×

தொடர் கனமழையால் மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் திடீர் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

மேட்டுப்பாளையம்: தொடர் கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் பர்லியார் அருகே திடீர் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியாறு அருகே தொடர் கனமழை காரணமாக இன்று காலை மண் சரிவு ஏற்பட்டு சாலையில் பாறைகள் மற்றும் மண் விழுந்துள்ளது. இதை அடுத்து அவ்வழியாக சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், 2 ஜேசிபி மூலம் சாலையில் விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பர்லியாறு அருகே மண் சரிவு ஏற்பட்டு சாலையில் மண் மற்றும் பாறைகள் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலையில் விழுந்த மண் மற்றும் பாறைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் அவை அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்படும், என்றனர். இதற்கிடையே மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்களை மேட்டுப்பாளையம் போலீசார் கோத்தகிரி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

திரும்பி சென்ற ஒன்றிய அமைச்சர்
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நேற்று ஊட்டி சென்றிருந்தார். நேற்றிரவு அங்கு தங்கி இருந்த அவர் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் நடக்க உள்ள முகாம் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க காரில் வந்து கொண்டிருந்தார். பர்லியார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த அவர் காரில் மீண்டும் குன்னூர் நோக்கி சென்றார். அங்கிருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் வந்தடைந்தார்.

The post தொடர் கனமழையால் மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் திடீர் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Coonoor road ,Parliar ,Coonoor ,Dinakaran ,
× RELATED பள்ளி சிறுவர்களுக்கான தடகள போட்டி...