×

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் அரசின் இலக்கை விட கூடுதலாக கொடிநாள் வசூல்

புதுக்கோட்டை, டிச.8: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசின் இலக்கை விட கூடுதலாக கொடிநாள் வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொடி நாள் வசூலினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, துவக்கி வைத்து, படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் 2021-ல் அதிக அளவில் நிதிவசூல் புரிந்த அலுவலர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது; முப்படைகளிலும் பணிபுரியும் நமது தாயகத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாளன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படும் டிசம்பர் 7ம்தேதி அன்று கொடிநாள் நிதி வசூல் துவக்கப்பட்டு அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்த இலக்கு தொகை அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடும் எய்தப்பட்டு வருகிறது.

படைவீரர் கொடிநாள் நிதியாக வசூலிக்கப்படும் தொகையிலிருந்து முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோரது நலனுக்கென மைய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 7.12.2022 அன்று துவக்கிய படைவீரர் கொடிநாள் 2022-க்கான இலக்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரசு ரூ.1,43,60,000 நிர்ணயித்தது. மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலர்களின் முனைப்பான செயல்பாடுகள் காரணமாக அரசின் இலக்கை விட கூடுதலாக அதாவது 108.83 சதவீத அளவிற்கு ரூ.1,56,28,500 வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 முன்னாள் படைவீரர்களும் 315 விதவையர்களும் உள்ளனர். எனவே அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகமாக நிதி வழங்கி முன்னாள் படைவீரர்கள் நலனுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, கலெக்டர், படைவீரர் கொடிநாள் 2023 தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 9 பயனாளிகளுக்கு ரூ.2,85,000 மதிப்பிலான திருமண நிதியுதவி, கல்வி உதவித்தொகைகளையும் மற்றும் 2021 -ல் அதிக அளவில் நிதி வசூல் புரிந்த அலுவலர்களுக்கு, மேதகு ஆளுநரின் தலைமைச் செயலாளரின் பதக்கம் மற்றும் சான்றிதழினையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) விஜயகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் அரசின் இலக்கை விட கூடுதலாக கொடிநாள் வசூல் appeared first on Dinakaran.

Tags : Flag Day ,Pudukottai district ,Pudukottai ,
× RELATED ஆலங்குடி அருகே குடிநீர் வழங்க கோரி...