×

பகவான் நாமத்தை எப்போது சொல்ல வேண்டும்?

ராம அவதாரம் மனிதர்களுக்கு வழிகாட்டி, நல்வழிப்படுத்த ஏற்பட்டது. ‘‘மண்ணுலகத்தோருய்ய’’ என்பது ஆழ்வார்கள் வாக்கு. தேவர்கள் குறை தீர்க்க மண்ணுலகத்தில் ஏன் அவதரிக்க வேண்டும். காரணம் இதுதான். உலகங்கள் 14 என்று சொல்லுகின்றார்கள். இதில், கீழ் உலகங்கள் ஏழு. மேல் உலகங்கள் ஏழு. ஆனால், பூமி தவிர மற்ற உலகங்களில் பல்வேறு ஆலயங்கள் இருப்பதாகவோ, நம்முடைய பூலோகத்தில் நடப்பது போன்ற வழிபாடுகள் நடப்பதாகவோ, யாகங்கள் நடப்ப தாகவோ புராணங்களில் நாம் படித்திருக்க முடியாது.

அவ்வளவு ஏன்? இந்திரனோ, வருணனோ, மற்ற தேவதைகளோ தங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெறுவதற்காகவும், சாபங்களை நீக்கி கொள்வதற்காகவும் சொர்க்கலோகத்திலோ, பாதாள லோகத்திலோ, பிரம்மலோகத்திலோ அமர்ந்து தவம் செய்ய மாட்டார்கள். அவர்கள் பூலோகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் பல காலம் தவம் செய்வார்கள். காரணம் என்னவென்று சொன்னால், அண்டாதி அண்டங்களிலேயே நாம் வசிக்கின்ற இந்த பூமி மட்டும்தான் கர்ம பூமி. நல்ல செயல்களைச் செய்தால் நல்ல பலனையும், தீயசெயல்களைச் செய்தால் தீய பலனையும் தரக்கூடியது.

அதனால்தான், கோயில் தல வரலாறுகளில், இந்தக் கோயிலை இந்திரன் கட்டினான், இந்தக் கோயிலை பிரம்மா கட்டினார் என்றெல்லாம் வருகிறது. தல புராணங்களில் குபேரன் சாபம் தீர்த்த இடம், காமதேனுவின் சாபம் தீர்த்த இடம், வருணனின் சாபம் தீர்த்த இடம், இந்திரனின் சாபம் தீர்த்த இடம் என்றெல்லாம் வருகிறது. அவர்கள் ஏன் இந்திரலோகத்தில் இருந்து கொண்டு தங்களுடைய சாப விமோசனம் பெற்றிடக் கூடாது என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? ஆனால் அங்கு முடியாது.

அந்தந்த லோகத்திற்கான பதவி கிடைக்கவும், சாபங்களை நீக்கிக் கொள்வதற்காகவும் அவர்கள் மண்ணில்தான் தவம் செய்ய வேண்டும். எனவே, விளைவுகள் தருகின்ற நிலமாகிய பூவுலகத்தில்தான், தேவர்களின் குறை தீர்க்க வேண்டும் என்று சொன்னாலும்கூட, பகவான் அவதாரம் எடுத்தாக வேண்டும். அசுரர்களின் வாழ்வும் தேவர்களின் வாழ்வும் மண்ணுலகத்தில்தான் அடங்கி இருக்கிறது. பாசுரப்படி, ராமாயணத்தில் ராம அவதாரத்தை இப்படி வர்ணிக்கிறார்.

`அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவாரார் துணை என்று துளங்க
நல்ல அமரர் துயர் தீர
மண்ணுலகத்தோர் உய்ய’

– என்று வருகின்றது.

தேவர்களுடைய துயரம் தீர்ந்துவிட்டால், அவர்கள் திரும்பப் போய்விடுவார்கள். அதற்குப் பிறகு மறுபடி கஷ்டம் வரும் வரை அவர்கள் பகவானை நினைக்க மாட்டார்கள். துயரம் வரும்போது பகவானிடம் சென்று கதறுவார்கள். எனவே, அவர்களுடைய நோக்கம் தங்களுடைய துயரை தீர்த்துக் கொள்வது மட்டுமே. ஆனால், பகவானுடைய நோக்கம் மண்ணுலகத்தோர் உய்வடைய வேண்டும் என்பது. ஒரு அழகான நம்மாழ்வார் பாசுரம் உண்டு;

`வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர்எமர் எமதுஇடம் புகுதஎன்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே’.

‘‘வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே’’. என்பது அந்த பாசுரத்தின் கடைசி வரி. இதற்கு என்ன பொருள்? வெவ்வேறு உலகங்களில் இருந்தாலும்கூட அவர்களால் வைகுந்தம் போக முடியாது. பூமியில் செய்கின்ற பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்றவாறு சொர்க்கமோ நரகமோ அமைகிறது. அந்த பலன் தீர்ந்தவுடன் அவர்கள் மறுபடியும் இந்த உலகத்தில்தான் பிறக்க வேண்டும். இதை இன்னும் நன்றாக விளங்கிக் கொள்ள இரண்டு குறட்பாக்களைப் பார்க்கலாம்.

முதல் திருக்குறள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்

இந்த உலகத்தில் நல்ல புண்ணிய பலன்களைச் செய்து அடுத்தவர்களுக்கு உபகாரமாக வாழ்பவர்கள், தங்களுடைய வாழ்க்கையின் புண்ணிய பலனுக்கு ஏற்ப அமரர் உலகில் ஏதேனும் ஒரு பதவியை அடைவார்கள்.

