×

தமிழ்நாட்டின் கல்வி புரட்சியால் 1.19 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு: நான் முதல்வன் திட்டத்தால் சாதனை, பள்ளிக்கல்வித்துறை முக்கிய நோக்கம்

* கல்வியை நவீனமயமாக்க ரூ.1,150 கோடிக்கு டெண்டர்

* இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்

தரமான கல்வியை மாணவர்களின் தாய்மொழியிலேயே வழங்குதல், மாணவர்கள் தங்களது எண்ணங்களை அச்சமின்றி வெளிப்படுத்துவதற்கு அளவற்ற வாய்ப்புகளை வழங்குதல், ஆண்டுத் தேர்வு எழுதும்போது மாணவர்களிடையே எவ்வித கவலையோ, அச்சமோ, மன அழுத்தமோ ஏற்படாத வகையில் அமையச் செய்தல், மாணவர்கள் கற்றவற்றை வெளியுலக நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி அறியும் ஆற்றலை உருவாக்குதல், சமூகப் பிரச்சனைகளைக் களைவதற்கு அடையாளம் காணும் ஆற்றலை மாணவர்களிடையே ஏற்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாற்றி வருகிறது.

புதிய ஆட்சி அமைந்த உடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இளைஞரை நியமிக்க வேண்டும் என்ற அனைவரின் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நியமித்தார். அதன்படி, கல்வித்துறையில் முதல்வரின் கனவை நிறைவேற்றும் வகையில் பல திட்டங்களை மாணவர்களின் நலன் சார்ந்து அறிவித்து அதனை வெற்றிகரமாகவும் நிறைவேற்றி வருகிறார். மேலும், இத்திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை செயலர் குமரகுருபரன் உறுதுணையாக இருந்துவருகிறார்.
இதுதவிர்த்து, தமிழக பள்ளிகளை உலகத்தரத்தில் உயர்த்தும் வகையில் பல்வேறு நவீன திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

இதற்காக ரூ.1150 கோடிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறை மேம்பட முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள்: இல்லம் தேடிக் கல்வி திட்டம்: இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் சிந்திக்கத் துணியாத ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை கொண்டு வந்து கல்வித்துறையில் புதிய புரட்சியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது. இத்திட்டம் மூலம் குழந்தைகளின் வசிப்பிடத்தில் மையங்கள் அமைத்து, மாலை நேரங்களில் தன்னார்வலர்களின் துணையுடன் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 1.89 லட்சம் தன்னார்வலர்கள் களத்தில் பணியாற்றுகின்றனர். பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியில் 3ல் 2 பங்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் சரி செய்யப்பட்டுள்ளதாக கலிபோர்னியா சாண்டியாகோ பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டது. எண்ணும் எழுத்து திட்டம்: எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம், அரும்பு, மொட்டு, மலர் என்று மூன்று படிநிலைகளில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அடுத்தாண்டு 8 வயதுள்ள குழந்தைகளை எழுதுதல் மற்றும் வாசித்தலில் திறனுடையவர்களாக மாற்ற இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர் மனசு பெட்டி: 31,214 அரசு இடைநிலைப்பள்ளிகள், 6,177 மேல்நிலை பள்ளிக்கூடங்களிலும் புகார் பெட்டி வைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கான பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இளந்தளிர் இலக்கிய திட்டம்: குழந்தைகளின் படைப்பாற்றலை (பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஓவியம் தீட்டும் ஆற்றல்) மேம்படுத்தவும் நன்னெறி கல்வியை கற்பிக்கவும் மற்றும் அறம்சார் சமூக விழுமியங்களை வளர்த்தெடுக்கவும் பள்ளிக்கல்வித்துறையால் ‘இளந்தளிர் இலக்கிய திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.

