×

படிப்பில் கவனக்குறைவு, பாலியல் பிரச்னையில் சிக்கும் அவலம் செல்போன் மோகம் மாணவர்களை ஆபாச ரசனையில் தள்ளுகிறதா?: பெற்றோர்களே உஷார்..ர்..ர்

நா கரிகம் வளர்ச்சி அடைய அடைய பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, அதிலிருந்து வெளியே வரும் வழிகளை தேடி வருகின்றனர். சில நேரங்களில் எதனால் தான் இந்த நாகரிக வளர்ச்சி ஏற்பட்டதோ என நினைக்கும் அளவிற்கு பல விஷயங்கள் சமூகத்தில் தற்போது அரங்கேறி வருகிறது. குறிப்பாக, செல்போன்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது முதல் பல்வேறுவித பிரச்னைகள் வந்துகொண்டே உள்ளன. காவல் நிலையங்களில் அடிதடி, குற்ற வழக்குகள் எந்த அளவிற்கு வருகிறதோ அதே அளவிற்கு சைபர் க்ரைம் சம்பந்தமான வழக்குகளும் வரத் தொடங்கி உள்ளன. இதனால் பல்வேறு காவல் மாவட்டங்களில் தனியாக சைபர் க்ரைம் பிரிவு என தொடங்கப்பட்டு வழக்குகள் கையாளப்பட்டு வருகிறது. ஒரு காலகட்டத்தில், மனிதர்களின் பொழுதுபோக்கிற்கு திரைப்படங்கள் மற்றும் டிவி மட்டுமே இருந்தது. செல்போன் பயன்பாடு வந்தபிறகு அனைத்து விஷயங்களையும் ஒரு நொடியில் செல்போன் மூலமாக பார்த்துவிட முடியும் என்ற நிலை வந்து விட்டது. இதை அறிவியலின் வளர்ச்சி என எடுத்துக்கொண்டாலும், இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் இளைய தலைமுறையினர் விரும்பத்தகாத விஷயங்களில் சிக்கி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. கொரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை இருந்ததால் இணையவழி கல்வி என்ற ஒரு முறையை தனியார் பள்ளிகள் கடைபிடிக்க தொடங்கின. பெரும்பாலும், பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற சூழ்நிலையில் பெற்றோர் பிள்ளைகளுக்கு புதிய செல்போனை வாங்கி கொடுத்தனர். தற்போது, கொரோனா காலக்கட்டம் முடிந்த பிறகு செல்போனை அவர்களால் திரும்ப வாங்க முடியவில்லை. அந்த அளவிற்கு குழந்தைகள் செல்போனுக்கு அடிமை ஆகிவிட்டனர். செல்போனை வாங்கினால் சாப்பிடுவதில்லை, ஒழுங்காக பேசுவதில்லை, எங்களை சந்தேகப்படுகிறீர்களா என கேட்க ெதாடங்கி விட்டனர். அந்த அளவிற்கு பள்ளி மாணவ, மாணவியர் செல்போனுடன் ஒன்றிவிட்டனர். பெற்றோர்களும் தற்போது குழந்தைகள் தவறு செய்யாது என்ற ரீதியில் பெரியதாக கண்டுகொள்வதில்லை. பிரச்னை என்று வருகிறதோ அப்போதுதான் எனது குழந்தை இப்படி செய்தானா என பெற்றோர் கேட்பார்கள். அந்த அளவிற்கு தற்போது உள்ள பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் வெகுளியாக உள்ளனர்.