அதற்கான கர்ம பூமி இந்த மண்தான். இந்த சிறப்பு வேறு எங்கும் கிடையாது. வசிஷ்டர் இங்கேதான் தவம் செய்தார். விஸ்வாமித்திரர் இங்கேதான் காயத்ரி மந்திரத்தை இயற்றினார். இங்கே யாகம் செய்துதான் திரிசங்குவை சொர்க்கத்துக்கு அனுப்ப முயன்றார். பக்த துருவன் இங்கிருந்துதான் பகவான் விஷ்ணுவின் அபிமானம் பெற்று நட்சத்திர பதவியை அடைந்தான். இந்த மண்ணில் பிறந்து நல்லபடியாக வாழ்வதன் மூலமாக அமரர் பதவியையும், சுவர்க்க உலகத்தையும் அடைய முடியும். ஆனால், அந்த பலன்களை அனுபவித்து தீர்த்தவுடன் மறுபடியும் இந்த உலகத்தில்தான் பிறக்க வேண்டி இருக்கும்.

அப்படியானால் நிலை பெற்ற பலனாகிய பிறவிப்பிணி நீங்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? அதை மற்றொரு குறளில் வள்ளுவனார்
சொல்லுகின்றார்.

யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

முதல் குறளிலே “வான் உலகம்” என்று சொன்னவர், இரண்டாவது குறளிலே “வானோர்க்கு உயர்ந்த உலகம்” என்று சொன்னார். அப்படியானால், வானுலகத்தில் உள்ள தேவர்களாலும் எட்ட முடியாத உலகம் என்று ஆகிறது. வான் உலகுக்கும் அப்பால் உள்ள நிலை பெற்ற உலகம் வைகுண்டம். “உய்தல்” என்பது இந்த பேரின்ப பெருநிலையை அடைவதுதான்.

இதை முக்தி (மோட்சம்) என்பார்கள். தேவர்களுக்கு முக்தி நிலை கிடையாது. ஆனால், மண்ணுலகத்தில் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்புண்டு. ‘‘மண்ணுலகத்தோர் உய்ய’’ ராம அவதாரம் நிகழ்ந்தது என்பதை பாசுரப்படி ராமாயணத்தில் ஆழ்வார்கள் காட்டினர்.

இந்த மண்ணுலகத்தில் ஒரு மரமாக பிறந்தாலும், ஒரு மிருகமாக பிறந்தாலும், மனிதனாக பிறந்தாலும் முக்தி பெறுவதற்கான வாய்ப்புண்டு என்கிறார் திருமங்கை ஆழ்வார். ஆனால், அந்த மனித பிறவியின் சிறப்பை நாம் அலட்சியமாக நினைக்கிறோம், மதிப்பதில்லை என்கிறார்.

`வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசவம் ஈன்ற,
தேனிடைக் கரும்பின் சாற்றை திருவினை மருவி வாழார்,
மானிடப் பிறவி அந்தோ! மதிக்கிலர் கொள்க, தம்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே’

– என்பது அவருடைய பாசுரம்.

மனிதனாக பிறந்தும் தனக்கு ஒரு ஆன்மா இருப்பதைப் புரிந்து கொள்ளாமல், அழிந்து போகின்ற உடல் வாழ்க்கைதான் உயர்ந்த வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு, தன்னுடைய வாழ்நாளை கழித்து விடுகின்றாரே; தன்னுடைய உள்ளத்தையோ உள்ளத்தில் உறைகின்ற இறைவனையோ நினைக்கவில்லையே. மண்ணுலகத்தோர்தான் வைகுண்டம் புக முடியும் என்கின்ற வாய்ப்பு இருந்தும், மனிதப் பிறவியின் பெருமையை அறியாமல் வீணாகக் காலம் கழிக்கின்றாரே, என்று திருமங்கையாழ்வார் மனம் வருந்துகின்றார். தேவாரத்திலும்மனிதப் பிறவியின் உயர்வு பற்றிப் போற்றப்படுகிறது.

‘‘மனித்த பிறவியும் வேண்டுவதே’’ என்று தேவாரத்தில் வருகிறது. இந்த மனிதர்களை எப்படியாவது உய்வு பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே பகவான் பல்வேறு அவதாரங்களை மண்ணில் எடுத்தான்.

ராமாவதாரம் முடிந்து தன்னுடைய வைகுண்ட வான் நகருக்கு பகவான் திரும்பும்போது, தன்னுடன் இருந்த சர அசரங்களை அதாவது ஜடப்பொருள்களையும் உயிர்ப் பொருள்களையும் நல்ல கதிக்கு அனுப்பி வைத்தான் என்பது ஆழ்வார்கள் பாசுரம்.

அதனால்தான் ராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுகின்றார்கள்.

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலா புல்எறும்பு ஆதி ஒன்றுஇன்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார்பெற்ற நாட்டுளே?
– என்ற பாசுரத்தை மறக்க முடியுமா?

தொகுப்பு: தேஜஸ்வி

The post பகவான் நாமத்தை எப்போது சொல்ல வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Rama ,earth ,
× RELATED திருநெல்வேலி, உலகம்மை உடனுறை பாபநாச நாதர்