புவனேஸ்வர்: காங்கிரஸ் எம்பியின் மதுபான நிறுவனத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் கடந்த 5 நாட்களில் ரூ. 531 கோடி வரை சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசாவைச் சேர்ந்த பவுத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற நிறுவனங்களுக்கு எதிராக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் தீரஜ் பிரசாத் சாஹு குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதால், எம்பியின் வீட்டில் இருந்து பலகோடி ரூபாய் ரொக்கம், பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து ஐந்து நாட்களாக மீட்கப்பட்ட கட்டுக்கட்டான பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணி வருகின்றனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வரி ஏய்ப்பு மற்றும் ‘ஆப்-தி-புக்’ பரிவர்த்தனை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 6ம் தேதி முதல் சோதனைகள் நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித் துறை மற்றும் பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 80 பேர் கொண்ட ஒன்பது குழுக்கள் 24 மணி நேரமும் எண்ணிக் கொண்டுள்ளனர். பாதுகாப்புப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட 200 பேர், மேற்குவங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணி வருகின்றனர். சோதனை நடந்த இடங்களில் இருந்த அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். கடந்த 5 நாளில் எண்ணப்பட்ட ரொக்க தொகையின் மதிப்பு ரூ. 531 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது’ என்றனர்.
‘மோடி வாஷிங் மெஷின்’: காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹு வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து சிவசேனா (யுபிடி) எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் மீது பாஜக வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை. நீண்ட காலமாக காங்கிரசில் இருந்த அவர் (தீரஜ் சாஹு), தனது தொழிலுக்காக கட்சியை பயன்படுத்தினாரா? அவ்வாறு குறை கூறுவது தவறு. அவர் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். குற்றம்சாட்டப்பட்ட தீரஜ் சாஹு பாஜகவில் இணைந்தால், அவர் ‘மோடி வாஷிங் மிஷின்’ மூலம் சுத்தம் செய்யப்பட்டு, அவர் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுவார்’ என்றார்.
The post காங்கிரஸ் எம்பி நிறுவனத்தில் ரெய்டு; 5 நாளாக எண்ணியதில் ரூ.531 கோடி சிக்கியது: வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.
