×

ஒரு பாதி கதவு நீயடி…மறு பாதி கதவு நானடி… இன்று காதலர் தினம்

பிப். 14 – காதலர் தினம். நாட்கள் குறைந்த ஒரு மாதத்தில் எப்படியொரு ரசனையான தினம் பார்த்தீர்களா? இந்த காதலில்தான் எத்தனை எத்தனை ரகங்கள். ‘செடியிலிருந்து ஒரு பூ உதிர்ந்திட்டா அவ்வளவுதான்.. அந்த இடத்துல மீண்டும் பூ முளைக்காது.. அது மாதிரிதான் காதலும்…’ என்கிற மாதிரி, சின்சியரான காதலர்களுக்கும் இருக்கின்றனர். ‘ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா, நர்ஸ் பொண்ணை காதலி… கட்சித்தாவல் இங்கே தர்மமடா…’ என ஆண்டவர் பாடின மாதிரி… இங்கே பிரேக்-அப் ஆனால் என்ன? அரியர் விழுந்தால் அடுத்து எழுதுறதில்லையா…? அடுத்த முயற்சியில் இறங்கணும் ப்ரோ என தன்னையே ஆறுதல்படுத்திக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

‘வருஷத்துக்கு ஒருமுறைதான் இந்த காதலர் தினம் வருது…அட… உனக்கு எனக்கு மட்டும்தான்அது வருஷம் பூரா வருது…’’ – இப்படி கொண்டாடும் காதலர்கள், தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதுதான் காதலின் ஸ்பெஷல். உண்மையான காதலுக்கு நாள், கிழமை எல்லாம் கிடையாதுங்க… அன்றாட வாழ்க்கையில் பார்க், பீச், கடற்கரை என பல இடங்களில் ஏராளமான காதலர்களை பார்க்கிறோம். தினந்தோறும் திரும்பும் திசையெல்லாம் காதல் பரவிக் கொண்டேதான் இருக்கிறது.

மனிதர்களை மட்டுமா? விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் என காதல் பல்கி பெருகிறது. அப்பா, அம்மா, நண்பன், சகோதர, சகோதரிகள், நண்பர்கள், பிடித்த உணவு, இடம், புத்தகம் – இப்படி ஒவ்வொன்றையும் கூட காதலிக்கலாம்… அசையும், அசையா பொருள் மீது தோன்றுவதும் கூட காதல் தான்.. ஓகேவா…? இத்தனை மாதம் இருக்கும்போது, குறை மாசமான பிப்ரவரியில போய், ஏன் காதலர் தினம் வச்சாங்க அப்படின்னு தோணுதுல்ல… வாங்க… கொஞ்சம் டைம் மெஷினை ரிவர்ஸ்ல சுழற்றி, கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு போகலாம்…!

ரோமானிய பேரரசை மன்னர் 2ம் கிளாடியஸ், ஆட்சி செய்து வந்தார். இவரது அக்கப்போர் தாங்காமல், படை வீரர்கள் பலர் சொல்லாமல் கொள்ளாமல் அரண்மனையை விட்டு ஓடி விட்டனர். மத்த வேலைன்னா வர்றோம்.. படை வீரர்னா கஷ்டம் என ஒதுங்கி சென்றனர். டென்ஷன் ஆ 2ம் கிளாடியஸ், அதிரடியாக ஒரு உத்தரவு போட்டார். ‘‘இனி ரோமானிய நாட்டில் யாரும் கல்யாணமே செய்யக்கூடாது. மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும்’’ என்றார்.
ஏனிந்த உத்தரவு தெரியுமா?

