×

இரண்டு ஞானங்களை விளக்கும் நாமம்

காமேஸ்வர ப்ரேம ரத்ன மணி ப்ரதிப னஸ்தனீ

இந்த நாமத்திலிருந்து அடுத்து வருகின்ற சில நாமங்கள் அம்பாளின் ஸ்தனங்களையும் அதாவது திருமார்புகளையும், இடைப்பகுதியையும் வர்ணிக்கின்றன. இதற்கு பிறகு வரும் நாமங்களை பார்க்கும்போது, ஸ்ரீவித்யா உபாசனையில் காம கலா தியானம் என்கிற முறை இருக்கிறது. இந்த காமகலா தியானத்தின் சொரூபமாக இருப்பதே திருவாரூர் கமலாம்பிகைதான். ஸ்ரீவித்யாவில் காமகலா தியானத்தைப் பிரதிபலிக்கும் கோயிலெனில் அது திருவாரூர் ஆகும். அப்படிப்பட்ட இந்த காமகலா தியானத்தின் முதல் நாமம் இங்கிருந்தே தொடங்குகின்றது.

இதுநாள் வரையிலும் நாம் சொன்ன நாமங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டு அதன் பொருளைப் புரிந்து கொள்வதே ஒரு தியானம்தான். இன்னும் பார்த்தால் அதன் பொருளே கூட அப்பேற்பட்ட அம்பிகையின் சொரூபத்தை வாக்கால் காட்டுகின்றது. அந்த வாக்கு ரூபமாகவும் உள்ளவளும் அவளே. எனவே, இதற்கு முன்னர் கூறப்பட்ட அனைத்து நாமங்களையும் கேட்டபடி இருங்கள். மனதை அந்த நாமத்தில் தோய்த்து எடுங்கள்.

காமேஸ்வர ப்ரேம ரத்ன மணி ப்ரதிப னஸ்தனீ

காமேஸ்வரர் அம்பிகை மேல் கொள்ளக் கூடிய பிரேமை. சிவபெருமான் அம்பிகைமேல் கொள்ளக் கூடிய அன்பு. அதை வார்த்தைகளில் அந்த பிரேமையையும் அன்பையும் கொண்டு வர முடியாது. அப்படிப்பட்ட பிரேமையை காமேஸ்வரர் அம்பிகையின் மீது வைக்கிறார். இப்போது அம்பிகை காமேஸ்வரருக்கு என்ன கொடுக்கிறார். அம்பாளும் தன்னுடைய பிரேமையை அளிக்கிறாள். காமேஸ்வரர் தன்னுடைய பிரேமையை ஒரு ரத்ன மணிபோன்று அம்பிகைக்கு கொடுக்கிறார். இந்த இடத்தில் எப்படி கொடுக்கிறாள் எனில், என்னவொரு விசேஷமெனில்.. அவர் தன் மேல் காண்பிக்கக் கூடிய பிரேமையை விட இரண்டு மடங்கு அம்பிகை காமேஸ்வரர் மேல் காண்பிக்கிறாள். காமேஸ்வரர் கொடுத் ததுபோல் இரு மடங்கு ரத்னமணியை அளிக்கிறாள். அந்த இரு மடங்கு பிரேமை மாதிரி இருக்கிறது அம்பிகையினுடைய ஸ்தனங்கள். ஏனெனில், ஸ்தனங்கள்
என்றாலே இரட்டைதான்.

ஏன் இரட்டை எனில் காமேஸ்வரருடைய பிரேமை இரட்டிப்பாகிவிட்டது, அங்கு. அவர் அளித்தது ஒன்று எனில் அம்பிகை இரண்டு பிரேமை ரத்ன மணிகளை காமேஸ்வரருக்கு அளிக்கிறாள். அந்த இரண்டு ரத்னமணிகளும் அம்பாளுடைய இரண்டு ஸ்தனங்கள். அவர் கொடுத்தது கண்ணுக்கே கூட தெரியாது. ஆனால், அம்பாள் அளித்திருப்பது தெரிகின்றது. மேலே சொல்லப்பட்டது பொதுவான வெளிப்படையான அர்த்தம் காமேஸ்வரர் யாரெனில், சுத்த ஞான சொரூபம். அதுவே ஸ்வ சொரூபம். அதுவே ஆத்ம சொரூபம். அங்கு நிலையான ஞானம் மட்டுமே உள்ளது. வேறு எதற்கும் இடம் கிடையாது. இங்கு காமேஸ்வரர் அம்பிகையின்மீது பிரேமையை செலுத்துகிறார் என்பதற்கு என்ன அர்த்தம் எனில், காமேஸ்வரருடைய சுத்தமான ஞான சொரூபம்தான் அம்பாள் ரூபத்தில் வருகிறது. இப்போது அவர் பிரேமை அம்பிகையிடம் வருகின்றது. அம்பிகையானவள் இதை பெற்றுக் கொண்டது எதற்காக எனில், இந்த ஜீவாத்மாக்களை தன்னுடைய குழந்தைகளாக நினைத்து, இந்த ஒட்டுமொத்த ஜீவாத்மாக்களை ஞான சொரூபமாக உள்ள காமேஸ்வரரிடம் சேர்க்க வேண்டியதுதான் வேலை.

