×

மிக்ஜாம் புயல் பாதிப்பு.. தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு.. சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு ரூ.561.29 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் அமித்ஷா

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.450 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகள் இன்னும் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.மீட்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவுபடுத்தி வருகிறார். ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவில், “மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.450 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒன்றிய அரசின் இரண்டாவது தவணை பங்களிப்பை முன்கூட்டியே விடுவிக்கும் படி உள்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இரண்டாவது தவணைத் தொகையாக ஆந்திராவுக்கு ரூ.493 கோடியும், தமிழகத்துக்கு ரூ.450 கோடியும் விடுவிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு இரு மாநிலங்களுக்கான இதே அளவிலான முதல்தவணைத் தொகையை ஏற்கனவே விடுவித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் இறைவனை வேண்டுகிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேபோல் சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்துக்காக ரூ.561.29 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த எட்டு ஆண்டுகளில் மூன்றாவது மிகப்பெரிய வெள்ள பாதிப்பைச் சென்னை எதிர்கொள்கிறது. தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ், முதல் நகர்ப்புற வெள்ளத்தணிப்பு திட்டத்துக்காக ரூ.561.29 கோடியை, சென்னை பேசின் திட்டத்துக்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற மேலாண்மை நடவடிக்கைக்காக ஒதுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த வெள்ளத்தணிப்பு திட்டம் சென்னையை வெள்ளத்தைத் தாங்கக்கூடியதாக மாற்ற உதவும். ” என்று தெரிவித்துள்ளார்.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு.. தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு.. சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு ரூ.561.29 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் அமித்ஷா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Amitsha ,Chennai ,EU government ,
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல்...