×

ஆயிரம் கண் மயில்தோகை

நன்றி குங்குமம் ஆன்மீகம்

ஆயிரம் கண் மயில்தோகை

படைப்புத் தொழிலின் போது இறைவன் (பாதி திறந்த கண்களுடன்) யோக நிலையில் நின்று அதைச் செய்கிறான். அழிக்கும் போது நெற்றிக்கண் வழியால் அழிக்கிறான். ஆனால் காத்தல் தொழிலின் போதோ ஆயிரமாயிரம் கண்களால் உயிர்களைக் கண்டு அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே உற்றுநோக்கி அவற்றிற்கு வேண்டியதைச் செய்து காத்தருளுகிறார். அதனால், அவனை ஆயிரங்கண்ணோன் என அழைக்கிறோம்.

அவன் ஆயிரமாயிரம் கண்களை உடையவன் என வேதநூல்கள் துதிக்கின்றன. மயில் ஆயிரங்கண்ணுடைய பறவையாக இருப்பதால் அவன் மயிலாக உருவகிக்கப்பட்டு, காத்தல் தொழிலை நடத்த ஆடும் ஆட்டம் கௌரிதாண்டவம் எனப்படுகிறது. காத்தல் தொழிலை நடத்தும்போது மயில்தோகை ஏந்தியவனாகச் சித்திரிக்கப்படுகின்றார்.

மதுரையில் விளங்கும் ஐம்பெரும்சபைகள்

மதுரை சோம சுந்தரப்பெருமான் ஆலயத்தில் வெள்ளியம்பலம் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது. மேலும், மற்ற நான்கு சபைகளை நினைவூட்டும் வகையில் நான்கு அம்பலங்கள் தனித்தனியே அமைந்துள்ளன. இந்த ஐந்திலும் பெருமான் அழகுற நடனமாடிக் கொண்டிருக்கின்றார். ஆயிரக்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், மகாமண்டபத்திலுள்ள வெள்ளியம்பலம் ஆகிய மூன்றிலும் பெரிய அளவிலான நடராஜ மூர்த்தியின் திருவுருவத்தை இப்போது கண்டு மகிழ்கிறோம்.

மற்றைய இரண்டு அம்பலங்கள் பற்றிய செய்தி தெரியவில்லை. இந்த ஐந்து சபைகளுக்கும் உரியதாக ஐந்து நடராஜப் பெருமானின் உலாத்திருமேனிகள் உள்ளன. திருவாதிரை நாளில் இந்த ஐந்து நடராஜர் வடிவங்களும் திருவீதி உலா காண்கின்றனர். இவற்றில் இரண்டு நடராஜ வடிவங்களில் பெருமான் இடது காலை ஊன்றி வலது காலை வீசியாடும் கோலத்தில் உள்ளார்.

இணைகயல் மகர மீன்கள்

ஆலய மண்டபங்களின் விதானத்தில் இணைகயல் (இரட்டை மீன்களின்) புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். இவற்றைப் பாண்டியனின் இலச்சினை என்றும் இவை அமைந்துள்ள கோயில்களைப் பாண்டியர்கள் அமைத்தது என்றும் கூறுவர். அது பொருத்தமானதல்ல. இணைகயல் என்பது பாரத தேசத்தின் புராதன மங்கலச் சின்னங்களில் ஒன்றாகும். ஜைன, பௌத்த சமயங்களிலும் இவை சிறப்புடன் போற்றப்படுகின்றன. ஜைனர்கள் கனவில் தோன்றினால் சிறந்த பலன் கிடைக்கும் என்று நம்பும் பன்னிரண்டு பொருட்களில் இரட்டை மீன்களையும் ஒன்றாகக் கொள்கின்றனர். கலைஞர்கள், மீன்களைச் சாதாரண மீன்களாக அமைக்காமல் மகர மீன்களாக அமைத்தனர். ஆமை, முதலை முதலிய உருவங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மீன்களைக் காண்பதால் செல்வநிலை செழிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

ஓங்காரேஸ்வரர் (மத்திய பிரதேசம்)

ஓம்காரேஸ்வரர் அழகுமிக்க சுயம்பு லிங்கமாகும். ஓங்கார அமலேஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் இதற்குண்டு. நர்மதா நதி தீர்த்தத்தில் அமைந்துள்ள தீவுப்பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. ஓம் எனில் ஆத்மா எனும் ஆன்மிக மந்திரத்தின் சத்தியமான அர்த்தத்தை எடுத்து உணர்த்தி மனித வாழ்வில் ஒளி பெறச் செய்ததால் இப்பெயரால் சிறப்பிக்கப்படுகிறார்.

The post ஆயிரம் கண் மயில்தோகை appeared first on Dinakaran.

Tags :
× RELATED முத்துக்கள் முப்பது-சித்திரை மகளே வருக! சீர் நலம் எல்லாம் தருக!