×

2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்: 250 ஏக்கர் பரப்பளவில் பேரீச்சை சாகுபடிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

இரும்பு சத்து அதிகமுள்ள பேரீச்சை சாகுபடியை தமிழ்நாட்டில் 250 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய, ரூ.30 லட்சம் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொய்யாவில் அறுவடை காலங்களில் உருவாகும் பழ ஈக்களால் அதிக சேதம் ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக 10,000 ஏக்கருக்கு இனக்கவர்ச்சி பொறிகள் வழங்கிட ரூ.50 லட்சம் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

* நெகிழி விரிப்பான் தொழில்நுட்பம் மூலமாக பருவமில்லா காலங்களிலும் முருங்கை உற்பத்தி
தமிழ்நாட்டில் முருங்கை 51,800 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டாலும் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை முருங்கைக் காய்களின் வரத்து குறைவாகவே உள்ளது. அந்தவகையில், நெகிழி விரிப்பான் கொண்டு முருங்கை மரத்தை மூடுவதால் இலைகள், பூக்கள் உதிர்வதை தடுத்து பருவமில்லா காலங்களிலும் உற்பத்தியை உறுதி செய்திடும் நோக்கில், முதல்கட்டமாக இந்த தொழில்நுட்பம் சிறிய அளவில் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.

* மிளகாய் பயிரிட ரூ.3.67 கோடி
கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, 2,470 ஏக்கர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் பயிரிடப்பட்டது. 2024-2025லும் மிளகாய் மண்டலம் ஏற்படுத்தப்பட்ட பகுதிகளான ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க, 1,230 ஏக்கர் பரப்பில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்யப்படும். மேலும், நெல், இதர தானியங்களின் அறுவடைக்குப்பின், 3,700 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிரிட ஊக்குவிக்கப்பட உள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் 200 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கென, ரூ.3 கோடியே 67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முந்திரி சாகுபடி அதிகரிக்க ரூ.2.36 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில், முந்திரி 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டிற்கு 43,500 மெட்ரிக் டன் முந்திரி பருப்பு உற்பத்தியாகிறது. மேலும், 4 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு முந்திரி பதப்படுத்தும் வசதிகள் இருந்தும், அதற்கான மூலப்பொருளான முந்திரி 10 சதவீதம் மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, முந்திரி சாகுபடி பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்திட, ரூ.2 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், தரமான முந்திரியை விளைவிக்க இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 2,470 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்கம் அமைத்திட, ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பீர்க்கன், சுரை போன்ற கொடிவகை உற்பத்தியை பெருக்க ரூ.9.40 கோடியில் பந்தல் அமைக்கும் திட்டம்
பந்தல் காய்கறிகளான பாகல், புடல், பீர்க்கன், சுரை போன்ற கொடி வகை காய்கறிகளின் உற்பத்தியை பெருக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், தரமான விளைபொருட்களை பெறவும் உயர் தொழில்நுட்பமான நிரந்தர பந்தல் அமைப்பது இன்றியமையாதது. அதன்படி, 2024-25ல் 770 ஏக்கர் பரப்பளவில், ரூ.9 கோடியே 40 லட்சம் செலவில் நிரந்தர பந்தல் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல், அன்னை ஊட்டிய அமுதினை கண் முன்னே நிறுத்தும் சிறப்புடைய பாரம்பரிய காய்கறி ரகங்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீட்டெடுத்து விவசாயிகளிடையே அந்த ரகங்களை ஊக்குவிக்கும் வகையிலும், 2,470 ஏக்கர் பரப்பு விரிவாக்கம் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்: 250 ஏக்கர் பரப்பளவில் பேரீச்சை சாகுபடிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Union ,State Government ,Tamil Nadu ,Guava ,
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...