சென்னை: மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு குழுமங்கள் முதல்வரை சந்தித்து காசோலையை வழங்கி வருகின்றனர்.
சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அதன் விவரங்கள் பின்வருமாறு;
* சன்மார் குழுமம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர், செயல் துணைத் தலைவர் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
* சக்தி மசாலா நிறுவனம்
சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
* லயன் டேட்ஸ் நிறுவனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
* தமிழ்நாடு இந்திய காவல் பணி
தமிழ்நாடு இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் தலைவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநருமான அபாஷ் குமார்,செயலாளரும், காவல்துறை தலைவருமான (ஆயுதப்படை) மு.வெ.ஜெய கௌரி, ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் சார்பில் 9 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
* தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் சங்கத்தின் தலைவர் குமார் ஜயந்த், துணைத் தலைவர் எம்.ஏ.சித்திக்,இணை செயலாளர்கள் எஸ்.ஏ.ராமன், எஸ்.திவ்யதர்ஷினி, ஆகியோர் சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் சங்க உறுப்பினர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்கள்.
The post மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு குழுமங்கள் முதல்வரை சந்தித்து காசோலையை வழங்கினார்கள் appeared first on Dinakaran.