நான் முதல்வன் திட்டம்: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் இலக்காக ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 15 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உயர் தரத்தில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் வெளியான ஆய்வுகளின் படி, 2022 -23ம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்று 1.19 லட்சம் மாணவர்கள் பணி ஆணை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், 61,920 பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் 57,313 கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

கடைக்கோடி சாமானிய குழந்தைகளின் கல்விக்கும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உண்டாக்கவும் உதவுகிறது. ஹை – டெக் லேப் திட்டம்: மாணவர்கள் இணைய வசதியுடன் கல்வி கற்கும் வகையில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் (ஹை-டெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் மூலம், முதற்கட்டமாக 6,029 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லும்போது, அதற்கான நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகள் மற்றும் அலுவல் பணிகள் பெரும்பாலும் கணினி சார்ந்தவையாக இருக்கும் என்பதால் கணினி திறனை மேம்படுத்த உதவுகிறது.

அந்தவகையில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களில் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கணினி ஆய்வகங்கள் மூலம் ஆங்கில திறன் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இத்திட்டங்கள் மட்டுமின்றி, பள்ளி மேலாண்மை குழுக்கள், பள்ளி செல்லா பிள்ளைகளை கண்டறிய செயலி, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, பயிற்சி தாள்களுடன் கூடிய பயிற்சி புத்தகம்,

ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, வகுப்பறை உற்று நோக்கு செயலி, வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு, முத்தமிழறிஞர் மொழிப்பெயர்ப்பு திட்டம், கல்வி தொலைக்காட்சி, வயதுவந்தோருக்கான கற்போம் எழுதுவோம் திட்டம், கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு, மின் ஆசிரியர் என்ற உயர் தர டிஜிட்டல் செயலி என பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டங்களால் தமிழ்நாட்டின் கல்வி புரட்சிக்கு வித்திடும் வகையில் செயலாற்றுவதை பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டுகின்றனர். இதற்கிடையில், கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் நவீன ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய யுக்திகளை கொண்டுவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.1150 கோடி மதிப்பில் ஒப்பந்தத்தை பள்ளி கல்வித்துறை கோரியுள்ளது.

இத் திட்டம் முழுமைபெற்று விரைவில் நடைமுறைக்கு வரும். அப்போது இந்த நவீன திட்டங்களால் தமிழகத்தின் கல்வித்தரம் பல மடங்கு உயரும். டெல்லியில் ஒரு சில பள்ளிகளில் தற்போது ஸ்மார்ட் வகுப்பறை கொண்ட பள்ளிகள் உள்ளன. கல்வித்துறையில் இந்த புதிய திட்டங்கள் செயலாகும்போது டெல்லியை விஞ்சும் அளவுக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ஸ்மார்ட் பள்ளிகள் அமையும். தனியார் பள்ளிகளை அரசு பள்ளிகள் பின்னுக்குத் தள்ளி உலகத்தரத்திலான நவீன வசதிகள் கொண்ட கல்விச் சூழலை தமிழகம் பெற்று கல்வி புரட்சிக்கு வழிகோலும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பது.

* பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் பள்ளி இறுதி வகுப்பு வரை 100% தக்க வைத்தல்.

* மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை முழுமையாக நீக்குதல். குறிப்பாக கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட விளைவுகளை சரி செய்தல்.

* மேம்படுத்தப்பட்ட கற்றல் விளைவுகளால் மாணவர்கள் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை அடைத்தல்; அடிப்படை வாசித்தல்,எழுதுதல், எண்ணறிவு பெறுதலை உறுதி செய்தல்.

* பாதுகாப்பு, ஆரோக்கியம் இவற்றை உறுதி செய்வதற்கான வாழ்க்கை திறன்களை மாணவர்களுக்குஅளித்தல்.

* பள்ளிகள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.

* ஆசிரியர்கள்,அலுவலர்களின் பணித்திறனை மேம்படுத்தும் பணியிடை பயிற்சிகளை வழங்குதல்.

* தொழில்நுட்பம் வாயிலாக கற்றல் கற்பித்தல் முறைகளில் முன்னேற்றம் காணுதல்.

* நவீன உலகின் நடைமுறை தேவைகளுக்கு ஏற்ப வாழ்க்கை திறன்களை மாணவர்களுக்கு அளித்தல்.

The post தமிழ்நாட்டின் கல்வி புரட்சியால் 1.19 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு: நான் முதல்வன் திட்டத்தால் சாதனை, பள்ளிக்கல்வித்துறை முக்கிய நோக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mudhalvan ,Revolution ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...