×

தினமும் அசைவ உணவுகள் சாப்பிடலாமா? சமையல் வேலையை குறைப்பதாக நினைத்து உடல் நலத்தில் கவனம் செலுத்தாத இளம்தலைமுறை: டாக்டர்கள் சொல்வது என்ன…

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் சலித்துக் கொள்ளும் ஒரு விஷயங்களில் தினமும் என்ன சமைப்பது என்பது குறித்துதான். முந்தைய காலகட்டங்களில் காலை டிபன் என்பது பெரும்பாலும் நீராகாரம் எனப்படும் பழைய சோறுதான். அதில் தண்ணீர் ஊற்றி காலை எழுந்தவுடன் குடித்துவிட்டு வேலைக்குச் சென்று விடுவார்கள். இல்லையென்றால் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட திணை வகைகளில் கஞ்சி செய்து குடித்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள். அப்போது நமது முன்னோர்களின் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. பின்னர், உணவு வகையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. தற்போதுள்ள சூழ்நிலையில் காலை டிபன் என்பதில் மிக முக்கிய இடம் பிடிப்பது இட்லி, தோசை, பூரி, பொங்கல் உள்ளிட்டவை தான். பெரும்பாலானோர் வீடுகளில் மாவு அரைத்து விட்டால் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு அந்த மாவை ப்ரிட்ஜில் வைத்து காலையில் இட்லி, இரவில் தோசை என மாற்றி மாற்றி அந்த மாவு காலியாகும் வரை அதை பயன்படுத்தி வருகின்றனர்.

ப்ரிட்ஜில் வைத்த மாவு புளித்து விட்டால்கூட அதனை விடாமல் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை சேர்த்து ஆனியன் தோசையாக சாப்பிடுகின்றனர். இவ்வாறு காலை மற்றும் மாலை ஆகிய இருவேளையும் அதிகளவில் அரிசியில் செய்யப்பட்ட இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்கள் பலரது வீடுகளை இன்றுவரை பிரதான உணவாகிவிட்டது. இதுபோக பூரி, சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகளையும் தற்போது அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர். பூரிக்கு எண்ணெய் அதிகம் தேவைப்படுவதால் பெரும்பாலானோர் சப்பாத்தியை இரவில் சாப்பிடுகின்றனர். அவ்வாறு சாப்பிடப்படும் சப்பாத்தி சுத்தமான கலப்படம் இல்லாத கோதுமை மாவில் செய்யப்பட்டதா என்று கேட்டால் அதிலும் பல பிரச்னைகள் உள்ளன. நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் சப்பாத்தி மாவு, அதாவது அரைத்த கோதுமை மாவில் எவ்வளவு கோதுமை உள்ளது என்பது யாருக்குமே தெரியாது. முழுவதுமாக கோதுமையை அரைத்து கோதுமை மாவாக விற்கிறார்கள் என நினைத்து நாம் வாங்கி அதனை பயன்படுத்துகிறோம். அந்த கோதுமை மாவு பாக்கெட்டில் பின்புறம் உள்ள விஷயங்களை நாம் படிப்பது கிடையாது. அது முழுமையான கோதுமை மாவு கிடையாது. எனவே அந்த விஷயத்திலும் மக்கள் கவனமாக இருப்பதில்லை.

இவ்வாறு தற்போது மக்கள் அதிகம் பயன்படுத்தும் உணவு வகைகளில் அரிசி மற்றும் கோதுமை ஆகிய இரு விஷயங்களிலும் பிரச்னைகள் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, தினமும் என்ன சமைப்பது, யார் சமைப்பது என்ற பிரச்னைகளில் இருந்து வெளியேற பலர், யாரும் எந்த கேள்வியும் கேட்காத வகையில், தற்போது அசைவ உணவுக்கு மாறிவிட்டனர். முந்தைய காலகட்டத்தில் அசைவம் என்பது வாரம் ஒருமுறை என ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பிட்டு வந்தனர். அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை என வாரம் இருமுறை அசைவம் சாப்பிட்டு, தற்போது வாரத்தில் 4 நாட்களில் இருந்து 5 நாட்கள் வரை அசைவ உணவுக்கு மாறிவிட்டனர். எதனால் இந்த மாற்றம் வந்தது என்று பார்த்தால் சைவம் சார்ந்த உணவுகளை சமைக்கும்போது ஒரு வீட்டில் சாதம், சாம்பார், பொரியல், ரசம் தேவைப்படுகிறது. சாம்பாருக்கு பருப்பு வகைகளும். பொரியலுக்கு காய்கறிகளும், ரசத்திற்கு தக்காளி, மிளகு போன்ற பொருட்களும் தேவைப்படுகிறது. ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாங்கி சமைக்க வேண்டி உள்ளது.

இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் உள்பட பலரும், மிகவும் சலித்துக் கொள்கின்றனர். அதுவே ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு பிரியாணி செய்தால் உடன் ஒரே ஒரு வெங்காய பச்சடி மட்டும் செய்தால் போதும், அன்றைய தினம் முடிந்துவிடும் என நினைக்கின்றனர். இதே போன்று மீன் குழம்பு செய்தால் அதனை 2 நாட்களுக்கு வைத்து சாப்பிடுகின்றனர். சைவ உணவுகளை சமைக்கும்போது தனித்தனியாக ஒவ்வொரு விஷயத்தையும் வாங்க வேண்டி உள்ளது. அசைவ உணவில் ஒரே ஒரு பொருள் சிக்கன் அல்லது மீன் போன்ற பொருட்களை வாங்கி விட்டால் அந்த நாள் முழுவதும் அதை வைத்து முடித்து விடுகின்றனர். இதனால் செலவும் ஒரு அளவிற்கு குறைகிறது. வேலையும் குறைகிறது என சிலர் தெரிவிக்கின்றனர். இதனால் தற்போது தினமும் அசைவ உணவு சாப்பிடும் வழக்கம் பலரிடம் வந்துள்ளது. வீட்டில் குழைந்தைகளும் அசைவ உணவுகளுக்கு அடிமையாகி, பெற்றோரிடம் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். சாப்பிடும்போது பல விதமான சத்துக்கள் நமது உடலில் கிடைக்கின்றன. சாம்பார் சாப்பிடும்போது பருப்பு வகைகளில் இருந்து புரதம், கீரை வகைகளை சாப்பிடும் போது பல நல்ல சத்துக்களும் கிடைக்கின்றன. மேலும் பல்வேறு காய்கறிகளில் இருந்து உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கின்றன. இறுதியாக நாம் உணவில் ரசம் சேர்க்கும்போது கூட அதில் உள்ள மிளகு, சீரகம் உள்ளிட்ட பொருட்களால் ஜீரண தன்மை ஏற்பட்டு சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணம் அடைந்து விடுகிறது.

ஆனால் அசைவ உணவுகளை பொருத்தவரை எளிதில் ஜீரணம் ஆகாது. மேலும் அசைவ உணவுகளை சமைக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும் எனவும், சமைத்த அசைவ உணவுகளை ப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூட செய்து சாப்பிடக்கூடாது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் பணத்தை மிச்சப்படுத்துகிறேன் என்று பலரும் அசைவ உணவுகளை, அதுவும் சமைத்த அசைவ உணவுகளை ப்ரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் சூடு செய்து சாப்பிடுகின்றனர். இதனால் ஒரு பொருளை சமைக்கும்போது நல்ல கொழுப்பாக இருக்கும் உணவு பொருட்கள் அதன் பிறகு கெட்ட கொழுப்பாக மாறி மனிதர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மேலும் பல இடங்களில் இறைச்சிகளை முறையாக பதப்படுத்தாமல் கையாளுகின்றனர். அதனை அடிக்கடி வாங்கி பயன்படுத்தும்போதும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்த காலகட்டத்தில் நமது முன்னோர்கள் உணவையே மருந்தாக எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் ஒவ்வொரு கீரைகளின் பெயர்களைச் சொல்லி அதனை சாப்பிடச் செய்தனர். குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்பட்டால் வல்லாரை கீரை, மூட்டு வலிக்கு முடக்கத்தான், சளி பிரச்னைக்கு தூதுவளை, கிட்னி பிரச்னைக்கு மூக்கரட்டான் என ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு கீரைகளை பரிந்துரை செய்தனர். மேலும் மதிய நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும், இரவு நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் என தெளிவாக சில வரையறைகளை நமக்கு கொடுத்துவிட்டுச் சென்றனர்.

ஆனால் இன்று மூன்று வேளையும் அசைவம், அதிலும் இரவிலும் பிரியாணி, பரோட்டா சால்னா என நம்மவர்கள் சாப்பாட்டு விஷயத்தில் படு பாதாளத்தில் விழுந்துவிட்டனர். இதனால் 40 வயதை கடக்கும்போதே பல பிரச்னைகளை சந்தித்து 45 வயதில் ஏதாவது ஒரு நோய்க்கு முழுமையாக அடிமையாகி அதன்பிறகு 60 வயது வரை மாத்திரை, மருத்துவமனை என சுற்றி 65 வயதில் தங்களது முடிவை தேடிக் கொள்கின்றனர். செலவு குறைவாக ஆகிறது, வேலையும் எளிதில் முடிந்து விடுகிறது என நினைக்கும் குடும்ப பெண்கள் அதிகரிக்கும், தொடர்ச்சியாக அசைவ உணவு சாப்பிட்டால், அதனால் ஏற்படும் உடல் உபாதைகளை கவனத்தில் கொண்டு, குழந்தைகளுக்கு நோய்களை விட்டு செல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தால் இது போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

