×

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 205 எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள்: ₹296கோடி சொத்துடன் முதலிடத்தில் பாஜ எம்எல்ஏ

போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 205 எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 230 எம்எல்ஏக்களில் 205 எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 144எம்எல்ஏக்கள் பாஜவை சேர்ந்தவர்கள். 61எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

ரட்லாம் நகரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ எம்எல்ஏ சைதன்ய காஷ்யாப் முதலிடத்தில் இருக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.296கோடியாகும். இவருக்கு அடுத்தபடியாக பாஜவை சேர்ந்த சஞ்சய் சத்யேந்திர பதக் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.242கோடியாகும். இதேபோல் காங்கிரஸ் மாநில தலைவரான கமல்நாத்தும் ரூ.134கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வர எம்எல்ஏக்களில் ஒருவராக உள்ளார். எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.11.77கோடியாகும்.

குறைந்தபட்சமாக பாரத் ஆதிவாசி கட்சியின் எம்எல்ஏ கம்லேஷ் தோடியாரின் சொத்து மதிப்பு ரூ.18லட்சமாகும்.

90 எம்எல்ஏ மீது கிரிமினல் வழக்கு
மத்தியப்பிரதேச மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் 90 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 34 பேர் கடுமையான குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை கிடைக்கக்கூடும். 163 பாஜ எம்எல்ஏக்களில் 51 பேர் மீது குற்ற வழக்கு பதிவாகி உள்ளது. இவர்களில் 16 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சியில் 38 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கும் 17 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களும் பதிவாகி இருக்கிறது.

The post மத்தியப்பிரதேச மாநிலத்தில் 205 எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள்: ₹296கோடி சொத்துடன் முதலிடத்தில் பாஜ எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : Pradesh ,BJP ,Bhopal ,Madhya Pradesh ,BJP MLA ,Dinakaran ,
× RELATED பா.ஜ பக்கம் போகல…எங்கள் தலைவர் ராகுல்:...