×

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு மாஜி ஐஜி உள்பட 8 அதிகாரிகள் சிபிஐ கோர்ட்டில் ஆஜராக உத்தரவு:21ம் தேதி சாட்சி விசாரணை துவக்கம்

கோவை: பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் ஐஜி உள்ளிட்ட 8 உயர் அதிகாரிகள் சிபிஐ கோர்ட்டில் ஆஜராகி சாட்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி போரக்ஸ் டிரேடிங் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் ரூ.930 கோடி மோசடி செய்ததாக இயக்குனர்களாக இருந்த மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக அப்போது விசாரித்த போலீசார், பெண் இயக்குனர் கமலவள்ளியை கடத்தி சென்று ரூ.3 கோடியை பறித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் போலீஸ் உயர் அதிகாரியை சந்தித்து வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து அப்போதைய மேற்கு மண்டல போலீஸ் ஐஜி பிரமோத்குமார், டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் சண்முகையா, ஜான்பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள சிபிஐ கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஜி பிரமோத்குமார், துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், ஜான்பிரபாகர் ஆகியோர் ஆஜராகவில்லை. இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மட்டும் ஆஜரானார்கள். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார்.

மேலும், அன்றைய தினமே சாட்சி விசாரணை துவங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கு தொடர்பாக உயர் அதிகாரிகள் உள்பட 8 பேர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, அப்போதைய மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்த ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது மத்திய அரசில் செயலாளராக பணியாற்றி வரும் நடராஜன் வரும் 21ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சி அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

தற்போது ஓய்வு பெற்ற ஐஜியும், அந்த நேரத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றியவருமான டிபி. சுந்தரமூர்த்தி வரும் 28ம் தேதியும், பிறழ் சாட்சியாக மாறிய சண்முகையா ஜனவரி 4, 11 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும், கமலவள்ளியின் கார் டிரைவர் கருணாகரன் அடுத்த மாதம் 25ம் தேதியும், பாசி நிறுவன கணக்காளர் மணிகண்டன் பிப்ரவரி மாதம் 1ம் தேதியும் சாட்சி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது கோவை சரக டிஐஜியாகவும், தற்போது பொருளாதார குற்றப்பிரிவில் கூடுதல் டிஜிபியாக உள்ள பாலநாகதேவி பிப்ரவரி மாதம் 7ம் தேதியும், அப்போதைய திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், தற்போது தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் அருண் பிப்ரவரி மாதம் 15ம் தேதியும், அப்போதைய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், தற்போது வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றி வரும் கண்ணன் பிப்ரவரி மாதம் 22ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சி அளிக்க நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டு உள்ளார்.

The post பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு மாஜி ஐஜி உள்பட 8 அதிகாரிகள் சிபிஐ கோர்ட்டில் ஆஜராக உத்தரவு:21ம் தேதி சாட்சி விசாரணை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : IG ,Bashi ,CBI ,Coimbatore ,CBI court ,Basi financial ,
× RELATED கிராமத்தில் வசிப்பவர்களைத் தங்கள்...