பெற்றோர்களின் அறியாமையை தவறாக பயன்படுத்தி மாணவ, மாணவியர் மற்றும் இளைய தலைமுறை தற்போது செல்போன்களில் விரும்பத்தகாத பல விஷயங்களை பதிவிறக்கம் செய்து, நண்பர்களுக்கும் பரப்பி வருகின்றனர். தற்போது இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து, அனைவராலும் பேசப்படுகிறது. எட்டாவது வரைப பிரச்னை இல்லை. 8 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் செல்போன்களில் விரும்பத்தகாத செயல்களில் அதிக அளவில் ஈடுபட்டு, தற்போது அதிக அளவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் கண்டிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது, செல்போனில் ஆபாச படங்கள் பார்ப்பது, ஷேர் செய்வது போன்ற விஷயங்களை அதிகமாக செய்து மாட்டிக் கொள்கின்றனர். சமீபத்தில், வடசென்னையை சேர்ந்த பிரபல தனியார் பள்ளியில் ஒரு மாணவன் சக மாணவ, மாணவியரை வாட்ஸ்அப் குரூப்பில் இணைத்து அதில் ஆபாச செயலிகள் பற்றிய விவரங்களை பதிவு செய்திருந்தார். அதிலுள்ள மற்ற மாணவர்கள் பார்த்து தங்களது பங்கிற்கு கமெண்ட் செய்திருந்தனர். இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்து, குறிப்பிட்ட மாணவனை அழைத்து கண்டித்து பெற்றோருக்கு தகவல் சொல்லி உள்ளனர். பின்பு அந்த வாட்ஸ்அப் குழு கலைக்கப்பட்டது. இப்படி சில பிரச்னைகளை பள்ளிகளில் ஆசிரியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். தங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள், மீண்டும் மாலை வீட்டிற்கு வருகிறார்கள். செல்போனை வைத்துக்கொண்டு பாடங்களை படிக்கின்றனர் என பெற்றோர்கள் நினைப்பார்கள். செல்போனில் என்ன பார்க்கிறார்கள், எதை தேடுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. இப்போது குழந்தைகள் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர். எதை கூகுளில் சென்று தேடுகிறார்களோ, அதை பார்த்த பின்பு, அழித்துவிட்டுதான் செல்போனை கீழே வைத்துவிட்டு செல்கின்றனர். இதுபோன்ற திறமைசாலிகள் உள்ள வீடுகளில் பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். சமீபகாலமாக பள்ளிகளில் மாணவ, மாணவியர் ஆபாச படங்கள் பார்ப்பதும், இதுகுறித்து ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு கூறுவதும் அல்லது பெற்றோர்களுக்கு தெரியும்போது ஆசிரியர்களுக்கு புகார்கள் செல்வதும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவர் அலெக்சாண்டர் ஞானதுரை கூறியதாவது: தற்போது, இணையதளம் என்பது பரந்து விரிந்த கடல்போல மாறிவிட்டது. அதில் நாம் எதை தேடுகிறோம் என்பதை பொறுத்துதான் எல்லாமே உள்ளது. பல ஆபாச செயலிகள் அரசால் முடக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அதை தேடி கண்டுபிடித்து சிலர் பார்த்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைவரிடமும் செல்போன் வந்துவிட்டது. இதை தடுக்க முடியாது. குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்கள் செல்போனை பயன்படுத்தும் போது பெற்றோர்கள், தற்போதைய டெக்னாலஜியை பயன்படுத்தி ஓரளவிற்கு தடுக்கலாம். குறிப்பாக சைல்டு லாக் என கூறுவார்கள். அதை கற்றுக்கொண்டு தேவையில்லாத விஷயங்கள் செல்போனில் வருவதை தடுக்கலாம். ஆபாச படங்களைப் பொறுத்தவரை மெச்சூரிட்டி ஆகாத சிறுவர்கள் அல்லது சிறுமியர் பார்த்தால் ஒரு குற்ற மனப்பான்மை அவர்களிடம் ஏற்படும். நான் பெரிய தவறு செய்து விட்டேன் என நினைப்பார்கள். சில மாணவர்களுக்கு ஒருவித குழப்பமான உணர்வு ஏற்படும். எனவே, பள்ளி மாணவ, மாணவியர் இதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லையென்றால் அவர்களது கல்வி பாதிக்கப்படும். கவனச்சிதறல் ஏற்படும். செக்ஸ் என்பதை சமூகத்தில் மறைத்து வைக்க முடியாது. அதே நேரத்தில் அவர்கள் எப்போது தெரிந்துகொள்ள வேண்டுமோ அப்போது தெரிந்து கொண்டால் நல்லது. முன்பெல்லாம் அதைப்பற்றி நிறைய பொதுவெளியில் பேசாமல் இருந்தோம். ஆனால், நிலைமை மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை புத்தகங்களில் வாங்கி படிப்பார்கள். அதன்பிறகு வீடியோ கேசட்டை மறைமுகமாக நண்பர்கள் வீட்டில் வாங்கி போட்டு பார்ப்பார்கள். இதெல்லாம் எப்போதாவது ஒரு முறை நடக்கின்ற நிகழ்வு. தற்போது செல்போன் வந்துவிட்டதால் விதவிதமான வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வருகின்றனர்.

