×

ஜோதிட ரகசியங்கள்

தோல் நோய்களுக்கு இதுதான் பரிகாரம்

தோல்நோய்களுக்கு முதல் காரணம் வைட்டமின்-D குறைபாடு. இன்று அது பலருக்கும் இருக்கிறது. வைட்டமின் D-க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும், நமக்கு தேவையான வைட்டமின்-D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மருந்து மாத்திரைகள் இருந்தாலும், நம்முடைய முன்னோர்கள் சூரிய வழிபாட்டினை மிக முக்கியமாகப் பரிந்துரைத்தனர். காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு ஒரு பத்து நிமிடம் நம்முடைய உடம்பின் எல்லா பாகங்களிலும் சூரிய ஒளிபட வேண்டும் என்று சூரிய நமஸ்காரத்தை வலியுறுத்தினர்.

பெரும்பாலும், வெளியில் உடம்பில் வெயில் படும்படியாக காலைவெயிலிலும், மாலைவெயிலிலும் உழைத்தனர். இன்று அந்த உழைப்பு இல்லை, வழிபாடும் இல்லை. அதனால், பெரும்பாலோருக்கு இந்த குறைபாடு இருக்கிறது. தோல் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முதலிய பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சூரிய வழிபாட்டை தொடருங்கள்.

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!

– என்ற பாடலைப் பாடுங்கள். ஞாயிறு ஒரு பொழுது விரதம் இருப்பதும் நல்லது.

தோலின் நிறம் எதனால் மாறுகிறது?

சூரியனைப் போலவே சந்திரன் நமது உடலாக விளங்குகின்றான். உடலில் ஏற் படும் தோல் நிறமாற்றங்களுக்கு சந்திரன் காரகனாகிறார். தொழுநோய், சளி மற்றும் நீர், காற்றினால் பரவுவதால் சந்திரன் காரகனாகிறார். காலபுருஷனுக்கு லக்னாதிபதி என்பதாலும், தோலுக்கு செவ்வாய் காரகத்துவம் வகிப்பதால், தோல் நோயான தொழுநோய்க்கு செவ்வாய் நிலையும் முக்கியம். அனைத்துத் தோல் மற்றும் நரம்புக் கோளாறுகளுக்கும் புதன் காரகமாவார். தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும், நரம்பு செயலிழப்பது மற்றும் மரத்துப்போகும் தன்மை ஏற்படுவதும் புதனால் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எந்த கிரகத்தினால் நோய் ஏற்பட்டது என்று அறிந்து பரிகாரம் செய்யவேண்டும்.

கஷ்டமே இல்லாத வாழ்க்கையா?

ஒருவருடைய ஜாதகத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற இடங்கள் என்றால், லக்னம், கேந்திரம் மற்றும் திரிகோணம் எனச் சொல்வார்கள். லக்னம், 5, 9-ம் இடங்கள் திரிகோணம் எனப்படும். இவை 12 ராசிகளில் முக்கோண வடிவத்தில் இருப்பவை. ஒருவருடைய ஜாதகத்தில் இந்த ஸ்தானங்கள் பலம் பெற்றுவிட்டால், மற்ற ஒன்பது இடங்களினுடைய பாதிப்புகள் பெரிய அளவிற்கு செயல்படாமல் தடுத்துவிடும் இதில் ஐந்தாம் இடத்தை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும், ஒன்பதாம் இடத்தை பாக்கியஸ்தானம் என்றும் அழைப்பார்கள்.

இந்த ஸ்தானங்களின் தசாகாலங்களே யோக காலங்கள் என்பார்கள். இந்த ஸ்தானங்கள் அவயோக கிரங்களால் பாதிக்கப்படாமல் இருந்து, இந்த ஸ்தானங்களுடைய அதிபதிகள் வலுவோடு இருந்துவிட்டால், அவர்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். அவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது வராது. அப்படி வந்தாலும், நொடி நேரத்தில் அது விலகி விடும். இப்படிப்பட்ட ஜாதகரோடு சேர்பவர்கள் வாழ்வும் சிறப்பானதாகவே அமையும்.

12-ல் கேது இருந்தால் மோட்சமா?

