×

100 நாள் வேலை திட்டத்தில் 7.43 லட்சம் போலி கண்டுபிடிப்பு: உபியில் 3 லட்சம் போலி அட்டைகள் நீக்கம்

புதுடெல்லி: நூறு நாள் வேலை திட்டத்தில் 7.43 லட்சம் போலியான வேலை அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். மக்களவையில் இது தொடர்பான எழுத்துபூர்வமான கேள்விக்கு ஊரக வளர்ச்சிதுறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதிலளிக்கையில்,‘‘ 2022-23ம் ஆண்டில் 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 7.43 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வேலை அட்டைகள் புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உபியில் மட்டும் 2.96 லட்சம் போலி அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் விதிகளை மீறுகிறவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். ’’ என்றார்.

ஆயுஷ்மான் பவ திட்டத்தில் கடந்த செப்டம்பர் 17ம் தேதியில் இருந்து இதுவரை 9.9 லட்சம் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.மேலும் அவர் அவர்,‘‘ ஆயுஷ்மான் பவ திட்டத்தின் கீழ் மொத்தம் 7.05 கோடி பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவித்தார். மகளிருக்கு இடஒதுக்கீடு: தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளின் பணி நியமனங்களில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருவதைப் போன்று, ஒன்றிய அரசும் தனது அலுவலகங்கள் அனைத்திலும் இடஒதுக்கீடு செய்ய முன்வருமா என்று மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஒன்றிய பெண்கள் மற்றம் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்பதால் மகளிருக்கு என தனி ஒதுக்கீடு வழங்க முடியாது. 33 சதவீதம் அளவுக்கு காவல்துறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது’’ என்றார்.

The post 100 நாள் வேலை திட்டத்தில் 7.43 லட்சம் போலி கண்டுபிடிப்பு: உபியில் 3 லட்சம் போலி அட்டைகள் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : UP ,New Delhi ,Union Minister ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED உ.பி, கர்நாடகா, இமாச்சலில் ராஜ்யசபா...