காமேஸ்வரரிடம் இருப்பது சுத்தமான ஞானம் என்று வைத்துக் கொண்டால், அம்பிகையின் பிரேமை இரட்டிப்பாகின்றது. எப்படி இரண்டு மடங்காக மாறுகின்றது எனில், ஒன்று பர ஞானம். இன்னொன்று அபர ஞானம். இந்த பர ஞானமும் அபர ஞானமும்தான் அம்பிகையினுடைய அம்பாளுடைய இரண்டு ஸ்தனங்களாக இருக்கின்றன. இப்போது பர ஞானம். அபர ஞானம் என்பதன் விளக்கத்தை கொஞ்சம் பார்ப்போமா… இதற்கான ஒரு விளக்கம்
முண்டகோ உபநிஷத்தில் இருக்கின்றது. ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், முதலான வேதங்களும்… அந்த வேதங்களுக்குரிய அங்கங்கங்கள், ஆறு தரிசனங்கள், அதிலுள்ள வேதாந்தம், வேதாந்தத்திற்குரிய உபநிஷதம், அதற்குப் பிறகான பிரஸ்தான த்ரயம், அதற்கான பாஷ்யம் என்கிற உரைகள் என்று எவ்வளவு நூல்கள், துதிகள் இருக்கின்றனவோ… த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் … என்று இந்த ஒட்டுமொத்த விஷயங்களையும் முண்டகோ உபநிஷதமானது அபர ஞானம் என்று சொல்கிறது.அப்போது பரஞானம் என்பது என்னவெனில், அந்த உண்மைப் பொருளை அப்படியே அறிந்து கொள்வது பரஞானம்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின்…

TRUTH IS PATHLESS LAND என்பதே ரஞானமாகும்.

ஆனால், இந்த அபர ஞானமே நம்முடைய நிலைக்கு இறங்கி அங்கு பரஞானம் என்று ஒன்று இருக்கின்றது. அதற்கு பிரம்மம் என்று பெயர். அதுவே உங்களின் சொரூப நிலை. அதுவே உங்களின் யதார்த்த நிலை. அதுவே நீ… என்று
காண்பித்துக் கொடுக்கின்றது.ஒரு குரு வந்து இதோ பாரப்பா… நீ என்ன தேடுகின்றாய். வாழ்க்கை என்றால் என்ன… என்று தொடங்கி கோயில், வழிபாடு, துதிகள், மந்திர உபதேசம், வழிபாடு, உபாசனை என்று பெரிய பட்டியல் போட்டு சித்தாந்தம், வேதாந்தம் என்று மேலே மேலே சென்று மனதை நன்கு பக்குவப்படுத்திய பிறகு இவையெல்லாம் அபர ஞானம் என்று சொல்வார். இவற்றிற்கும் மேலாக அந்த பரஞானத்தை அப்படியே அறிந்து கொள்ள வேண்டுமென்றும் சொல்வார்.இது பாரத தேசத்தில் உள்ள எல்லாவிட சம்பிரதாயத்திலும் இருக்கும் விஷயமாகும். இந்த அபர ஞானத்தை ஒதுக்கவும் முடியாது. ஒதுக்கவும் கூடாது. பாதை என்னவென்று தெரிந்தால் பாதையே இல்லை என்று தெரியவும் ஒரு பக்குவத்தை பெறமுடியும். எனவே, இந்த இடத்தில் அபரஞானமும் முக்கியமே ஆகும். இல்லையெனில் ஞானம் என்கிற சொல் கூட நம் காதில் விழாது.

பிரம்ம என்று ஒன்று இருப்பதையே வேதங்கள் போன்ற நூல்கள்தான் சுட்டிக் காட்டுகின்றன. ஏன் சைவம் எனில் தேவார திருவாசகங்கள்… வைணவம் எனில் பாகவதம், பாசுரங்கள்… என்று எல்லா சம்பிரதாயங்களிலும்
சுட்டிக் காட்டுகின்ற விஷயங்கள் நேரடியான ஞானமாக இல்லாமல் அபர ஞானமாக இருக்கின்றன. இப்போது இதை புரிந்து கொண்டு பரஞானத்தை அப்படியே உணர வேண்டியதுதான் பாக்கி. ஏனெனில், ஒரு கட்டத்தில் இந்த நூல்கள் கொடுக்கும் அறிவானது வித்வத்வத்தில் கொண்டு போய் விட்டுவிடும். நம் மூளையிலிருந்து இறங்காமல் மிகுந்த கனமாகிவிடும். எனவே, பரஞானத்தில் எல்லையை உணர வேண்டும் என்பதற்காகவே அம்பிகையின் இரண்டு ஸ்தனங்களையும் இங்கு உவமையாக்கி இருக்கிறார்கள்.