* உணவில் அக்கறை செலுத்த வேண்டும்

உணவுப் பழக்க வழக்கத்தை பொருத்தவரை 90 சதவீதம் பெண்களை சார்ந்துள்ளது. பெண்கள் வீட்டில் என்ன செய்கிறார்களோ அதைத்தான் குழந்தைகளும், ஆண்களும் சாப்பிடுகின்றனர். எனவே முடிந்தவரை நல்ல சத்துள்ள தரமான உணவுகளை பெண்கள் சமைக்க முன்வர வேண்டும். சில உணவுகளை சமைக்க அதிக நேரம் ஆகும் என்ற காரணத்தினால் காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு கலந்த சாதம் செய்து ஒரு ஆம்லெட் போட்டு கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும். குழந்தைகளின் முக்கிய பருவமான 6 முதல் 15 வயது வரை உள்ள காலகட்டத்தில் அவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதால் அந்த காலகட்டத்தில் நல்ல உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. எனவே முடிந்தவரை சமையலில் கீரை வகைகள், சத்தான காய்கறிகள் உள்ளிட்டவற்றை அவர்கள் சேர்க்க வேண்டும். தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கருதி நல்ல பள்ளி, நல்ல மருத்துவமனையை தேர்ந்தெடுக்கும் பெற்றோர்கள் உணவு விஷயத்திலும் அக்கறை காட்ட வேண்டும். குழந்தைகள் கேட்பதை கொடுக்காமல் சத்தானதை கொடுத்தால் அவர்களுக்கு அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்பதே உண்மை.

* விழிப்புணர்வு அவசியம்

அசைவ உணவுகள் அதிகரிப்பது குறித்து கொரட்டூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ரூபிணி தேவி கூறுகையில், சைவம் அசைவம் என இரண்டையும் ஆய்வு செய்து பார்த்தால் இரண்டிலும் நல்லது கெட்டது உள்ளது. அசைவத்தில் புரோட்டின் அதிகமாக உள்ளது. சிக்கனைப் பொறுத்தவரை பதப்படுத்தப்படாத சிக்கனை பயன்படுத்தினால் அது உடலுக்கு நல்லது. மேலும் இறைச்சி வகைகளில் கொழுப்புத் தன்மை அதிகமாக உள்ளது. அது மனிதர்களுக்கு சில உபாதைகளை ஏற்படுத்தும். அசைவத்தைப் பொறுத்தவரை வாரத்தில் இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. வறுத்து சாப்பிடுவதைவிட, குழம்பு போன்ற வகைகளில் இறைச்சிகளை எடுத்துக் கொண்டால் சில பக்க விளைவுகளை தவிர்க்கலாம். புரோட்டின் என்பது சைவத்தை விட அசைவத்தில்தான் அதிகமாக உள்ளது. இதேபோன்று பைபர் எனப்படும் நார்ச்சத்து சைவத்தில்தான் அதிகமாக உள்ளது. அது அசைவத்தில் குறைவாக உள்ளது. மேலும் சைவத்தை பொருத்தவரை பெரிதாக எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது. அசைவ உணவுகளை பொருத்தவரை ஸ்டோர் செய்து சாப்பிடக்கூடாது. முடிந்தவரை அப்போதே வாங்கி செய்து சாப்பிட வேண்டும். ஓட்டல்களில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

* வீட்டில் சமைப்பது சிறந்தது

அசைவ உணவுகள் அதிகரித்து வருவது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ டாக்டர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், அசைவ உணவுகளை சாப்பிடுவதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் அதை எப்படி சாப்பிட வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதில்தான் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளை பொருத்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது. ஓட்டல்களில் சாப்பிடுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதேபோன்று எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது என்றனர்.

* பக்க விளைவுகள்

இறைச்சியை பொறுத்தவரை சமைத்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதாலும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும் குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை பல நாட்கள் வைத்து சூடு செய்து சாப்பிடுவது போன்ற பிரச்சினைகளால் வயிறு பிரச்னைகள் ஏற்பட்டு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். முடிந்தவரை அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் பொதுமக்கள் அதை பதப்படுத்தாமல் வாங்கி உடனே செய்து சாப்பிட வேண்டும் என தெரிவித்தார்.

* ஓட்டல் உணவுகளால் உடல் நலம் பாதிக்கும்

அசைவ உணவுகள் அதிகரிப்பது குறித்து குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர், பெரம்பூரைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் கூறுகையில், சென்னை போன்ற பெருநகரங்களில் இன்று பெரும்பாலானோர் அதிகமாக ஓட்டல்களில் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். இன்றைய காலகட்டத்தில் பல ஓட்டல்களில் அசைவ உணவுகளை தயார் செய்யும்போது அதில் தரமற்ற எண்ணெய் மற்றும் டால்டா, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. ரத்த குழாயில் இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்படும்போது அது மரணத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும்போதும், இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் போதும் மரணம் ஏற்படுகிறது. மேலும் பெரிய ஓட்டல்களில் மிச்சமாகும் எண்ணெய்களை சிறிய கையேந்தி பவன் உள்ளிட்ட ஓட்டல்களில் வாங்கி பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறு. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. முடிந்தவரை இரவு நேரங்களில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது,’’ என்றார்.

The post தினமும் அசைவ உணவுகள் சாப்பிடலாமா? சமையல் வேலையை குறைப்பதாக நினைத்து உடல் நலத்தில் கவனம் செலுத்தாத இளம்தலைமுறை: டாக்டர்கள் சொல்வது என்ன… appeared first on Dinakaran.

Tags :
× RELATED தமிழக மாணவர்களுக்கு ஐஏஎஸ்., ஐபிஎஸ்.,...