×

கேரளாவில் கொளுத்தும் வெயில் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை பொதுவெளியில் வேலை செய்ய தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுவெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் வழக்கத்தைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை மிகவும் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து பல மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடும் வெயில் அடிப்பதால் பொதுமக்கள் அதிகமாக வெயிலில் நடமாடாமல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொதுவெளியில் வேலை பார்ப்பவர்களுக்கு தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி நேற்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுவெளியில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும் வாட்டர் பெல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் சிறிதுநேர இடைவேளைகளில் தண்ணீர் குடிப்பதற்காக பெல் அடிக்கப்படும். பெல் அடித்தவுடன் மாணவர்கள் தண்ணீர் குடிக்க சிறிது நேரம் ஒதுக்கப்படும். இந்த முறை நேற்று முன்தினம் முதல் கேரளாவில் அமலுக்கு வந்தது.

The post கேரளாவில் கொளுத்தும் வெயில் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை பொதுவெளியில் வேலை செய்ய தடை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED கேரளாவில் இதுவரை யாருக்கும்...