இதேபோன்று ஒரு காலகட்டத்தில் சினிமாக்களில் எதையெல்லாம் மூடி மறைத்து காண்பித்தார்களோ, தற்போது அதையெல்லாம் வெட்ட வெளிச்சமாக காண்பித்து வருகின்றனர். இதை நாகரிக வளர்ச்சி அல்லது அடுத்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் எவ்வாறு வெளியே வருவது அல்லது எச்சரிக்கையாக இருப்பது என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில மாணவர்களை உற்று கவனித்தால், ஆபாச படம் பார்க்க பார்க்க அவர்களின் நடைமுறையில் மாற்றம் தெரியவரும். படிப்பில் பின்தங்குவார்கள். உடல்நிலை மெலிந்து காணப்படும். ஓரளவுக்கு மெச்சூரிட்டி நபர்கள், 14, 15 வயது நபர்கள் இதுபோன்ற வீடியோக்களை பார்க்கும்போது மற்ற நண்பர்களையும் பார்க்க சொல்லி தூண்டுகிறார்கள். அப்போது அவர்கள் ஒருவிதமான உந்துதலுக்கு ஆளாகி சில நேரங்களில் தவறு செய்து விடுகின்றனர். இதன் மூலம் புரிதல் இல்லாத செக்ஸ் நிலைக்கு தள்ளப்பட்டு வயது குறைவான சிறுமிகள் கர்ப்பம் அடைகின்றனர். அவர்களுக்கு குழந்தை பிறப்பு பற்றிகூட தெரியாது. ஏதோ ஒரு விஷயத்தில் தவறு செய்துஜாலியாக இருந்தால் போதும் என நினைத்து விடுகின்றனர். பிறகு மற்றவர்கள் தவறு என்று கண்டிக்கும்போதுதான் நாம் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்கிறார்கள். தற்போது, சமூக வலைதளங்கள் வாயிலாக டீன் ஏஜ் வயது ஆண்களும் பெண்களும் மற்றவர்கள் தங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக விதவிதமான போட்டோக்களை போடுகிறார்கள். அதை சிலர் தவறாக சித்தரித்து மிரட்டுகின்றனர். சிலர் நட்பாக பழகி பெண்களை சீரழிக்கின்றனர். இப்படி பல பிரச்னைகள் வருகின்றன. சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ள பல குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்து அவர்களை சரி செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆரம்பத்திலேயே குழந்தைகள் எந்தெந்த சமூக வலைதளங்களில் என்ன பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளார்கள் என்பதை பெற்றோர்கள் தெரிந்து வைத்திருந்தால் நல்லது. சந்தேகிக்கின்றோம் என்ற ரீதியில் இல்லாமல் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவர்களை பின்தொடர்வதில் எந்தவித தவறும் இல்லை. எனவே செல்போன்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டும் என்றார்.

 

The post படிப்பில் கவனக்குறைவு, பாலியல் பிரச்னையில் சிக்கும் அவலம் செல்போன் மோகம் மாணவர்களை ஆபாச ரசனையில் தள்ளுகிறதா?: பெற்றோர்களே உஷார்..ர்..ர் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கேரள தேசத்தில் இருந்து வந்து கலக்கிய குட்டிச்சாத்தான்