×

தமிழ்நாட்டில் முதல்முறையாக ேவலூரில் அமைப்பு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கும் குழந்தைகளின் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு

வேலூர்: குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் இன்று உலகெங்கும் ஒரு புற்றுநோய் போல பெருகியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் நடைபெறும் குற்றங்கள் குறித்த ஆண்டறிக்கையை தேசிய குற்ற ஆவண மையம் வௌியிட்டு வருகிறது. அதில் சிறு குழந்தைகள், குறிப்பாக 5 முதல் 12 வயதிற்குட்பட்டோர் அதிகளவில் குழந்தைகள் மீதான அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உடல் ரீதியான அத்துமீறல், பாலியல் வன்முறை, உணர்வு ரீதியான அத்துமீறல் என்பவை குழந்தைகள் சந்திக்கும் சில வகையான அத்துமீறுதல்களாகும். இத்தகைய சூழலில்தான் பாலியல் வன்முறை அல்லது இதர வன்முறைகளால் பாதிக்கப்படும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் குழந்தைகளின் நலனை காக்கும் வகையில் அவர்களுக்கு தனியாக சிறப்பு வார்டு ஏற்படுத்தி அவர்களுக்கு உடல் ரீதியான மற்றும் மன ரீதியான சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் மாநிலத்தில் முதன்முறையாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ‘சைல்டு பிரண்ட்லி யூனிட்’ என்ற தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை மட்டுமின்றி அவர்கள் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில் மனநல சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது. அதோடு, இந்த வார்டில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண கார்ட்டூன் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தி உள்ளனர். குழந்தைகள் விளையாடுவது, கல்வி கற்பது, மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றுவது, வன விலங்குகள் உட்பட பல்வேறு வகையான வண்ண ஓவியங்கள் சுவற்றில் வரைந்துள்ளனர்.

இந்த புதிய யூனிட்டை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சில நாட்களுக்கு முன் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டத்தை தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும் சைல்டு பிரண்ட்லி யூனிட்டை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த யூனிட் குறித்து டீன் பாப்பாத்தி கூறுகையில், ‘வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 படுக்கைகளுடன் கூடிய வார்டும் 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபவார்கள். இவை குறிப்பாக பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிவார்டு ஆகும்’ என்றார்.

The post தமிழ்நாட்டில் முதல்முறையாக ேவலூரில் அமைப்பு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கும் குழந்தைகளின் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Yevalur ,Vellore ,India ,Yvelur ,
× RELATED கொலை வழக்கில் சரணடைபவர்கள்...