- சபாஷ் சபலெங்கா
- பிரிஸ்பேன்
- அரினா சபாலெங்கா
- பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பெண்கள் ஒற்றை பிரிவு
- பிரிஸ்பேன் ஓபன்
- பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா
பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த அரையிறுதிப் போட்டி ஒன்றில் பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, செக் வீராங்கனை கரோலினா முசோவாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக், அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அரீனா சபலென்கா – மார்தா கோஸ்ட்யுக் மோதினர். போட்டியின் துவக்கம் முதல் துள்ளலாய் துடிப்புடன் ஆடிய சபலென்காவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கோஸ்ட்யுக் திணறினார். அதனால், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்கா அசத்தல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி நேரம் 17 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. கடந்த 2025 ஜனவரியில் நடந்த பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை போலினா குதர்மெடோவாவை வீழ்த்தி, சபலென்கா சாம்பியன் பட்டம் பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். வரும் 18ம் தேதி இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் துவங்கவுள்ள நிலையில் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸில் மீண்டும் வென்று தனது வல்லமையை சபலென்கா நிரூபித்துள்ளார்.
கெத்தாய் வென்ற மெத்வதேவ்
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீரர் டேனியில் மெத்வதேவ் – அமெரிக்க வீரர் பிராண்டன் நகாஷிமா மோதினர். முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்ற மெத்வதேவ் 2வது செட்டில், பிராண்டன் சளைக்காமல் மோதியதால் சிரமப்பட்டார். இருப்பினும், டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை 7-6 (7-1) என்ற புள்ளிக் கணக்கில் அவர் வசப்படுத்தினார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
