×

ராஜஸ்தானில் கொலையான கர்னி சேனா தலைவர் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி: போலீஸ் குவிப்பால் தொடர் பதற்றம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கொலையான கர்னி சேனா தலைவரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்ததும் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெய்ப்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு நீண்ட வரிசையில் நின்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி. இவருக்கு  ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங்குடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த அமைப்பில் இருந்து பிரிந்து 2015ம் ஆண்டு ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு, 2018ம் ஆண்டு வெளியான பத்மாவதி திரைப்படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தியது.

இந்த சூழலில், சுக்தேவ் சிங் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, திடீரென 3 மர்ம நபர்கள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுக்தேவ் சிங் கோகமெடியும், அவருடன் இருந்த நவீன் சிங் ஷெகாவத் என்பவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். முன்னதாக சுக்தேவ் சிங் கோகமெடியின் பாதுகாவலர்கள் சுட்டதில், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் தப்பி சென்றனர். இதனிடையே ராஜபுத்திர இளைஞர் அமைப்பினர் தலைவர் வீடு புகுந்து சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் ராஜபுத்திர சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலையை கண்டித்து மாநிலத்தின் ஜெய்ப்பூர், கோடா, பண்டி, அஜ்மீர், சவாய், மோதபூர், சிதோர்கர், ஜலாவர், பாரன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் முழுவதும் ராஷ்டிரிய ராஜபுத்திர கர்னி சேனா உள்பட பல்வேறு ராஜபுத்திர அமைப்புகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதனால் ராஜஸ்தான் முழுவதும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலையில் தொடர்புடைய 2 பேரில் ஒருவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்தார். இதனிடையே சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலைக்கு ராஜஸ்தானை சேர்ந்த பிரபல ரவுடி ரோஹித் கோதாரா என்பவர் பொறுப்பேற்றுள்ளார். தன்னுடைய எதிரிகளை ஆதரித்ததற்காக சுக்தேவ் சிங் கோகமெடியை கொலை செய்ததாக ரோஹித் கோதாரா பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் கர்னி சேனாவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடியின் உடல் இன்று வாகனம் மூலம் ஜெய்ப்பூரில் உள்ள  பவானி நிகேதன் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மக்கள் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் உள்ள ராஜ்புத் சபா பவனுக்கு கொண்டு உடல் வரப்பட்டு பின்னர் இறுதி சடங்கு நடைபெறும் என தெரிகிறது.

The post ராஜஸ்தானில் கொலையான கர்னி சேனா தலைவர் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி: போலீஸ் குவிப்பால் தொடர் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Karni Sena ,Rajasthan ,Jaipur ,
× RELATED பலாத்கார வழக்கில் தலைமறைவான நிலையில்...