×

தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல் நிவாரணம்; கேட்டது ₹5,060 கோடி, கிடைத்தது வெறும் ₹450 கோடி: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மிக்ஜாம் புயலால் மிகவும் பாதித்த தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வெறும் ₹450 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. அதே நேரம், ஆந்திர மாநிலத்துக்கு ₹493.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை குறிப்பாக சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நான்கு மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் கார்கள், பைக்குகள் வெள்ள நீரில் மூழ்கின.

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.பல இடங்களில், சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில், புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க இடைக்கால நிவாரணமாக உடனடியாக ₹5,060 கோடி வழங்கிட கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். மேலும் ஒன்றிய ஆய்வு குழுவை அனுப்பும்படியும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநில பேரிடர் மீட்பு நிவாரணத்தின் இரண்டாவது தவணையாக ஆந்திர மாநிலத்திற்கு ₹493.60 கோடி, தமிழ்நாட்டிற்கு ₹450 கோடி வழங்க பிரதமர் உத்தரவிட்டிருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில்,‘‘தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் சென்னை நகரம் மூன்றாவது மிகப்பெரிய வெள்ள பாதிப்பை கண்டுள்ளது. சமீப நாட்களாக பெருநகரங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. எனவே இதனை சமாளிக்கும் விதமாக பிரதமர் மோடி, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் நகர்ப்புற வெள்ள பாதிப்பு தீர்வு திட்டத்திற்காக தனியாக நிதி வழங்க திட்டமிட்டு முடிவெடுத்து இருந்தார். அதன் அடிப்படையில் சென்னைக்கு முதல் முறையாக ₹561.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் சென்னை வெள்ளத்தை எதிர்கொள்ளவும், வெள்ள மேலாண்மைக்கு விரிவான ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் இந்த நிதி உதவியாக இருக்கும். மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் எதிர்கொள்வதற்காக ஒன்றிய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் மாநில பேரிடர் மீட்பு நிவாரணத்தின் இரண்டாவது தவணையாக ஆந்திர மாநிலத்திற்கு ₹493.60 கோடி, தமிழ்நாட்டிற்கு ₹450 கோடி வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். நிலைமை விரைவில் சீரடைவதை உறுதி செய்வோம்,’’ என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ₹5,060 கோடி கேட்ட நிலையில், ஒன்றிய அரசு வெறும் ₹450 கோடியை மட்டும் கொடுத்து கைவிரித்திருப்பது வெள்ளத்தால் பாதித்த மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் பிரதமரிடம் நேரில் ஒப்படைப்பு
மிக்ஜாம் வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாட்டுக்கு ரூ.5,060 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதமர் அலுவலகத்தில், நரேந்திர மோடியை சந்தித்த திமுக எம்பி டி.ஆர். பாலு,‘‘நிவாரண நிதி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தின் நகலை அவரிடம் நேரில் வழங்கினார். அப்போது ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாட்டுக்கு சென்றுள்ளார். அவர் ஆய்வு செய்து வந்த பின்னர் பாதிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு இயல்புநிலைக்கு திரும்பும் வரையில் மிகவும் உறுதுணையாக இருப்பேன்’’ என பிரதமர் கூறியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டம் ₹561 கோடி நிதி ஒதுக்கீடு
நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கான முதல் நிதியாக, ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக சென்னை வடிநில திட்டத்துக்கு ஒன்றிய அரசு ₹561 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல் நிவாரணம்; கேட்டது ₹5,060 கோடி, கிடைத்தது வெறும் ₹450 கோடி: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,NEW DELHI ,Union government ,Tamil Nadu ,Mijam ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்குகளை தீர்த்து வைப்பதில் தமிழ்நாடு சூப்பர்: ஒன்றிய அரசு தகவல்