பாட்னா: பாட்னாவில் நடந்த கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில், ஒரே மேடையில் அமித் ஷா – நிதிஷ் குமார் இருந்ததால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 26வது கூட்டம், ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா, மேற்குவங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் நான்கு மாநிலங்களின் செயலாளர்கள், மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பின்னர் அமித் ஷா கூறுகையில், ‘கிழக்கு மண்டல கவுன்சிலின் கூட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த கூட்டத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. சில பிரச்னைகளுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய கிழக்கு மாநிலங்கள், நாட்டிற்கு தேவையான அனைத்து கனிம வளங்களையும் வழங்குகிறது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்கள் கடந்த 9 ஆண்டுகளில் நனவாகியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிராந்திய கவுன்சில்கள் மற்றும் அவற்றின் நிலைக்குழுக்களின் 56 கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த ஆண்டு மட்டும் ஒன்பது கூட்டங்கள் நடந்துள்ளன’ என்றார். ‘இந்தியா’ கூட்டணி – பாஜக இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமித் ஷாவும், நிதிஷ் குமாரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம், சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில், காங்கிரஸ் கட்சியை நிதிஷ்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார். அதனால் அவர் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து தேசிய அரசியலில் புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.
The post கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்; ஒரே மேடையில் அமித் ஷா – நிதிஷ் குமார்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.