கல்யாணம் பண்ணதாலதானே படை வீரர்களா வர யோசிக்குறீங்க… கல்யாணத்துக்கே தடை போட்டால் – இதுதான் மன்னரின் மாத்தி யோசி பிளான். இது அங்கிருந்த பாதிரியார் வாலன்டைனுக்கு சங்கடத்தை தந்தது. மன்னர் உத்தரவை மீறி, பலருக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதை யாரோ ஒருவர் மன்னரிடம் பத்த வைக்க, உடனடியாக பாதிரியாரை பாதாள சிறையில் தள்ளி, மரண தண்டனை விதித்தார். வாலன்டைன் சிறையில் இருந்தபோது, அஸ்டோரியஸ் என்ற சிறைத்தலைவனின் கண் தெரியாத மகளை சந்தித்தார்.

அடுத்து என்ன நடக்கும்னு தெரியாதா? எத்தனை தமிழ் சினிமா பார்த்திருப்பீங்க.. வாலன்டைன் – அஸ்டோரியஸ் இடையே காதல் மலர்ந்தது. மன்னரின் கடும் எதிர்ப்பையும் மீறி காதல் தொடர்ந்தது. இதையடுத்து அஸ்டோரியஸ் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். சிறைப்படுத்தப்பட்டது இருவரையும் மனதளவில் பாதித்தது. மரண தண்டனைக்கான நாள் நெருங்கியது. கிபி 270, பிப்ரவரி 14ம் தேதி கல்லாலே அடிக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு வாலன்டைன் கொல்லப்பட்டார். வாலன்டைன் இறப்பு தினமே ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

* காதல் ரோஜாவே
காதலர் தினத்துக்கான முக்கிய அடையாளமாக திகழ்கிறது ரோஜா. அதுவும் ஓசூர் ரோஜா பூக்களில் ராஜா. காதலர் தினத்துக்காகவே பல வண்ண மலர்கள் இங்கு சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்படுகின்றன. இங்கு பேர்னியர், கார்வெட், டிராபிக்கல், தாஜ்மகால், ரோடோஸ், அவலஞ்சர், அமேசான் நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகின்றன. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், காதலர் தினத்தில் ஏராளமான ரோஜாக்கள் இப்பகுதியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதியாகின்றன. கடந்த சில ஆண்டுகளாக காதலர் தினத்துக்காக மட்டும் சுமார் 1 கோடி மலர்கள் வரை ஏற்றுமதியாகி உள்ளது.

* இதழ்களில் துவங்கி முத்தத்தில் முடியும்
காதலர் தினம் பிப்.14 என்றாலும் பிப்.7ம் தேதியே காதலர் தின கொண்டாட்டம் ஸ்டார்ட் ஆயிடும்.
பிப்.7 ரோஜா தினம்
பிப்.8 காதலை சொல்லும் தினம்
பிப்.9 சாக்லேட் தினம்.
பிப்.10 டெடி தினம்
பிப்.11 சத்திய தினம்
பிப்.12 அணைத்தல் தினம்
பிப்.13 முத்த தினம்
ஒவ்வொரு சிறப்பு தினமே சொல்லி விடும். எதை பரிசாக தரலாம் என்று…?

* எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா…
காதலர் தினத்தில் டிரஸ் கோட் முக்கியமானது. ஒவ்வொரு கலர் ஆடையிலும், ஒரு கதை குட்டி ஸ்டோரி உண்டாம்… படிச்சுக்குங்க… அதை விட முக்கியம் டிரஸ் தேர்வு.. கல்யாணம் ஆனவங்க, இதையெல்லாம் கண்டுக்காதீங்க…!
சிவப்பு – ஓகே கண்மணி…
இன்று நீங்கள் சிவப்பு ஆடை அணிந்தால், சிக்கி விட்டீர்கள் காதலில் என்று அர்த்தமாம். அல்லது சிக்னல் இன்று கிடைக்கும்… ஒரு ஒத்த ரோசாவோ அல்லது மொத்த ரோசாவையோ தூக்கிட்டு போகலாம் ரைட்.

மஞ்சள் – காதல் விடு…விடு…
காதலில் தோல்வி அடைந்தவர். பிரேக்-அப் பார்ட்டி. அதனால கம்முனு கடந்து போக வேண்டாம். ஒரு பஸ்சை தவற விட்டால், அடுத்த பஸ் வர்ற வரை வெயிட் பண்ணுவோம் இல்லையா? அதுபோல வெயிட் பண்ணுங்க சகோ.

