×

ராஜஸ்தான், மிசோரம் தோல்வி கெலாட், பைலட்டிடம் கார்கே, ராகுல் கேள்வி

புதுடெல்லி: ராஜஸ்தான், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து கார்கே, ராகுல் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ அமோக வெற்றி பெற்றது. இங்கு எப்படி காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்பது பற்றி மாநிலம் வாரியாக காங்கிரஸ் கட்சி ஆய்வு நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன காா்கே தலைமையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் சட்டீஸ்கர், மபி தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நேற்று ராஜஸ்தான், மிசோரம் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு கட்சித்தலைவர் கார்கே தலைமை தாங்கினார். ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கலந்து கொண்டனர்.

முதலில் மிசோரம் மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. 40 தொகுதிகள் கொண்ட அங்கு காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதுபற்றி கார்கே, ராகுல் சரமாரி கேள்வி எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜஸ்தானில் தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன என்று சரமாரியாக கார்கே மற்றும் ராகுல் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா கூறுகையில், ‘எங்கள் வாக்கு சதவீதமும் பாஜவை விட ஒரு சதவீதம் தான் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் கடந்த முறையை விட சற்று மேம்பட்டுள்ளது. எங்கள் வேட்பாளர்களில் பலர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.
நாங்கள் இன்று முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களைத் தொடங்குவோம் என்று மூத்த தலைவர்களிடம் கூறினோம். எங்களுடைய குறைகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வோம். மக்களவை தேர்தலில் பா.ஜ.,வை ஒற்றுமையாக எதிர்த்து போராடுவோம் என, தலைமைக்கு உறுதியளித்தோம்’ என்றார்.

The post ராஜஸ்தான், மிசோரம் தோல்வி கெலாட், பைலட்டிடம் கார்கே, ராகுல் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Mizoram ,Gehlot ,Kharge ,Rahul ,New Delhi ,Mizoram Legislative Assembly ,Karke ,Dinakaran ,
× RELATED குடியரசு தினவிழா மேடையில்...