×

கோடை வரும் முன் சரும அழகை பாதுகாப்போம்!

நன்றி குங்குமம் தோழி

கோடை வெயிலின் தாக்குதல் பெண்களின் அழகுக்கு எப்போதுமே ஒரு அச்சுறுத்தலாகத்தான் இருந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தினால், அவர்களது அழகான சருமம் கறுத்து, சுருங்கி, பொலிவை இழக்கிறது. கவர்ச்சிமிக்க கண்கள் உஷ்ணத்தால் வதங்கிப்போய் பிரகாசமின்றி காணப்படுகிறது. இந்த வெப்பம் மே, ஜூன் மாதங்களில் அதிகரித்து மேலும் அவர்களின் சருமத்தின் பொலிவினை வாட்டிவிடும்.

சருமத்திற்கு தண்ணீர் மற்றும் கொழுப்புச் சத்து மிகவும் அத்தியாவசியமானது. கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் உள்ள தண்ணீர் அளவில் பற்றாக்குறை ஏற்படும். இந்த நேரத்தில் அதிக அளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொண்டு, உடலில் தண்ணீர் சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்குள் தண்ணீர் தேவை அவசியம் என்பது போல் வெளியே தென்படும் சருமத்தினையும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது முக்கியம். இதற்கு சருமம் வறண்டு போகாமல் இருக்க மாய்சரைசரை பயன்படுத்தலாம். இவ்வாறு இருவழிகளில் தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக் கொண்டால், கோடையில் சரும அழகு அதிகம் பாதிக்காது.

கோடையில் புறஊதாக் கதிர்கள் தான் அதிக பிரச்னைக்குரியது. அவை உடலில் படும் போது சருமம் கறுக்கும். தொடர்ச்சியாக வெயில்பட்டால் அந்த பாதிப்பு அதிகமாகும். புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் இருக்க, சன் ஸ்கிரீன் லோஷன் பாதுகாப்பு தருகிறது. இந்த கிரீமினை வெளியில் செல்லும் போது எல்லாம் உடலில் பூசிக்கொண்டால் புறஊதாக் கதிர்களால் ஏற்படும் கருமையை தடுக்க முடியும். சன் ஸ்கிரீன் லோஷனை முகம், கைகள், கழுத்து, கால் எங்கெல்லாம் வெயில் நேரடியாக தாக்குகிறதோ அங்கெல்லாம் இதனை பூசிக்கொள்ள வேண்டும். காலையில் பூசிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பி, மீண்டும் பிற்பகல் வெயிலில் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால், முகத்தை நன்றாக கழுவிய பிறகு மீண்டும் கிரீமை பூசிக்கொள்ள வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பலர் நீச்சல் பயிற்சிக்கு செல்வது வழக்கம். நீச்சல் குளங்களில் குளோரின் கலந்துள்ள தண்ணீர் பயன்படுத்துவதால், அதில் உள்ள குளோரின் மற்றும் சூரிய கதிர்கள் உடலில் படும்போது சருமம் கறுத்துப்போகும். அவ்வாறு செல்லும் போது சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவது அவசியம். அதன் பிறகு பயிற்சி முடித்தவுடன் மறக்காமல் சுத்தமான தண்ணீரில் தலை முதல் பாதம் வரை குளிக்க வேண்டும்.

அதன் பிறகு சருமத்திற்கு மாய்சரைசர் பயன்படுத்தலாம். இதன் மூலம் சருமம் கறுத்துப் போவதை தடுக்கலாம்.
நமது சருமம் பல தட்டுக்கள் கொண்டது. அதில் சருமத்தின் கீழே உள்ள தட்டு தான் கொலாஜின். இது புரதம் நிறைந்தது. நம்முடைய சருமம் வெயிலில் படும் போது கொலாஜின் சுருங்கும். குறிப்பாக கண்களுக்கு கீழ் உள்ள பகுதியில்தான் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனை சரிசெய்ய, கொலாஜின் கலந்த கிரீமை கண்களின் கீழ் உள்ள பகுதியில் பயன்படுத்தலாம். மேலும் நம் சருமங்களை பாதுகாக்க சில டிப்ஸ்களை கடைப்பிடிக்கலாம்.

