×

நட்பு..!

இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும் நட்புக்கு எடுத்துக் காட்டாய்ச் சொல்லப்படுபவர்கள் கர்ணன், துரியோதனன், பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன், கபிலர், பாரி, ஔவை, அதியமான், கம்பர், சடையப்ப வள்ளல் என்று பட்டியல் தொடரும். நபிகளாரின் வாழ்வு, நட்புக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும். உலகின் மற்ற ஆன்மிகத் தலைவர்களைப் பின்பற்றுபவர்கள் “சீடர்கள்” என்று குறிப்பிடப்படும் போது, நபிகளாரைச் சமகாலத்தில் பின்பற்றியவர்கள் “தோழர்கள்” (சஹாபாக்கள்) என்றே அழைக்கப்பட்டனர்.இஸ்லாமிய வரலாற்றில் நட்புக்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டும் எனில், அது நபிகளாருக்கும் அபூபக்கருக்கும் இருந்த நட்புதான். நபிகளாரை ஓர் இறைத்தூதர், வழிகாட்டி, நண்பர் என அனைத்து நிலைகளிலும் தம் உயிரினும் மேலாக நேசித்தார் அபூபக்கர். அதேபோல், அபூபக்கரைத் தம் இறுதிமூச்சு வரை மிக அதிகமாக நேசித்து வந்தார் நபிகளார். தம் தோழர் அபூபக்கர் குறித்து யாரேனும் தவறாகப் பேசினால், நபிகளாருக்குக் கோபம் வந்துவிடும்.

“என்னை இறைத்தூதராக யாருமே ஏற்றுக் கொள்ளாத நிலையில், என்னை ஏற்று உண்மைப்படுத்தியவர் அபூபக்கர்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார். மற்றொரு முறை கூறும்போது, “அபூபக்கரின் செல்வம் எனக்குப் பயன் அளித்த அளவுக்கு வேறு யாருடைய செல்வமும் ஒருபோதும் எனக்குப் பயன் அளிக்கவில்லை” என்று குறிப்பிட்டார் நபிகளார். (ஆதாரம் – இப்னு மாஜா)நபிகளாருக்கு ஒரு சிறு துன்பம் ஏற்படுவதைக்கூட அபூபக்கரால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒரு முறை, எதிரிகள் நபிகளாரைத் தாக்கியபோது அபூபக்கர் இடையில் புகுந்து அத்தனை தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டார். வேதனை பொறுக்க முடியாமல் மயங்கி விழுந்துவிட்டார். அவர் கண் விழித்ததும் கேட்ட முதல் கேள்வி, “நபிகளார் எப்படி இருக்கிறார்கள்?”மக்கா வாழ்க்கையில் நபிகளார் எதிர் கொண்ட இன்ப துன்பங்கள் அனைத்திலும் அபூபக்கரும் பங்குகொண்டார். ஹிஜ்ரத் – மக்காவைத் துறந்து மதீனாவுக்கு நபிகளார் புலம்பெயர்ந்தபோது அபூபக்கரின் முழு குடும்பமும் நபிகளாருக்குத் துணைநின்றது. அந்தப் புலம்பெயர்தலிலும் நபிகளாரின் நிழலாகப் பின்தொடர்ந்தார் அபூபக்கர்.

மதீனா வாழ்க்கையின் போது நபிகளார் எதிர்கொண்ட போராட்டங்கள், போர்க்களங்கள், சோதனையான கட்டங்கள் அனைத்திலும் அபூபக்கர் தோள் கொடுத்தார்.ஒரு முறை போர் நிதிக்காக நபிகளார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தபோது, அபூபக்கர் தம் செல்வம் முழுவதையும் கொண்டுவந்து நபிகளாரிடம் சமர்ப்பித்துவிட்டார்.“அபூபக்கரே, உங்கள் குடும்பத்தாருக்காக வீட்டில் என்ன வைத்துள்ளீர்கள்?” என்று நபிகளார் கேட்டபோது, அபூபக்கர் கூறினார்: “இறைவனையும் இறைத்தூதரையும்.”இதயம் நெகிழ்ந்துவிட்டார் இறைத்தூதர் அவர்கள்.
– சிராஜுல்ஹஸன்

The post நட்பு..! appeared first on Dinakaran.

Tags : Karna ,Duryodhana ,Bisirantiyar ,Kopperunjohan ,Kapila ,Pari ,Auvai ,Adiyaman ,Kambar ,Sadayappa Valllal ,
× RELATED போளூர் அருகே துரிஞ்சிகுப்பத்தில் துரியோதனன் படுகளம், தீமிதி விழா