ஆரஞ்சு – காதல் அரேஞ்ச்…
ஆசை படத்துல வர்ற அஜித் மாதிரி, உங்கள் நண்பர் ஆரஞ்ச் கலர் டிரஸ் போட்டு போனார்னு வச்சிக்குங்க… பார்ட்டி ப்ரபோஸ் பண்ண போறாராமாம்… கப்புனு அமுக்கி நைட் ஒரு பார்ட்டிக்கு ரெடி பண்ணிடுங்க… ஊத்திக்கினு….!

நீலம் – காதலுக்கு மரியாதை…
நீல வண்ணம் அணிந்து போகிறவர் கொஞ்சம் ரொமான்டிக் பார்ட்டி. இவரை யார் வேண்டுமென்றாலும் அணுகி காதலை தெரிவிக்கலாம். ‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ என இந்த பார்ட்டி சுத்தும்… கல்யாணம் ஆச்சான்னு ஒரு வார்த்தை கேட்டு வைங்க.

பிங்க் – காதலில் விழுந்தேன்
பிங்க் டிரஸ் அணிபவர் இன்று கொஞ்சம் கெத்தாதான் திரிவாப்ல… ஏன் தெரியுமா? அவர் ப்ரபோஸ் பண்ண பையனோ / பெண்ணோ சரி.. சரி.. காதலிச்சு தொலைக்கிறேன்னு ஏத்துக்கிட்ட மிதப்புல இருப்பாப்லயாம்…!

கருப்பு – காதல் கசக்குதய்யா…
பாவம்.. இவரை யாராவது வம்பா சீண்டிடாதீங்க… இவரது காதல் நிராகரிக்கப்பட்டதாம்.. அதனால இவரு மொரட்டு சிங்கிளா வாழப்போறேன்னு சோகமாக இருப்பாராம்… பாவத்தை…!

பச்சை – ஐயாம் வெயிட்டிங்…
ஓகே பண்ணுவாங்களா… இல்லை வேண்டாம்னு ஒதுக்குவாங்களான்னு தெரியாமல் ஒரு குழப்பமான நிலையிலே சுத்துற ஆளுங்க… நடிகர் முரளி மாதிரி காதலுக்காக காலமெல்லாம் காதல் வாழ்க என கானம் பாடும் பார்ட்டிங்க…!

வெள்ளை – வீட்ல விசேஷங்க…
டூயட் பாடலில் வரும் தேவதைகள் அணியும் வெள்ளை ஆடையில் வந்தால், ஏற்கனவே காதலில் விழுந்தவர்னு அர்த்தமாம். அதை விட முக்கியம். அவருக்கு வீட்டில் பேசி முடிச்சுட்டாங்களாம். கொஞ்சம் உஷாரா இருக்கணும்.

பர்ப்பிள் / கிரே – காதல் புளிக்கும்…
இப்போ காதலிக்க எல்லாம் நேரம் இல்லை. காதலிக்கவும் விருப்பமில்லை. கொஞ்சம் வெயிட் பண்ணா மனசு மாறலாம். அதையும் உறுதியாக சொல்ல முடியாது. முயற்சி பண்ணுங்க… முடிஞ்சா பார்க்கலாம்.

பிரவுன் – காதலால் உடைந்தேன்…
உருகி உருகி காதலித்தவர் விட்டு சென்றால் மனசு உடைந்து போகும் அல்லவா? பிரவுன் ஆடை அணிபவர்கள் அப்படியொரு தீரா சோகத்தில் இருப்பவர்களே… அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்… சரியாகி விடுவார்கள்.

The post ஒரு பாதி கதவு நீயடி…மறு பாதி கதவு நானடி… இன்று காதலர் தினம் appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,
× RELATED உலக முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டம்.. அன்பை பரிமாறி கொண்ட காதலர்கள் ..!!