*₹1 கோடியை தாண்டிய வர்த்தகத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி
வேலூர் : எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படும் வேலூர் சண்டே மார்க்கெட் கடந்த வாரங்களை போல இல்லாமல் நேற்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் திணறியது. இதனால் பிரதான சாலைகள் நெரிசலில் சிக்கி தவித்தன.சென்னையின் பழைய மூர்மார்க்கெட்டை நினைவுகூறும் வகையில் வேலூரில் லாங்கு பஜார் தொடங்கி கமிசரி பஜார் வரை கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேல் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் குண்டூசி முதல் மிகப்பெரிய இயந்திர தளவாடங்கள் வரை பழைய பொருட்கள் விற்பனை செய்யும் பிளாட்பார கடைகள் சண்டே மார்க்கெட் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
தற்போது சண்டே மார்க்கெட் மேலும் விரிவடைந்து பில்டர்பெட் சாலை ஆசிரியர் இல்லம் வரை கடைகள் எண்ணிக்கை 500க்கும் மேல் பெருகியுள்ளது. இங்கு பழைய இரும்பு தளவாடங்கள், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள், அவற்றின் உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக், எலக்ட்ரிக் பொருட்கள், மரச்சாமான்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட வீட்டு உபயோக பொருட்கள், பொம்மைகள், புத்தகங்கள், உடற்பயிற்சிக்கான உபகரணங்கள், பழைய துணிமணிகள், அலங்கார பொருட்கள், கடிகாரங்கள், பழங்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ரிகார்ட் பிளேயர், ஆம்ப்ளிபையர் என பாரம்பரிய பொருட்கள் என விற்பனை களைக்கட்டும். இங்கு கடைகள் காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரையே வைக்கப்படுகிறது.
அதேநேரத்தில் விற்பனை மட்டும் அந்த குறுகிய சில மணி நேரங்களிலேயே ₹1 கோடியை எட்டும். இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களாக மழை உட்பட பல்வேறு காரணங்களால் டல்லடித்த வேலூர் சண்டே மார்க்கெட் நேற்று மக்கள் கூட்டத்தால் திணறியது. இதனால் வர்த்தகம் ₹1 கோடியை தாண்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அங்குள்ள வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது. கடந்த மூன்று வாரங்களாக டல்லடித்த எங்கள் வியாபாரம் இன்று நன்றாக இருந்தது. வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களுடன் புதிய வாடிக்கையாளர்களும் அதிகளவில் வந்திருந்தனர். அதோடு வெளியூரை சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்திருந்தனர். இதற்கு காரணம், நாங்கள் பழைய பொருட்களை விற்பனை செய்தாலும், அப்பொருட்களுக்கான கியாரண்டியை எங்களால் உறுதிப்படுத்த முடியும்’ என்றனர்.
The post வேலூரில் நெரிசலில் சிக்கிய சாலைகள் சண்டே மார்க்கெட்டில் பொருட்களை வாங்க திரண்ட மக்கள் appeared first on Dinakaran.
