×

கொரோனாவால் இறந்த கணவருக்கு இதய நோய் சான்றிதழ்; 2 ஆண்டாக போராடி நிவாரணம் பெற்ற பெண்: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: கொரோனாவால் இறந்த கணவருக்கு இதய நோய் சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து பெண்ணுக்கு உரிய நிவாரண நிதியை வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் கடந்த சில ஆண்டுக்கு முன் மருத்துவமனையில் 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதனால் அவர் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி இறந்தார். ஆனால் அந்தப் பெண்ணின் கணவர் இறப்புச் சான்றிதழில், அவர் இதய நோயால் இறந்ததாகவும், கொரோனா தொற்றால் இறக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சான்றிதழால், அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவித் தொகையை டெல்லி அரசு மறுத்ததாகக் கூறப்படுகிறது.

தனது கணவர் மட்டுமே குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்து வந்தார். அவரும் இறந்துவிட்டார். எனது கணவர் இதய நோயால் இறக்கவில்லை; மாறாக கொரோனாவால் தான் இறந்தார் என்று அந்தப் பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடந்து வந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘இறந்தவரின் மருத்துவ சான்றிதழில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தொடர் சிகிச்சையால், அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் மருத்துவமனையில் இறந்துள்ளார்.

இறப்புச் சான்றிதழில் இதய நோய் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், அவர் கொரோனா நோயால் பாதிக்கப்படவில்லை என்று அர்த்தமல்ல. எனவே கெரோனாவால் இறந்தவரின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரண உதவியை மாநில அரசு வழங்கிட வேண்டும்’ என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆண்டுக்கு பின் தனது கணவருக்கான நிவாரண உதவியை போராடி மீட்ட பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.

The post கொரோனாவால் இறந்த கணவருக்கு இதய நோய் சான்றிதழ்; 2 ஆண்டாக போராடி நிவாரணம் பெற்ற பெண்: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,New Delhi ,Corona ,Delhi ,
× RELATED ஜாமீனில் விடுவிக்கப்படுபவர்களின்...