×

யு-19 ஆசிய கோப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

துபாய்: யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்தியாவுடன் நேற்று மோதிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐசிசி அகடமி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் யு-19 அணி முதலில் பந்துவீசியது. இந்தியா யு-19 அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன் குவித்தது. ஆதர்ஷ் சிங் 62 ரன் (81 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் உதய் சாஹரன் 60 ரன் (98 பந்து, 5 பவுண்டரி), சச்சின் தாஸ் 58 ரன் (42 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), அர்ஷின் குல்கர்னி 24 ரன் எடுத்தனர்.

பாக். யு-19 பந்துவீச்சில் முகமது ஜீஷன் 4 விக்கெட், ஆமிர் ஹசன், உபைத் ஷா தலா 2, அராபத் மின்ஹாஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் யு-19 அணி 47 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்து வென்றது. ஷமில் உசேன் 8, ஷஷாயிப் கான் 63 ரன் எடுத்து (88 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விக்கெட்டை பறிகொடுத்தனர். அஸன் அவைஸ் 105 ரன் (130 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் சாத் பெய்க் 68 ரன்னுடன் (51 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாக். யு-19 அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஏ பிரிவில் பாக். யு19 தொடர்ச்சியாக 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. இந்தியா யு-19, ஆப்கான் யு-19 அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், நேபாளம் (0) கடைசி இடத்தில் உள்ளது.

The post யு-19 ஆசிய கோப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,U-19 Asia Cup ,Dubai ,U-19 Asia Cup ODI Series ,India ,Dinakaran ,
× RELATED அறக்கட்டளை ஊழல் வழக்கு இம்ரானிடம் நீதிபதி விசாரணை