ராசியினர் மற்றும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் அணிவது சாலச் சிறந்ததாகும். அவர்களுக்கு சூரியனின் சூரியசக்தியை அதிகமாக பெற்றுத்தர இந்த அம்பர் உதவும்.மஞ்சள் நிற அம்பர் ஆக்க சக்தியைத் தூண்டிவிடும். கருப்பு நிற அம்பர், தீய சக்திகளை விலக்கும். செறி அம்பர் எனப்படும் சிவப்பு நிற அம்பர் உடம்பில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். போனி அம்பர் என்று அழைக்கப்படும் வெள்ளை அம்பர் ஆன்மிக அனுபவத்தைப் பெற உதவும். நீல அம்பர், மற்ற அம்பர்களைவிட தனித்தன்மை கொண்டதாகும். எனவே இதன் விலை அதிகம். கிடைப்பது மிக அரிது.

நன்மைகள்

அம்பர் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் என்றும் நம் நாட்டு மருத்துவத்தில் நம்பிக்கை உண்டு. அம்பர் நல்ல அழகைத் தரும், நல்ல ஆரோக்கியத்தை தரும், தெய்வ நம்பிக்கையை அதிகரிக்கும் போன்ற பொதுவான நம்பிக்கை உண்டு.

The post அம்பர் எனப்படும் உபரத்தினம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...