ஒரு குழந்தை தாய்ப்பால் அருந்தும்போது எப்படி இரண்டு ஸ்தனங்களிலிருந்து அருந்துமோ அதுபோல பர ஞானத்தையும் அபர ஞானத்தையும் அம்பிகையே இங்கு அமுதமாக ஊட்டுகின்றாள் என்று அர்த்தம். இல்லை
யெனில், ஜீவன்கள் எப்படி கரையேறும்.காமேஸ்வரர் தனித்த பிரேமையை அம்பிகையிடம் அளித்தால், அம்பிகையோ எல்லோரையும் கடைத்தேற்றும் பொருட்டு இரண்டு ஞானமாக திருப்பி அளிக்கின்றாள்.
அப்போது உலகிலுள்ள மார்க்கங்கள் காட்டும் அனைத்து விஷயங்களும் அம்பிகையின் கருணையே ஆகும். இப்போது அந்த மார்க்கங்களையும் தாண்டி தனித்து தானே தானே… என்றிருக்கும் சொரூபத்தையும் அவளே காட்டுகின்றாள். இரண்டையும் அவளே அருள்கிறாள்.காமேஸ்வரர் அளிக்கும் பரஞானத்தை நம்மால் பிடிக்க முடியாது என்று அம்பிகை தெரிந்து கொண்டே இப்படி இரண்டு விதமான பிரேமையோடு நம்மை உய்விக்கின்றாள். சம்சாரம் எனும் பெருங்கடலிலிருந்து மீட்டெடுக்கிறாள்.அத்வைதமாக இருப்பதை… நமக்காக துவைதமாக்கி காட்டி… அபர ஞானத்தை உண்டு பண்ணுகிறாள். ஏனெனில், எல்லாமுமே வாக்குக்கு அப்பாற்பட்டதெனில் எதைப்பற்றி யார் பேசமுடியும். எதை அடைய முடியும். சாத்தியம் இங்கு பரஞானம் எனில், அதற்கான சாதனமாக அபரஞானத்தை உண்டு பண்ணுகிறாள். சாதனையும் சாத்தியமும் இரண்டுமே சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனாலேயே இரண்டு ஸ்தனங்களாக காண்பிக்கப்படுகின்றது.

இந்த நாமத்திற்கான கோயில் சீர்காழி தோணியப்பர் ஆலயமாகும். இங்கு அம்பிகையான பெரிய நாயகியான திருநிலையா நாயகியானவள் ஞான சம்மந்தருக்கு நேரடியாகவே பாலூட்டுகின்றாள். அதைப்பற்றி கொஞ்சம்பார்ப்போம் வாருங்கள்.சோழவள நாட்டில் சீர்காழியில் சிவபாத இருதயர், பகவதி அம்மையார் தம்பதியருக்கு ஆளுடைப் பிள்ளை என்கிற திருஞானசம்பந்தர் தெய்வீகக் குழந்தை யாக பிறந்து சீரும் சிறப்போடும் வளர்ந்து வந்தார். தந்தையார் நீராடும் பொருட்டு சீர்காழி திருக்கோயிலில் உள்ள திருக்குளத்தை அடைந்தார் குளக்கரையில் திருஞானசம்பந்தரை அமரச்செய்து சிவபாத இருதயர் நீருள் மூழ்கி குளித்துக் கொண்டிருந்தா். சிறிது நேரமாக தந்தையாரைக் காணாமல் அழுதார். அப்போது அம்மையப்பராக எழுந்தருளிய சிவபெருமான் திருக்குளத்தின் கரையை அடைந்து “”அழுகின்ற பிள்ளைக்கு முலைப்பாலைப் பொன் கிண்ணத்தில் ஊட்டுக ” என அம்மையிடம் சொன்னார். அம்மையும் அவ்வாறே திருமுலைப்பாலை பொற்கிண்ணத்தில் கறந்தருளி சிவஞானமாகிய அமிழ்தத்தை குழைத்து அழுகையை தீர்த்தருளினார்.
இறைவன் அருளால் ஞானம் உண்ட ஆளுடைய பிள்ளையாரை சேக்கிழார் பெருமானார்…

‘‘சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு ஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் ” என்கிறார்.

உவமையிலாக் கலைஞானம் என்கிற அபரஞானத்தையும், உணர்வரிய மெய்ஞானம் இரண்டும் இங்கு வருவதை கவனியுங்கள். இப்படி அம்பிகையானவள் தன்னுடைய ஸ்தன்ய பானமான (பால்) ஞானப் பாலை கொடுத்தபோது உணர்ந்தார்.அப்போது அம்மையப்பராக எழுந்தருளி வந்த சிவபெருமான் திருக்கோயிலை நோக்கி எழுந்தருளினார். ஞானசம்பந்தரும் அந்த திருவுருவத்தை விடாது தொடர்ந்து திருக்கோயிலை நோக்கி நடந்தார். இந்த நிகழ்ச்சிகளை கண்டு வியந்த சிவபாத இருதயரும் திருக்கோயிலுக்குள் சென்றார்.

The post இரண்டு ஞானங்களை விளக்கும் நாமம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பஞ்சதேகமூர்த்தி