12-ல் கேது இருந்தால் மோட்சம் என்று சில ஜோதிட நூல்களில் இருக்கும். ஆனால், இதற்கு பெரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. காரணம், ஒரு குறிப்பிட்ட கிரகம் ஒரு மொத்த ஜாதகத்தை தாங்காது. ஆனால், ஏன் இப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். கேது என்பது ஞானகாரகன். 12-ஆம் இடம் என்பது மோட்சஸ் தானம். ஞானம் பெற்றால் மோட்சம் நிச்சயம் என்பதற்காக இந்த இரண்டையும் இணைத்து சொன்னார்களே தவிர, மற்றபடி ஜாதகம் முழுமையும் பார்த்துதான் மோட்சம் குறித்து முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் ஒன்று. பன்னிரண்டாம் இடத்தில் கேது இருப்பவர்கள் ஆன்மிக எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதை பல ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன். தினசரி விடாமல் காலையும் மாலையும் கோயிலுக்குப் போவார்கள். மிகுந்த பக்தியோடு நெடுநேரம் கோயிலை வலம் வருவார்கள். ஆனால், இது நிஜ பக்தியா அல்லது மற்ற செயல்களில் இருந்து தப்பிப்பதற்காகவா என்பதை மற்ற கிரகங்களையும் வைத்துக் கொண்டுதான் முடிவுக்கு வரவேண்டும்.

சகோதரர்கள் உறவு நன்றாக இருக்க வேண்டுமா?

மூன்றும், பதினொன்றும் கெட்டால் முன்னும் பின்னும் போச்சு என்று பழமொழி உண்டு. இதற்கு என்ன பொருள் என்றால், மூன்றாம் இடமும் பதினொன்றாம் இடமும் இளைய சகோதர உறவையும், மூத்த சகோதர உறவையும் குறிப்பது. இது தவிர, இந்த இடங்களை தைரிய வீரிய ஸ்தானம் என்றும் பதினொன்றாம் இடத்தை லாபஸ்தானம் என்றும் சொல்வதுண்டு. ராகு, கேதுக்கள் மற்றும் சனிபோன்ற கிரகங்கள் இந்த இடத்தில் இருப்பது நல்லது. சுபகிரகப் பார்வை, சேர்க்கை முதலியவற்றால் இந்த இடங்கள் சுப வலுப் பெறுவதன் மூலமாக சகோதர உறவுகள் அற்புதமாக இருக்கும்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டும் வாழ்வார்கள். இது தவிர, கிரககாரகம் எனப்படும் சகோதர கிரகமாகிய செவ்வாய் பகவானும் பலம் பெற்று இருக்க வேண்டும். லக்னாதி பதியோடு இணைந்து இருந்தாலோ, குரு சுக்கிரன் முதலிய சுபகிரகங்களால் பார்க்கப்பட்டாலோ, சகோதர உறவுகள் அற்புதமாக இருக்கும்.

சகோதர உறவுகள் சரியில்லாதவர்கள் அது சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், மாதத்திற்கு ஒருமுறை, புனர்பூச நட்சத்திரம் அன்று, அருகாமையிலுள்ள ஸ்ரீராமபிரான் கோயிலுக்குச் சென்று, நெய்விளக்கு ஒன்று போட்டு, 7 முறை பிரகார வலம் வரவேண்டும். இதைத் தொடர்ச்சியாகச் செய்ய சகோதர உறவுச் சிக்கல்கள் மறைந்து, அன்பு பெருகும்.

கிரகங்களும் பரிகாரங்களும்

1. சந்திரனால் ஏற்பட்டிருந்தால், சந்திரமவுலீஸ்வரர் பூஜையைச் செய்யலாம் அல்லது பௌர்ணமியில் சத்யநாராயண பூஜையைச் செய்யலாம். ஒருமுறை மாயவரத்தில் உள்ள திரு இந்தளூர் பரிமள ரங்கநாதரை தரிசித்துவிட்டு வருவது சிறந்த பலனைத் தரும்.

2. செவ்வாய் தோல்நோய்க்கு காரணமாக இருந்தால், வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று அங்கே உள்ள ஈசனையும், தையல்நாயகி அம்மையையும் செல்வமுத்து குமாரசாமியையும் தரிசித்துவிட்டு வருவது சிறந்த பலனைத் தரும்.

3. புதன்கிரகம் காரணமாக இருந்தால், ஒவ்வொரு புதன்கிழமையும் அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று நெய்விளக்கு போட்டு வரவும். ஒருமுறை திருவெண்காடு சென்று புதனுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வரவும்.

தொகுப்பு: பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பாதுகையின் பெருமை