×

வைராவிச் சேவை

தென்மாவட்டங்களில், ஆலயங்களுக்கும் ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கும் பாதுகாவலாகவும், வேண்டுமானால் தனது உயிரையும் கொடுக்கச் சபதம் பூண்ட பலர் இருந்தனர். இவர்களுக்கு வைராவிகள் என்பது பெயர். இப்படி வைராவிச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் பைரவ மூர்த்தியின் அம்சமாகவே போற்றப்பட்டனர். இவர்கள் பணியின் போது உயிர் துறந்தால், இவர்களுக்குத் தனி ஆலயம் அமைத்து “வைராகிப் பெருமாள்’’, “வைராவிக் கோன்’’ எனப் பெயரிட்டு வழிபட்டனர். இவர்களுடைய வம்சா வளியினருக்கு “உதிரப்பட்டி’’ என்ற பெயரில் நிலதானமும் செய்தனர்.

வைராவிச் சேவை செய்தவர்கள் நீண்ட கத்தியையும், அதில் நீண்ட சங்கிலியால் பிணிக்கப்பட்ட மணியையும் ஏந்தி அதை சுவாமி ஊர்வலத்திற்கு முன்பாக ஒலித்துக் கொண்டே சென்றனர். திருவிடைமருதூர், கீழ் வேளூர், திருப்பத்தூர் முதலிய அநேக தலங்களில் வைராவிகள் சேவை செய்துள்ளனர்.

“கொங்குமண்டல சதகம்’’ என்ற நூல் கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட பல சிவாலயங்களுக்கு வைராவிச் சேவர்கள் நியமிக்கப்பட்டதைக் தனிச்சிறப்புடன் குறிப்பிடுகிறது.

திருப்பரங்குன்றத்தில் வைராவியாகயிருந்த குட்டியாப்பிள்ளை என்பவர், ஐரோப்பியர் படையெடுப்பிலிருந்து முருகன் ஆலயத்தைக் காக்க கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்நீத்தார். இந்தச் செய்தி, இக்கோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இவருடைய வம்சத்தாருக்கு உதிரபட்டியாக நிலமளித்ததையும் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

தென்னிந்தியாவிலுள்ள அனேக ஆலயங்களில் வைராவிச் சேவை செய்து தெய்வநிலை பெற்றவர்களின் திருவுருவங்கள் உள்ளன. பஞ்ச பைரவத்தலமான, “ராமகிரி பைரவர்’’ ஆலயத்தில் வாயிலின் இருபுறமும் இரண்டு வைராவிகளின் திருவுருவச் சிலைகள் நிலைப்படுத்தி வணங்கப்படுகின்றன.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post வைராவிச் சேவை appeared first on Dinakaran.

Tags : Wairavich Service ,Southern Districts ,Vairavich Seva ,
× RELATED தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்