*கை, முகம், கண் போன்ற பகுதிகளில் வெயிலினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், வைட்டமின்-ஈ ஆயிலை தடவி, 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

*கோடைக்காலத்தில் பருக்கள் அதிகரிக்கும். அதை தடுக்க. ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு மூடிவைக்கவும். நன்கு ஆறிய பின்பு அந்த நீரை வடிகட்டி முகம் கழுவ பயன்படுத்த வேண்டும். அல்லது கொதிக்கும் தண்ணீரில் புதினா, துளசி, வேப்பிலை மூன்றையும் தலா ஒரு கைப்பிடி வீதம் சேர்த்து ஆறவைத்து வடிகட்டி முகம் கழுவினாலும் முகப்பரு வராது. இதை ஃப்ரிட்ஜில் வைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அதே தண்ணீரில் 4 தேக்கரண்டி எடுத்து, அதில் 3 தேக்கரண்டி முல்தாணி மெட்டி கலந்து பரு இருக்கும் இடங்களில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினாலும் பரு மறையும்.

*சந்தனமும் சரும அழகை மேம்படுத்த உதவும். ஒரு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் பிங்க் நிற ரோஜா இதழ்கள் ஒரு கைப்பிடி சேர்த்து மூடி வையுங்கள். ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி அந்த நீரைக் கொண்டு சந்தன கட்டையை கல்லில் தேய்த்து உரசி, அதில் வரும் சந்தனத்தை கறுமை மற்றும் வியர்க்குரு இருக்கும் இடங்களில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால், வியர்குரு பிரச்னை நீங்கும்.

*இளநீரையும், தர்பூசணி சாறையும் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் பூசவும். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பூசுங்கள். பஞ்சில் சாறை முக்கி கண்களின் மேல் வைக்கலாம். இதனால் சருமம் மற்றும் கண் இரண்டிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் கண்களில் வெயில் காலத்தில் ஏற்படும் சூடு கட்டி வராது.

*சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்க டீயும் பயன்படுகிறது. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில் சிறிதளவு கடலைமாவு கலந்து அந்த பேஸ்டினை கை, முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி நன்கு உலர்ந்து இறுக்கமான பின்பு கழுவுங்கள். அதேபோல் பயன்படுத்திய டீ பேக்கை கழுவிய பிறகு கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருந்தால், உஷ்ணத்தால் ஏற்படும் கண் சோர்வு நீங்கும்.

*வெள்ளரியில் சருமத்திற்கு பலத்தையும், பளபளப்பையும் தரும் வைட்டமின், சிலிக்கான் சத்துக்கள் இருக்கின்றன. வெள்ளரிக்காயை துருவி, அரைத்து பூசிக்கொள்ளலாம்.

*நுங்கை மிக்சியில் அரைத்து அதில் பச்சை பயறு மாவு, அரிசி மாவு கலந்து உடலில் பூசி `ஸ்கிரப்’ போல் பயன்படுத்த வேண்டும். இதனை குளிக்க செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் பூசி, சோப்பு போடாமல் குளிக்கவேண்டும். இது சருமத்திற்கு அதிக பளபளப்பை தரும்.

*கஸ்தூரி மஞ்சள் கிழங்கு 30 கிராம், நான்கு துண்டுகளாக்கி 20 லிட்டர் தண்ணீரில், குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு போட்டு வைக்கவும். அதோடு அரை கப் காய்ச்சாத பாலை சேர்க்கவும். தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியதும் அதில் மாலை நேர குளியல் போட்டால் உடம்பில் உற்சாகம் பொங்கும். தோல் வியாதிகளும் வராது. இந்த குளியலின்போது தலையில் தண்ணீர் படக்கூடாது.

*கோடையில் உடலை உஷ்ணம் அதிகம் தாக்கும். அதனால் சீதோஷ்ண சமன்பாடு சீரற்று இருமல், எரிச்சல், அரிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படும். உஷ்ணத்தை குறைக்க உச்சி முதல் பாதம் வரை உடல் முழுக்க நல்லெண்ணெய் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவேண்டும். பின்பு தலைக்கு சீயக்காயும் உடலுக்கு பச்சை பயறு மாவு பூசி குளிக்கலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் இவ்வாறு எண்ணெய் குளியல் செய்தால், உச்சி குளிரும். வெப்பம் விலகும்.

தொகுப்பு: பிரியா மோகன்

The post கோடை வரும் முன் சரும அழகை பாதுகாப்போம்! appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Dinakaran ,
× RELATED சமையலறை ஃபேஷியல்!